மறைந்த தந்தையின் மலரும் நினைவுகள்

வேர்பலா நுகர்ந்தநாசி வெடித்தநிலம் நோக்கிப்பாயும்
நீர்த்துளி சிகரமுருக வடிகால்தளம் தேக்கிநிற்கும்...

தனக்கென பெருஞ்சுமை கண்டநாளில் கலங்கியதில்லை
எனக்கென ஒருநாளும் கொண்டதில்லை காலம்வரை...

தளையறுகாணா காளைகள்பாயும் விளைநிலத்தே கிளைகள்தொட்டு
உளைச்சல்மிகை சளைத்திடாவலிமை களைந்திடவில்லை இளையவன்நானும்...

தோள்கிடத்தி தொய்வுறா மெய்நிகர் வேர்ச்சொல் எனதானால்
நாள்தோறும் உய்த்துயெனை செய்விக்கும் கூர்மதி உனதாகும்...

அப்பா...!

விழித்திரை ஊற்றெடுக்க கைக்குட்டை கரம்நனைக்க
வழிந்தோடும் தோற்றம்காணவா வைகறையில் சிரம்சாய்த்தீர்...?

மட்டவிலைப் பட்டியலை தொட்டவுடன் கெட்டுவிட
இட்டவிதை திட்டநிலை பட்டவுடன் விட்டுவிட...

இடர்நிறைந்த கருங்காட்டில் அயர்ந்துறங்க சுவருமில்லை
கடந்துபோன வருடமொன்று துயர்துடைக்க எவருமில்லை...

பயிர்விளைய பலநாட்கள் பசியிருந்தும் உண்ணாநிலை
உயிர்விளைய சிலநாட்கள் கசிந்துருக்கும் எண்ணாதுயர்...

விந்தையுலகில் முந்தையப்பாதை கண்டதில்லை எல்லைக்கற்கள்
சிந்தையேற்றிய தந்தைச்சொற்கள் வண்டல்மண்ணில் முல்லைவேறாய்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (24-Apr-18, 9:32 pm)
பார்வை : 86

மேலே