தமிழா இதுதான் மானமா -தமிழரின் பண்பாட்டு மதிப்பீடுகள் பகுதி-2
புறநானூற்றுப் புலவர்களும் மான உணர்வும்:
சங்ககால மன்னர்களும் மக்களும் தம்வாழ்வு உயிர் இரண்டைக் காட்டிலும் மானமே பெரிதெனப் போற்றி வாழ்ந்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி அறிய முடிகின்றது. புறநானூற்றுக் கட்டுரையாளர்களும் திறனாய்வாளர்களும் பழந்தமிழர் வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், சங்ககாலப் புலவர்கள் பலர் தம்பாடல்களில் அவர்களது மானஉணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மானஉணர்வுக்கு மன்னர்களால் இழுக்கு நேர்ந்தபோது அவர்களைத் துச்சமாக எண்ணிச் சாடியுள்ளனர் என்றும் பல சான்றுகளைக் காட்டி எழுதி வருகின்றார்கள். இப்படி அவர்கள் காட்டும் சான்றுகளை மறுபரிசீலனைச் செய்து புலவர்கள் வெளிப்படுத்தியது மானஉணர்வு என்பது பொருத்தமானதுதானா? என்பதை முதலில் ஆய்வோம்.
1. பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கடியநெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபொழுது அவன் பரிசில்தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்காமல் பாடிய பாடல் வரிகள் அவரின் மானஉணர்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் வரிகள்,
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே.
... .... .... .... .... .... தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்களிறு
இன்று பெயரல பரிசிலர் கடும்பே. -புறம். 205.
இப்பாடலில் வரும் மூவேந்தராயினும் பேணாது, மதியாது தரும் பொருள் எமக்குத் தேவையில்லை என்று கூறும் புலவர் பாடலின் நிறைவுப் பகுதியில் தேர், யானைகளைப் பரிசிலாகப் பெறாமல் நாங்கள் பெயரமாட்டோம் என்கிறார். இது மானஉணர்வின் வெளிப்பாடா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
2. ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒருசமயம் காலம் தாழ்த்தியபோது அவர் கூறிய சொற்கள் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.ஒளவையாரின் பாடல் வரிகளைக் காண்போம்,
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்அறி யலன்கொல்
.... .... .... .... .... .... .... .... ....
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! -புறம். 206.
இப்பாடலில் அதியமான் என்தகுதியை அறியவில்லையா? அல்லது அவன் தகுதியை அறியவில்லையா? என்று கோபப்படும் ஒளவையார், இதோ உடனே புறப்படுகின்றேன் எங்கே சென்றாலும் எனக்குச் சோறு கிடைக்கும் என்கிறார்.
மேற்கூறிய ஒளவையின் சொற்களை திருவள்ளுவரின் மானம் பற்றிய இலக்கணங்களோடு பொருத்திப் பாருங்கள். அதுமட்டுமல்ல காலம் நீட்டித்ததற்காகக் கோபப்படும் இதே ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து பாடும் மற்றொரு பாடலில்,அதியமான், பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டாது ஆயினும், களிறுதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத்தது அது பொய்யா காதே! -புறம். 101. என்று பாடுகிறார்.
இப்பாடலில் அதியமான் பரிசில் தர எவ்வளவு காலம் நீட்டித்தாலும் யானைக் கொம்பிடையே வைத்த கவளம் போல உறுதியாகக் கிடைக்கும் என்கிறார். கோபப்பட்டதை மானஉணர்ச்சி என்றால், இதை என்னவென்று சொல்வது.
3. பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அதியமான் நெடுமானஞ்சி தம்மைக் காணாமலே தமக்குப் பரிசில் கொடுத்தனுப்பியபோது அவர் பாடிய பாடல் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.பெருஞ்சித்திரனாரின் பாடல் வரிகளைக் காண்போம்,
.... .... என்னையாங்கு அறிந்தனனோ
தாங்கரும் காவலன்காணாது ஈத்த இப்பொருட்கு
யான்ஓர்வாணிகப் பரிசிலன் அல்லேன்,
பேணித்திணை அனைத்து ஆயினும் இனிது
அவர்துணை அளவு அறிந்து நல்கினர் விடினே! -புறம். 208.
