இருளில் ஒளிரும் நிழல்

உன் பெயரை
உச்சரிக்க கடினம்தான்.
அவ்வாறில்லை
உன் கவிதைகள்.
மழை நின்ற நள்ளிரவில்
இரை தேடும்
பூனைக்குட்டி போல்
வந்து சேர்ந்துவிடும் கவிதைக்குள்
நமது மனங்கள்
கூடு விட்டு கூடு பாய்ந்து.
கிரணங்கள் கசியும்
ஒளியின் மேகங்களில் எதையோ
அடுக்கிக்கொண்டிருக்கும்
உன்னை தோள் பற்றி
பார்க்க கோபமாய் சிரிப்பாய்.
புழக்கமான சொற்கள்தான்.
நீ எழுதியபின்
கொலுவின் அழகு வந்துவிடும்.
எழுதி எழுதி நீ
மறந்த ரணங்கள்
ஆறாமல் கிடக்கின்றது
ஒவ்வொரு புத்தகத்திலும்.
வீட்டிற்கு உன்னை
அழைத்த அழைப்புகள் யாவும்
வாசலெங்கும் சிந்தியிருக்கிறது
காற்றில் அறிவற்று அலையும்
வேப்பம்பூக்களாய்...
நீயோ போய்விட்டாய்
அகதியின் மனச்சான்றாய்.

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Apr-18, 6:30 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 121

மேலே