அன்பென்ற தேன்

அன்பென்ற தேனை, உள்ளமென்ற தேன்கூட்டில் சேமித்து வைத்தேன் எனக்கு மட்டுமே என்ற சுயநலத்தில்.

நிரந்தரமில்லா மாய உலகம் ஏற்படுத்திய காயத்தால் உள்ளம் உடைந்திட அன்பென்ற தேன் உள்ளிருந்து மண்ணில் விழ,
எடுத்து சுவைத்து பார்த்தேன்,
அன்பின் சுவையில் புது பிறவி எடுத்தேன்,

அன்பென்ற தேனால் காயம்பட்டு குறைப்பட்ட இதயம் சற்றே குணமுற அடிக்கடி அன்பென்ற தேனை உண்ண இயற்கையிடம் சரணடைவேன்,

ஒவ்வொரு நொடியும் இயற்கையொரு சேதியை தந்து கொண்டே இருக்கும்.
சேதியை உள்வாங்க நாமும் இயற்கையோடு உணர்வால் ஒன்றிவிடுதல் அவசியம்.

மனம் மகிழ்ச்சியாய் வாழ எப்போதும் ஒரு இயற்கை தந்திடும் சங்கீத ஞானம் அளப்பரியது.
அதுவே இரசனைக்குரியது.

மனிதர்களின் மீது வெறுப்பு உண்டாகவும், இயற்கையோடு வாழ மனம் ஏங்குவதற்கும் ஒரே ஒரு காரணமே உண்டு.
மனிதர்கள் பிரிவினைவாதிகள்.
பிரிந்து சண்டையிட்டு உயிரை வீணாக்குவதே அவர்களுடைய பணியாக உள்ளது.
இயற்கையோ அவ்வாறு இல்லை.

காற்று கேட்காது தன்னை சுவாசிப்பது யாரென்று.
நிலம் கேட்காது தன்னை மிதிப்பது யாரென்று.
மனிதன் மட்டுமே கேட்பான் நீ யாரென்று?

அன்பென்ற தேனைப் பருக இயற்கையை உணர்ந்து இயற்கையாக வாழ முற்படு.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Apr-18, 2:10 pm)
பார்வை : 1345

மேலே