மண் மகளே வா
மண் மகளே
நீ
மலையின் மழலை
நீ கண் விழித்தால் காலை
அதனால் நீ கண் அயரும்
வேளையில் வாருகின்றான் உன் காலை
நீ அணியும் சேலை
இயற்கைச் சோலை
அல்ல அல்ல
இலக்கியச் சோலை
அள்ள அள்ளத்
தருகின்றாய் என்பதற்காக
உரித்துக்கொண்டே இருந்தால்
எப்படி உன் தோலை ?
உன் கூந்தல் வகிடுகள் சாலை
ராந்தல் காடுகள் நீ அணிந்த மாலை
உன் தோல் வியாதி பாலை
அவர்கள் இறந்தபின்
சுமக்கும் கருவறை மணலை வெட்டி
உயிரோடு உனக்கு ஊற்றுகின்றனர் பாலை
பூமாதேவியே சூரியன்
உன் தந்தை வீடு
நீ சுற்றி வருகின்றாய் சரி
சந்திரன் ஏன்
உன்னை சுற்றி வருகின்றான்
காதல் கொண்டா ?
நிலமகளே
மார்கழிக் குளிரில்கூட
நடுங்காதே நடுங்கினால்
நங்கள் மண்மூடிப்போவோம்
அதனால்
கண்மூடிப்போவோம்
அன்று
தீவுகளில் நடுங்கி
ஒருகரையில் சூரியனை
விடியவைத்தாய்
மறுகரையில் மீனவனை
மடியவைத்தாய்
சுனாமி என்று
மண்மகள் காணும்
வன்கொடுமை
நிலநடுக்கம்
உன் ஈர உடல்தான் கடல்
ஏவுகனைச் சோதனைகள்
அழிவிற்காக நங்கள்
உனக்குப் போடும் செடல்
நீரை உரிஞ்சும்
குழாய்கள்
உன் செந்நீரை உறிஞ்சும்
கொசுக்கள்
உலகில் சுரண்டப்படுவது
பெண்மகள் மட்டுமல்ல
மண்மகளும்தான்