இப்பாடலில் என்னைப் பார்க்காமலே மன்னன் எப்படி என்தகுதியை அறிந்தான்? எப்படி என்னைப் பார்க்காமலே பரிசு கொடுத்தனுப்பலாம்? தினையளவு கொடுத்தாலும் என்னைப் பேணித் தருவதே சரி என்றெல்லாம் கோபப்படுகின்றார் பெருஞ்சித்திரனார்.
இதே புலவர் குமணனைப் புகழ்ந்து பாடும் போதும் மகிழ்ச்சியோடு நீ குன்றிமணியளவு கொடுத்தாலும் போதும் என்று கூறிவிட்டு, வேறொரு பாடலில் (புறம். 161.) நான் யானைமேல் ஏறிச் செம்மாந்து செல்ல விரும்புகிறேன் எனவே எனக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்காமல் என்தகுதியை நோக்காமல் நின்தகுதியை நோக்கி யானையைப் பரிசாகத் தரவேண்டுமென வேண்டுகிறார்.
அதியமானிடம் என்னைப் பார்க்காமலே என்தகுதியை எப்படி அறிந்தான் என்று மானஉணர்வுடன் கேட்கும் பெருஞ்சித்திரனார் குமண வள்ளலிடம் என்தகுதியைக் கணக்கிடாமல் எனக்கு யானையைப் பரிசாகத் தரவேண்டுமெனக் கேட்கிறார் என்றால் இதனை மானஉணர்ச்சியின் வெளிப்பாடாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும்?.
இதுபோன்றே பெருஞ்சித்திரனார் இளவெளிமானிடம் கோபப்படுவதையும் (புறம். 207) மதுரைக்குமரனார் சோழன் பெருந்திருமாவளவனிடம் கோபப்படுவதையும் (புறம். 197) மானஉணர்வின் வெளிப்பாடாகக் கொள்ள முடியுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.மேலே குறிப்பிட்ட புலவர்களின் பேச்சுக்களை எல்லாம் மானம் என்ற உயர்ந்த பண்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புலவர்களின் உணர்வு வெளிப்பாடு தன்னலம் சார்ந்ததாகவும் பிறர்மேல் சினம்கொண்டு கூறும் வசைமொழிகளாகவும் உள்ளனவே அன்றி தன்தவறு பற்றித் தன்நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியாக இல்லை.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள்.-967
என்ற குறளுக்கேற்பவோ,
என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார் -நாலடி 292
வற்றிமற்று ஆற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க -நாலடி 78
என்ற நாலடியார் கூற்றிற்கேற்பவோ வாழ்பவர்களே மானமுடையார் என்று சிறப்பித்துக் கூறும் பெருமைக்குரியவர்கள். தம்முடைய வறுமைநிலையைப் பலபடக்கூறிப் பரிசில் பெற விழைபவர்கள் இந்த வரையறைக்குப் பொருந்தமாட்டார்கள்.
இப்படிப் புலவர்களின் வெளிப்பாட்டை மானஉணர்வின்கண் அடக்கமுடியாது என்பதால் புலவர்களின் பெருந்தகைமைக்கு ஏதும் இழுக்கு நேர்ந்துவிடாது. சமூகத் தகுதியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த இடத்தில் இருந்த மன்னர்களிடத்து இதன் நேர்எதிரான நிலையில் இருந்த புலவர்கள் நெஞ்சுரத்தோடு தம் எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதே சிறப்பிற்குரியதுதான்.
முனைவர் நா.இளங்கோ
இணைப் பேராசிரியர்
புதுச்சேரி-8