திகிலும் ருசிக்கும் 2

திகிலும் ருசிக்கும்...2

"என்ன சார், வீட்டம்மா இல்லையா....நீங்க பால் வாங்க வந்துருக்கீங்க??"

"வீட்டம்மா வந்தா தான் பால் ஊத்துவேன்னு சட்டம் கிட்டம் போட்டு வச்சிருக்கியா,, அப்படி எதாவது இருந்தா சொல்லு பிசகு பண்ணாம கிளம்பறேன்"

"அட ஒரு பேச்சுக்கு விசாரிச்சா சார்க்கு மூக்கு மேல கோவம் வருதே, அம்மா சொன்னது உண்மை தான்..."

"என்ன உண்மை, அம்மா என்ன சொன்னாங்க"

"அவர்கிட்ட பார்த்து பேசுங்க , அவர்க்கு கோபம் எள்ளுனா எண்ணையா நிக்கும்னு சொன்னாங்க அம்மா சரியா தான் சொல்லிருக்காங்க..."

"இப்போ எதுக்கு இந்த வளவள பேச்சி, சீக்கிரம் பால ஊத்தறயா, இல்லையா "

"சரி சார், கோவிச்சுக்காதீங்க, பாத்திரத்தை காட்டுங்க"

"காசு எவ்ளோ?"

"அட இருக்கட்டும் சார், கணக்கு வச்சிக்கோங்க, நான் மொத்தமா அம்மாகிட்டயே வாங்கிக்கறேன்"

"அட இருப்பா, வாங்கிட்டு போ"

பால், பால், பால்...கூவிக்கொண்டே போய்விட்டான்...

மொதல்ல இந்த பால்காரனை மாத்தணும், இவன் பேச்சே சரி இல்லை, இவ எதுக்கு நான் கோபக்காரனு இவன்கிட்டலாம் சொல்லி வச்சிருக்காளோ....யார் கிடைச்சாலும் போதும் வீட்டு ஞாயத்தை ஒப்பிச்சிடுவா, வரட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டணும்...

கனகா இப்படி தான், வளவள பேச்சு தான்...யார் ஒருநிமிஷம் கிடைச்சாலும் அவங்களை வச்சி நேரத்தை கடத்திருவா....கைப்பக்குவதுக்கு கட்டிட்டு வந்து வாய்ப்பக்குவம் பத்தி யோசிக்காம விட்டுட்டேன்...

நல்லா சமைச்சி போட்டா போதும்னு அதோட விடுவாளா, சமைச்சது ஜீரணிக்கற வரை பேசி பேசியே கொல்வா...

பேச்சி பொதுவா சண்டையாகாது, ஆனாலும் காதை பொத்திக்கிட்டு போதும் விட்டுடுன்னு கண்ணுல தண்ணி வடிக்கற வரை விடமாட்டா....அவளுக்கு மட்டும் ஆண்டவன் இரும்பால வாய படைச்சிருப்பான் போல, வலிக்காம முகம் சுளிக்காம பேசிக்கிட்டே இருப்பா...

ஆனாலும் அவ குரல் இருக்கே, பேச பேச கேட்டுட்டே இருக்கலாம் தான்... ரசகுல்லாவை பதமா இதமா ஜீரால போட்டு ஜீரா சொட்ட சொட்ட அதை அப்படியே வாய்க்கு நடுவுல விட்டுகிட்டு இனிப்பு நாவையும் தொண்டையும் நனைக்கறாப்புல ஒரு சுவை காதுக்கு கிடைச்சா எப்படி இருக்குமோ அப்படி தான் கனகா குரலும்...

என்ன ஒன்னு இந்த குரலால ஸ்வரம் பிடிச்சு பாடினா விடிய விடிய கண் சிவக்க சிவக்க கேட்டு ரசிக்கலாம், இவளோ ஊர் கதையையும், அதரபலசையும் தானே கிண்டி கிண்டி பேசுவா....
சில நேரம் நாக்குக்கு ருசியா பதார்த்தம் பண்ணி கண்ணு முன்னாடி வச்சிட்டு ஒன்னு விட்ட நாத்தனார் புராணத்தை பத்தி ஒன்னு விடாம பேசிட்டு இருப்பா, அப்போ வயித்துக்கும் மனசுக்கும் நடுவுல ஒரு யுத்தம் நடக்குமே, அப்பப்பா அத சொல்லி மாளாது...

