205 ஆண்டவனுக்கு அஞ்சாரே அறைவர் முழுப்பொய் - பொய் 11
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வியனுல கெங்கணும் வீற்றி ருக்குமோர்
வயமுளான் முனிவிற்கஞ் சாது மாக்கட்குப்
பயமொடு மநுத்தமே பகர்தல் தேவினும்
கயவுளார் நரனெனக் கருதல் போலுமே. 11 - பொய்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”விரிந்த உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பில்லாத முழுமுதல்வனுடைய சினத்துக்கு அஞ்சாது, கீழான குணம் கொண்ட மக்களுக்கு அஞ்சிப் பொய் சொல்வது, அத்தகைய கீழோர் தெய்வத்தினும் மேன்மையுள்ளவர் என்று நினைத்து நடப்பதற்கு ஒப்பாகும்” என்றும், ஆண்டவனுக்கு அஞ்சாதவர்களே முழுப்பொய் சொல்வார்கள் என்கிறார் இப்பாடலாசிரியர்.
வியன் - விரிந்த. வீற்றிருக்கும் – நிறைந்திருக்கும், ஓர் - ஒப்பில்லாத. முனிவு - சினம்.
கயம் - மேன்மை
வயமுளான் – ஒப்பில்லாதவன், அநுத்தம் - பொய்.