தமிழகத்தில் கிராமங்களின் அமைப்பு -----கோட்டூர் கோட்டூர்புரம் - சென்னை-------கிராம தேவதை--பொன்னியம்மன்

கிராம எண் 120/1 - ஜமீன் அடையார் கிராமம்,

மாம்பலம் - கிண்டி தாலுக்கா, சென்னை மாவட்டம்.




சென்னை மாநகராட்சி, வார்டு எண் 138, ஜீ.டி. நாயுடு நகர் (கிழக்கு).




கோட்டூர் / கோட்டூர்புரம் - சென்னை 600085.


முன்னுரை:

கோட்டூர்புரம் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் புதியதாக வந்து குடியேறியவர்களுக்கும், நாடு விடுதலை அடைந்த பிறகு இவ்வூரில் பிறந்தவர்களுக்கும் இப்பகுதி எவ்வாறு இருந்தது வளர்ந்தது என்ற வரலாற்றினை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு சிறு முயற்சி தான் இந்தக்கட்டுரை.




தமிழகத்தில் கிராமங்களின் அமைப்பு :

நில சுவன்தார்கள் (உரிமையாளர்கள்) வசிக்கும் மையப்பகுதி கிராமம் என்று அழைக்கப்படுகிறது. விவசாய நிலங்களை ஒட்டி பயிர் தொழில் செய்யும் ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதி அக்காலத்தில் சேரி என்றழைக்கப்பட்டு வந்ததது. இக்காலத்தில் காலனி என்று அழைக்கப்படுகிறது. ஏரிக்கரையை ஒட்டியோ அல்லது ஆற்றங்கரையை ஒட்டியோ சலவை தொழில் செய்யும் வண்ணார் சமுகத்தினர் வசிப்பார்கள். கடற்கரை ஓரத்திலுள்ள கிராமங்களில் மீனவர் வாழும் பகுதி குப்பம் என்றழைக்கப்படும்.




கிராம நிர்வாகம்:

கிராம நிர்வாகம் பஞ்சாயத்தினரால் நடத்தப்படும். பஞ்சாயத்து என்பது (1) கிராம முன்சீப், (2) கிராம கணக்குப் பிள்ளை, (3) கிராம பூசாரி, (4) தலையாரி மற்றும் (5) வெட்டியான், ஆகியோர் அடங்கிய 5 பேர் குழு. பெரு வாரியான இனத்தை சேர்ந்தவர் கிராம முன்சீப்பாகவும், கருணிகர் இனத்தை சேர்ந்தவர் கிராம கணக்குப் பிள்ளையாகவும் இருப்பார்கள்.




கிராம தேவதை:

பொதுவாக கிராமங்களில் கழுத்தளவுள்ள சிலை வைத்து கோவில் கட்டி கிராம தேவதையாக வணங்கி வருகிறர்கள். கழுத்தளவுள்ள சிலை மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறது. மாரியம்மன் என்பது ரிஷி பத்தினி ரேணுகா தேவியின் தலை பகுதியாகும். உடல் பகுதி சலவை தொழிலாளியின் மனைவியினுடையது. (விளக்கமான கதையினை இணையதளத்தில் காண்க.)

ஆண்டு திருவிழா:

கிராம தேவதைக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். திருவிழா நடத்த திருவிழாக்குழு (பொதுவாக பஞ்சாயத்தினர்) ஏற்பாடு செய்வார்கள்.

கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொறு குடும்பமும் எவ்வளவு பொருளுதவி செய்ய வேண்டும் என திருவிழாக்குழு தீர்மானித்து கட்டளை (ஊர் கட்டளை) விதிக்கும். ஊர்மக்கள் அக்கட்டளையை ஏற்று விதிக்கப்பட்ட தொகையினை செலுத்தி திருவிழாவில் பங்கு கொள்வார்கள். கட்டளை செலுத்தாதவர்களுக்கு கோவிலில் பொங்கல் வைக்கவோ, சுவாமி ஊர்வலத்தில் தேங்காய் உடைத்து கற்பூர திபாரதனை செய்யவோ அனுமதி கிடையாது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:

