முதுமொழிக் காஞ்சி 56
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
(உரைஇலன் ஆதலின் சாக்கா(டு) இல்லை)
உணர்வில னாதலிற் சாக்கா டில்லை. 6
- இல்லைப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், ஒருவற்கு அறிவின்மையோடு ஒக்கும் சாக்காடில்லை.
பதவுரை:
உணர்விலன் ஆதலின் - அறிவிலான் ஆதல் போல, சாக்காடு - மரணம், இல்லை – ஒருவனுக்கு வேறில்லை.
அறிவில்லாதவன் செத்த பிணத்தை ஒப்பான்.
'உரையில னாதலின்' என்ற பாடத்துக்குப் புகழில்லாதவனாய் இருத்தலைக் காட்டிலும் என்பது பொருள்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார். இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240 புகழ்
தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.