அவனவளின் ஆதங்கம்
குடும்பமே குழந்தையின் வருகையை
குதூகலத்துடன் எதிர்நோக்கி காத்திருந்தது
அவன்(ஆண்) தான் வேண்டுமென ஒரு சிலர்
அவள்(பெண்) தான் வேண்டுமென ஒரு சிலர்
குறையற்ற குழந்தை எதுவாயினும் சரி என்று ஒரு சிலர்
நாட்கள் நகர்ந்தது
வசந்தம் வந்தது
மண்ணில் மழலையும் மலர்ந்தது
அவனாகவும் அல்ல
அவளாகவும் அல்ல
அவனவளாக(திருநங்கை)
குறைகளற்று குழந்தை வேண்டியவர்களுக்கு
குறையே குழந்தையென எண்ணும் அளவிற்கு
அவனவளின் நன்னடத்தையையும் கலையுணர்வையும்
பெருமையுடன் பெற்றோரும்
செல்லபிள்ளையென சீராட்டும் உறவுகளும்
சாதனையை சமூகத்தினரும்
போற்றிப் புகழ்ந்தனர்
உண்மையை உணரும் வரை
இசைபாடி வளர்த்த இல்லமே - இன்று
வசைபாடியது - அவனவளின் நிலைசொல்லி
சமூகத்தினரின் ஏளனப்பார்வையும்
உறவுகளின் ஒதுக்கமும்
பெற்றோரின் விலகலும் - துரத்தியது
தன்னை யாரும் அறியா உலகிற்கு கொண்டுசெல் என
ஐயோ பாவம் என்னும் ஒரு சிலர்
ச்சீ... போ.. என துரத்தும் பலர்
வா... என அழைக்கும் ஒரு சிலர்
அர்த்தம் புரிந்தும் புரியாத நிலையிலும் நான்
என்னை அச்சுறுத்தும் இவ்வுலகம்
மொழி, இனம், மதம் என பலவேறுபாடுகள் - இருப்பினும்
என் தேசத்தின் ஒருமைப்பாட்டினை உணர்ந்தேன்
என்னைக் கண்டபின் முகம் சுளிப்பதில் மட்டும்
அவனவளின் வலிமையை புரிந்துகொள்ள
இயலாத மானுடர்கள்தான் பாவம்
அம்மையும் அப்பனும்
இரண்டொரு கலந்து உருவான
அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபம் அவர்கள்
பெண்மையும் ஆண்மையும்
சமஅளவில் பெற்ற பேராற்றல் உடையவர்கள்
குறையுள்ளவர்கள் அவர்கள் எனக் கூறும்
அனைவரும் சிந்தியுங்கள்
ஒவ்வொரு ஆணும் தன்னுள்
பெண்மையையும் அவர்களின் மென்மையையும்
குறைவாக பெற்றவர்கள்
ஒவ்வொரு பெண்ணும் தன்னுள்
ஆண்மையையும் அவர்களின் வீரத்தையும்
குறைவாக பெற்றவர்கள்
அவ்வாறியிருப்பின் ஆண்மையும், பெண்மையும்
வீரமும், தாய்மையும் சமமாக
பெற்ற உன்னத பிறப்பான
திருநங்கைகளும், திருநம்பிகளும்
எவ்வகையில் குறையுள்ளவர்கள் ஆவார்கள்?
உண்மையில் குறைகள் யாரிடம் உள்ளது?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