வெள்ளிக்கிழமைக் காலை அம்மனிடம் உத்தரவு பெற்று காப்பு கட்டுதல். வெள்ளிக்கிழமை மாலையிலும், சனிக்கிழமை காலையிலும், மாலையிலும், மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், சலவை தொழிலாளி ஒருவர் அம்மன் கரகத்தினை (குடம்) தலையில் சுமந்து ஊர்வலமாக வருதல். அம்மன் கரகத்திற்கு ஊர் கட்டளை செலுத்திய மக்கள் வெள்ளிக்கிழமை பச்சரி மாவுடன் வெல்லம் கலந்து வேப்பிலை தூவி பூசை செய்வார்கள். சனிக்கிழமை காலை நெல் பொரி மீது சிறிது வெல்லம் மற்றும் வேப்பிலை தூவி பூசை செய்வார்கள். சனிக்கிழமை மாலை முழு கடலை சுண்டல் செய்து வேப்பிலை தூவி பூசை செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளை சாதம் செய்து வேப்பிலை தூவி பூசை செய்வார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் கோவிலில் கூழ் வார்தல். மாலையில் தீச்சட்டி ஏந்துதல், சந்தனக்கூடு ஏந்துதல், வேப்பஞ் சேலை கட்டி கோவிலை வலம் வருதல், சில ஊர்களில் தீ மிதித்தல், இரவு சுவாமி ஊர்வலம் வருதல், ஊர்வலத்திற்கு முன் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பெய்க்கால்குதிரை போன்ற கிராமீய நடன நிகழ்ச்சிகள் நடைபெறுதல், மற்றும் இரவு முழுவதும் தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும்.

திங்கட்கிழமை அம்மனுக்கு விடாயாற்றி காப்பு களைதல் நடைபெறும்.

திருவிழாக் காலத்தில் ஊர் கட்டுப்பாடு:

அம்மனுக்கு வெள்ளிக்கிழமை காப்பு கட்டிய பிறகு ஊர் மக்கள் கிராம எல்லையை தாண்டி இரவில் தங்கக்கூடாது. கணவன் மனைவி ஒன்றகப் படுக்கக்கூடாது. முடிவெட்டக் கூடாது. முகச்சவரம் செய்யக் கூடாது. எண்ணை தேய்த்து தலை குளிக்கக்கூடாது. உறவினர் எவரேனும் வந்து வெள்ளிக்கிழமை இரவு தங்கி விட்டால் அவர்களும் திங்கட்கிழமை அம்மனுக்கு விடாயாற்றி காப்பு களைதல் வரை ஊரை விட்டு செல்ல அனுமதி இல்லை. திங்கட்கிழமை மாலையில் தான் உறவினர் தங்கள் ஊருக்கு திரும்பிச் செல்லலாம். (இந்தக் கட்டுப்பாடு எதற்கு என்ற விளக்கத்தினை இணையதளத்தில் காண்க.)

அடையார் கிராமம்.

கிராம எண் 120/1 ஜமீன் அடையார் கிராமத்தில் (தற்பொழுது கோட்டூர் - கோட்டூர்புரம். அதாவது 138வது வார்டின் ஒரு பகுதி. விரிவான விவரங்களுக்கு இணையதளத்தை பாருங்கள்). ஆற்காட்டு நவாப் அவர்களால் நியமிக்கப்பட்ட ஜமீன்தாரின் நேரடிப் பார்வையில் வரி வசூலிக்கப்பட்டு ரொக்கப் பட்டா நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் சைதாப்பேட்டை முனிசிபாலிடியின் ஒரு பகுதியாக இருந்த ஜமீன் அடையார் கிராமம் 1946களில் சென்னை கார்போரே ஷன் விஸ்தரிப்பின் போது சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அக்காலத்தில் யாதவ இனத்தவரும் , கருணிகர் இனத்தவரும், சலவை தொழில் செய்யும் இனத்தவரும், உப்பரவ இனத்தவரும், சில நாவிதர் குடும்பத்தினரும் மற்றும் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களும் தமக்கென்று இடம் அமைத்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். (வரைபடத்தினை காண்க).

