பாதை ஒரக் காட்சிகள்
பொன் குலேந்திரன் (கனடா)
ஹால் சுவர் கடிகாரத்தில் காலை எட்டு மணி அடித்தது . வழமைபோல் நடக்க தன் ட்ராக் பேண்ட்டையும் அடிடாஸ் (Adidas) சூ வையும் மாட்டிக்கொண்டு பார்த்திபன் வாக்கிங் வெளிக்கிட்டான் . தினமும் இரு மைல்கள் நடக்க வேண்டும் அப்போது தான் நிறை குறையும் டாக்டர் பார்த்திபனுக்கு சொன்ன ஆலோசனை.
நட பாதையில் நடக்கும் போது பல காட்சிகளைக் காண்பான்
அவனின் முதல் சந்திப்பு ஒரு வயது வந்த பிச்சைக்காரன். நடபாதை ஒரத்தில் குளிரில் முடங்கியபடி படுத்திருந்தான். பக்கத்தில் அனுக்குத் துணையாக ஒரு சொறி நாயும் படுத்திருந்தது பார்த்திபனைக் கண்டதும் நாய் உறுமியது . பிச்சைக்காரன். விழித்துக் கொண்டான் .
” ஏதும் பிச்சை போடுங்கள் சாமி “. உடனே அவன் குரல் ஒலித்தது. பார்த்திபன் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் சில்லரையை அவன் முன் போட்டான்.
“இது எந்த மூலைக்குப் போதும்”? பிச்சைக்காரன் முணுமுணுத்தான்
பார்த்திபன் பேசாமல் நடையைத் தொடர்ந்தான் .
பத்து யார் நடந்தவுடன் ஒரு பெண் உயர் சாதி நாயுடன் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்தாள். :
“குட் மோர்னிங் சேர். எப்பவும் நடக்க வருவீர்களா “
“ம்”
“உங்கள் கைக் கடிகாரத்தில் இப்ப என்ன நேரம் காட்டுது என்று சொல்லமுடியுமா”?
“ ஏன் உங்கள் கையில் கைக் கடிகாரம் இருக்குதே நேரம் பார்க்க வேண்டியது தானே.”
“ அது ஓடாது சேர் . ஸ்டைலுக்கு கட்டி இருக்கிறேன்”:
இப்படியும் மனிதர்ளா நேரத்தை அலுப்புடன் அவளுக்கு சொல்லி விட்டு தன் நடையை தொடர்ந்தான்.
:”பத்து நிமிடங்களில் இன்னொரு காட்சி ஒரு இளைஞனும் யுவதியும் குடை மறைவில் சல்லாபம் செய்யும் காட்சி..
“ சீ இடமில்லாமல் பாதை ஓரமா இவர்களுக்கு சல்லாபம் செய்ய கிடைத்தது? இவர்களுக்கு நேரம் காலம் இல்லையா?: புறு புறுத்தபடி நடையைத் தொடர்ந்தான்.
நடை பாதை ஓரத்தில் பேப்பர் விற்கும் ஒருபையன் . “கத்தியால் சதக் சதக் என்று கணவன் மனைவியை குத்திக் கொலை”. ஒரு பேப்பரின் முன் பக்கத் தலையங்கத்தை உரத்த குரலில் சொல்லிய பின் “சார் சுடச் சுடச் செய்திகளோடு பேப்பர்கள் இருக்கு வாங்குறீரக்களா”? பையன் கேட்டான்.
காசு கொடுத்து ஒரு பேப்பர் வாங்கிக கொண்டு தொடந்தான் பயணத்தைப் பார்த்திபன்.
தள்ளாடிய நடையோடு ஒரு குடிகாரன் பாதையில் பஸ் வருவது கூட தெரியமால் நடந்து வந்தான் . அவன் கைகளைப் பிடித்து இழுத்து ஓரமாக நடபாதையில் பார்த்திபன் விட்டான்
“ ஏய் என்னைத் தொட நீ யார் ? . எனக்குப் போக வழி தெரியும்” குடிகாரன் சத்தம் போட்டான்.
பார்த்திபன் பதில் சொல்ல்லாமல் நடையைத் தொடர்ந்தான்.
பஸ் ஸ்டாப் ஓன்று வந்தது ஒரே கூட்டம். இடித்துக் கொண்டு நெரிசலில் பஸ்சில் எறினார்கள். அந்த ஏறின கூட்டதில் ஒருவன் பஸ்சில் ஏறின ஓருவரிடம் பிக் பொக்கெட் அடித்ததை பார்த்திபனின் கண்கள் கண்டு விட்டன . அவன் எச்சரிக்க முன் பஸ்சில் கூட்டம் போய் விட்டது.
