210 களவால் விலங்கு, சிறை, காதற் பிரிவுண்டாம் – களவு 5
கலித்துறை
மா விளம் விளம் விளம் மா
திலக வாணுதல் தேவியைச் சேயரைப் பிரிந்து
கலக லென்னவே யொலிசெய்மா விலங்குகாற் பூண்டிவ்
வுலகம் ஏசிடச் சிறையகத் துற்றுமண் சுமந்து
சிலுகெ லாமுறல் சிறிதுபொன் திருடலா லன்றோ. 5 களவு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”திலகம் அணிந்த வாள் போன்ற ஒளி வீசும் அழகிய நெற்றியையுடைய மனைவியையும் மக்களையும் பிரிந்து, கலகல வென ஒலியெழுப்பும் இரும்பு விலங்கு கை, காலில் மாட்டி, இவ்வுலகோர் பழிக்கச் சிறைக்குள் சென்று, மண் சுமந்து துன்பமெல்லாம் அடைவது சிறு அளவு பொன்னும் பொருட்களும் களவு செய்வதால் உண்டாகும் அல்லவா” என்று களவால் ஏற்படும் விளைவும் அவமானமும் பற்றி எடுத்துரைக்கிறார் இப்பாடலாசிரியர்.
நுதல் - நெற்றி. தேவி - மனைவி. சேய் - மக்கள். சிலுகு-துன்பம்.