பெரு வாரியான இனத்தை சேர்ந்த யாதவர் கிராம முன்சீப்பாகவும், கருணிகர் இனத்தை சேர்ந்தவர் கிராம கணக்குப் பிள்ளையாகவும் இருந்தனர்.

ஒவ்வொரு இனத்தவரும் தமக்கென்று ஒரு வழிபாட்டு தலத்தினை அமைத்துக் கொண்டனர். கிராமத்தில் யாதவர் வேணுகோபால சுவாமி படத்தை வைத்து பஜனை கோவிலை கட்டிக் கொண்டனர். உப்பரபாளையத்தில் உப்பரவர் ராதா - ருக்மிணி சமேத கிருஷ்ணன் சுவாமி படத்தை வைத்து பஜனை கோவிலை கட்டிக் கொண்டனர். வராதாபுரத்தில் ஆதி திராவிடர் அம்மன் சிலை வைத்து கோவிலை கட்டிக் கொண்டனர். சலவை தொழிலாளிகள் கழுத்தளவுள்ள மாரியம்மன் சிலையினை வைத்து (துலுக்கானத்தம்மன்) கோவிலை கட்டிக்கொண்டனர்.

இவ்வாறு ஒவ்வோரு சமுகத்தினரும் தங்கள் தங்கள் பகுதியில் கோவில் அமைத்து கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடும், பக்தியோடும், கடவுளுக்கு பயந்தும் எந்த ஒரு தீய எண்ணமும் இன்றி, தீய செயல்களில் ஈடு படாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்.

கிராமங்களின் வழக்கப்படி ஆண்டுக்கு ஒருமுறை நமது அடையார் கிராமத்திலும் ஆடி மாதத்தில் கிராம தேவதை துலுக்கானத்தம்மனுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. கிராமங்களின் வழக்கப்படி கிராம முன்சீப், கிராம கணக்குப் பிள்ளை, சலவை தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் அடங்கிய குழு திருவிழாவை நடத்தி வந்தது. இக்கிராமம் சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட பிறகும் மேற்படி குழு திருவிழாவினை நடத்தி வந்தது. காலப் போக்கில் மேற்படி வழக்கம் கைவிடப்பட்டு தற்பொழுது இளைஞர் குழு திருவிழாவினை சிறப்பாக நடத்தி வருகிறது.

துலுக்கானத்தம்மனுக்கு விழா எடுப்பது போலவே வரதாபுரி அம்மனுக்கும் அவ்வூர் மக்கள் தனியாக விழா எடுத்து வருகின்றனர்.

தற்பொழுது புதியதாக உருவான கோட்டூர்புரம், சூரியாநகர், அண்ணா பல்கலை கழக குடிஇருப்பு போன்ற இடங்களில் குடியேறியவர்கள் தங்கள் சொந்த ஊரின் வழக்கபடி புதியதாக குடியேறிய இடத்திலும் அவரவர் தெய்வங்களுக்கு கோவில் அமைத்து விழா எடுத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்த கிராமம் நகரத்துடன் இணைக்கப்பட்டு விட்டதாலும் ஊருக்கு பல தரப்பட்டவர் வந்து கூடியேறி விட்டதாலும் மேற்படி திருவிழாக் கால ஊர் கட்டுப்பாடு மற்றும் இதர பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப் படுவதில்லை.

பொன்னியம்மன் கோவிலின் சிறப்பு:

பல ஆண்டுகளுக்கு முன் இக்கிராமம் காடுகளால் சூழப்பட்டு இருந்தது. கிழக்கில் காட்டூர் (கோட்டூர் கிராமம் ), தெற்கில் காட்டூர் ஏரி அதற்க்கப்பால் கிண்டி வனப்பகுதி, மேற்கிலும், வடக்கிலும் அடையார் ஆறு. அடையார் ஆறு கிராமத்தை ஒட்டி மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்தது. அடிக்கடி வெள்ளத்தால் கிராமம் பாதிக்கப்பட்டு வந்தது. எனவே ஊர் பொதுமக்கள் கூடி ஆற்றங்கரையில் கோவில் கட்ட முடிவு செய்தார்கள். காவல் தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட முழு உருவ பொன்னியம்மன் சிலை கோரைப் பற்களுடன் வலது காலை தொங்க விட்டபடி இடது காலை மடித்து மேல் வலது கையில் பாசத்தையும் கீழ் வலது கையில் சூலாயுதத்தையும் மேல் இடது கையில் உடுக்கையையும் கீழ் இடது கையில் தீச்சட்டியையும் ஏந்தி மக்களை காட்டு மிருகங்களிடமிருந்து காப்பற்றுவதோடு ஆற்றின் வெள்ளம் கிராமத்தை பாதிக்காத வகையில் காத்து வருகிறாள்.