பாதை ஒரம். தோசை இட்டலி சுட்டு விற்கும் ஒரு கிழவி பார்த்திபனை கண்டவுடன் :
வணங்கம் சார். காலை சாப்பாடு முடிந்ததா” அக்கறையோடு கேட்டாள்
“மல்லிகைப் பூ இட்டலியும் சுடச் சுட தோசையும் சாம்பாரும் சட்னியும் இருக்கு. வாங்கிக் கொண்டு போங்கோ சார் ”
“வேண்டாம் ஆச்சி . கேட்டதுக்கு நன்றி. வாக்கிங் முடித்து வீட்டுக்குத் திரும்பி போய்ய் குளித்துப் போட்டு அம்மா ஆவியில் வேக வைத்த ஆப்பம் இருக்கும், சாப்பிட வேண்டும். நான் வாறன்” : நடையைத் தொடர்ந்தான்.
குப்பை அள்ளும் ஒருத்தி கிழிந்த பேப்பர்களை தெரிந்து எடுத்து சாக்குக்குள் போடுவதை பார்த்திபன் கண்டான் . சுவரில் உள்ள சினிமா போஸ்டர்கள் . அதில் ஓன்று பார்த்திபன் சீதா நடித்த புதிய பாதை படத்தின் போஸ்டர் ஒன்று. அந்த பேப்பர் தேடுபவளின் கழுகுப் பார்வையில் இருந்து அந்தப் போஸ்டர் தப்பவில்லை . சுற்றும் முற்றும் பார்தாள். பின் அந்த போஸ்டரை சர்ர் என்று ஒரு கிழி கிழித்ததாள் பேப்பர் பொறுக்குபவள். பார்த்திபனும் சீதாவும் அவளின் சாக்குக்குள் அடங்கி விட்டனர் . நல்ல காலம் ,நான் சாக்குக்குள் இருக்கும் அந்த பார்த்திபன் இல்லை. நான் படித்து வேலை தேடும் பார்த்திபன். மனதுக்குள் தன்னைத் தேற்றிக் கொண்டு நடந்தான்.
தூரத்தில் கருப்பு கொடிகளோடு ஒரு ஊர்வலம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. “வேலை வேண்டும். வேலை வேண்டும். நாம் வாழ வேலை வேண்டும்” என்ற பலத்த கோஷங்களுடன் ஒரு ஊர்வலம் வந்து கொண்டிருந்தது ஊர்வலத்துக்குப் பின்னால் சில பொலீஸ்கார்கள் கையில் தடியோடு சேர்ந்து நடக்கும் காட்சி . .வே இ ஒ க என்ற சுருக்கமாக எழுதிய கோரிக்கை அடங்கிய பதாதைகளைத் தூக்கிப் பிடித்தபடி பலர் நடந்தனர் . பார்த்திபனுக்கு பதாதையில் எழுதின வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை. பக்கத்தில் நின்ற ஒருவரைப் பார்த்துக் கேட்டான் பார்த்திபன் :” இது எந்த கட்சியின் ஊர்வலம் சேர் ”?
அவர சிரித்தபடி “வேலை இல்லாத ஒதுக்கப்பட்டவர்கள் கட்சியின் ஊர்வலம் சார் இது”:
:”ஓஹோ அப்படியா நானும் அந்தக் கட்சியில் ஒருவன் தான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு நடையை தொடர்ந்தான். அவனுக்கு அன்று பகல் ஒரு மணிக்கு அவன் விண்ணப்பித்த வங்கி வேலைக்கு நேர்காணல் . இனி வீட்டுக்கு திரும்பிப் போய் குளித்து சாப்பிட்டு விட்டு புறப்பட நேரம் சரி என்று சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கித் பார்த்திபன் திரும்பின போது
:”ஐயா நடந்து கலைத்து இருப்பீர்கள் சுவையான் செவ்விழனி இருக்கு. காலையில் குடித்தால் உடலுக்கு நல்லது. சீவித் தாறன் . குடிக்குறீர்களா”? செவ்விழனி வெட்டுபபவன் கையில் கத்தியோடு கேட்டான் .
பார்த்திபனுக்கு நடந்ததால் தாகமாக இருந்தது.
“எவ்வளவு காசு “?
“முப்பது ரூபாய்
“ சரி செவ்விழனி ஒன்றை சீவித் தா”
அவன் சீவிக் கொடுத்த செவ்விழனியைக் குடித்த பின் பணத்தைக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினான் பார்த்திபன்.
****
(யாவும் அனுபவமும் புனைவும் கலந்தது )