கனகா பத்தி பேசினா அத்தனையும் மறந்து போகும், முதல்ல காபி போட்டு குடிச்சா தான் உடம்புக்கு தெம்பு கிடைக்கும்...

கனகா போடற டிகாஷன் காபி இருக்கே, வாசம் ஆள இழுத்துகிட்டு வந்துடும், ஆனா அவ இல்லா நேரத்துல இன்ஸ்டன்ட் காபி போட்டு சமாளிச்சிக்கறது...

இந்த காபி தூளை வேற காணோமே, சமையலறை அவ ராஜ்ஜியம், இங்க ஒன்னும் என் பேச்சுக்கு கட்டுப்படாது, மளிகை சாமான் வாங்கி வந்த பைக்குல இருக்கலாம் தேடி பார்க்க வேண்டியது தான்...

காபி தூளை தேடிக்கொண்டு ஹாலுக்கு வந்த இடைவெளியில் கனகா போடும் டிக்காஷன் காபி வாசனை மூக்கின் மீது வருடியபடி இருந்தது...
ஒருவேளை கனகா என்மேல இரக்கப்பட்டு வந்துட்டாளோ, அவ மட்டும் வந்திருந்தா பிள்ளையாரப்பா உனக்கு ரெண்டு தேங்காய் உடைக்கிறேன் ...
அட அசடு கனகா எப்படி வந்திருக்க முடியும், கதவு சாத்தி கிடக்குது , அப்படியே வந்தாலும் என்னை தாண்டி தான் உள்ள போகணும், இத்தனை நேரமா இங்கல்ல இருக்கேன், அதெப்படி திடிர்னு காபி வாசனை வரும், ஒருவேளை பக்கத்துக்கு வீட்டுல போடற வாசனையோ, அக்கம் பக்கம் தான் ஆள் இல்லையே, ஒருவேளை பக்கத்து தெருவில காபி போடற வாசனையோ...இதென்ன குழப்பம், எதுக்கும் உள்ள போய் பார்த்துட்டா சந்தேகம் தீர போகுது...
குழப்பம் தலையை நிரப்ப சமையல் அறையை எட்டி பார்த்தால் ஆவி பறக்க சுட சுட ஒரு தம்ளரில் காபி வாசனையை பரப்பி கொண்டு என்னை வா வா என்று அழைத்தது....

ஒரு பக்கம் மனசுக்குள் கொண்டாட்டம்.... ஆஹா என்ன ஒரு மணம் , இப்படி ஒரு அற்புதமான வாசனையா...எனக்கே எனக்காக யாரோ காபி போட்டு வைத்திருந்தது போல இருந்தது..இன்னொரு பக்கம் மனசுக்குள் பலத்த அடி, ஆளில்லாத வீட்டில் இத்தனை கரிசனையாக யார் வந்து காபி போட்டிருக்க முடியும், அதுவும் கனகா போடும் ஸ்பெஷல் டிகாஷன் காபி...
என்னவோ நடக்கிறது விபரீதமாய், சமையல் அறைக்குள் போகவே பயமாக இருந்தது, இப்படி தனியாக மாட்டி கொண்டோமே, காபி வேறு ஆறிக்கொண்டே இருந்தது...ஆவி வந்து ஆவிபரக்க காபியெல்லாம் போட்டு குடுக்குதே, பேய் போட்டாலும் காபி காபி தானே, பேசாம குடிச்சிடலாமா என்றெல்லாம் புத்தி யோசிக்க ஆரம்பித்துவிட்டது...

அதற்குமேல் வீட்டுக்குள் இருக்க முடியாமல் போகவே, கதவை திறந்துகொண்டு திண்ணையில் உட்கார்ந்தாயிற்று...

என்ன இது, காலங்கார்த்தாலேயே காபி மூலமா ஏழரை ஆரம்பிச்சிடுச்சே, காபி குடிக்க ஆசைப்பட்டது ஒரு குத்தமா..இப்போ உள்ள போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த போது தான், உள்ளிருந்து ஒரு குரல்...

காபி ஆறிட போகுது, சீக்கிரம் வந்து குடிங்க...

எழுதியவர் : ராணிகோவிந் (19-Apr-18, 1:41 pm)
பார்வை : 692

மேலே