இந்த கோவில் ஆற்காட்டு நவாப் காலத்தில் செங்கற்களை கொண்டு மண் காரையை பயன்படுத்தி சுவர்கள் எழுப்பி சுண்ணம்பு காரையைக் கொண்டு புச்சு வேலை செய்யப்பட்டது. கற்பக்கிரகத்தின் (கருவரையின்) கூரை முகலாயர் காலத்து கட்டிட அமைப்பினை கொண்டு அரை வட்ட வடிவில் அமைந்துள்ளது. இன்றும் கருவரையின் உள்ளே அரை வட்ட வடிவிலான கூரையினை காணலாம்.

இச்சிலையினை பிரதிஷ்டை செய்த பிறகு இன்று வரை இக்கிராமத்தினை வெள்ளம் பாதித்ததில்லை. (கோட்டடூர்புரம் வெள்ளம் பாதிக்கும் பகுதி உருவான கதையினை இணையதளத்தில் காண்க). கோவில் கட்டிய பிறகு ஆற்றின் பாதை கிராமத்தின் அருகிலிருந்து விலகி வடக்கு நோக்கி சென்றுவிட்டது. இதனால் உருவான நிலப்பகுதி தான் (கோவிலுக்கும் ஆற்றிற்கும் இடைப்பட்டப் பகுதி) நவாபிற்கு செந்தமான தோட்டமாக (நவாப் கார்டன் மா மரங்களும், கொய்யா மரங்களும் நிறைந்த பகுதியாக) இருந்தது. இப்பகுதியில் இரண்டு பாழடைந்த மாளிகைகள் இருந்தன.


திரு. சிதம்பரம் செட்டியார் அவர்கள் 1959-60 ல் இந்த பகுதியினை வாங்கி புதிய பங்களா கட்டி குடியேறினார். பிறகு வீட்டுவசதி வாரியம் குடியிருப்புகள் கட்டி கோட்டூர் கார்டன்ஸ் என பெயரிட்டது.

காவல் தேவதை பொன்னியம்மனுக்கு ஆடி மாதத் திருவிழா கிடையாது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் திருவிழா நடத்தப்பட்டு வந்ததாகவும் அது தடைபட்டதாகவும், மீண்டும் திருவிழா நடத்த அம்மன் இட்ட கட்டளையை நிறைவேற்ற முடியாமல் திருவிழா நடத்துவதையே நிறுத்தி விட்டார்கள் என்று பாட்டி கதை சொல்வார்கள். மேலும் ஊர் மக்கள் கோவிலை பராமரிக்காமலும் விட்டு விட்டார்கள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு நகல்லா. ராமசாமி நாயுடு மற்றும் முன்சீப் குடும்பத்தின் முத்த மகள் ஜானகி அம்மாள் அவர்களின் மகன் நகல்லா. ராஜமன்னார் (நாயுடு) யாதவ் 1937ஆம் ஆண்டு முதல் கோவிலை மீண்டும் பராமரிக்க தெடங்கினார். தெடர்ந்து ராஜமன்னார் குடும்பத்தினர் இன்றளவும் பராமரித்து வருகிறார்கள்.




தனக்கு தெரிந்த தகவல்களை கொண்டு தொகுத்தவர் :

நகல்லா.வெ.ரகுநாத், 61 வயது நிறம்பிய இந்த அடையார் கிராமத்தில்

பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற4வது தலைமுறையை சார்ந்தவர்

கை பேசி எண்: 9841134741

எழுதியவர் : (11-Apr-18, 5:25 pm)
பார்வை : 108

மேலே