விழி எழுதிய கவிதை
விழி எழுதிய கவிதை
ஒலியை மட்டும்
உணர முடிந்தவன் நான்
ஓரமாய் அந்த
திருமண மண்டபத்தில்
என் மனதின் ஓசை மட்டும்..
எவருக்கும் கேட்தூகாத
ஒரு மூலையில் அமர
எனக்கான ஆசனத்தை
தட்டி தட்டிப் பார்த்துத்
தேர்ந்து கொள்கிறாள்
என் கையை விட்டகலாதவள்.
மணக்கும்வாசனைத் திரவியங்கள்
மல்லிகைச் சரங்கள்
வளயல்கள் கொலுசொலிகள்
வம்பிழுக்கும் சிறுசுகளின்குறும்புகள்
அலங்கார வளைவுகள்
அழகான மணவறை பற்றிய
ஆளாளுக்கான சிலாகிப்புக்கள்
இவை அனைத்தையும் தாண்டி
மிதந்துவருகிறது காற்றில்..
"உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன்
காற்றில் நானே"
ஆயிரம் தடவை எனக்காக அவள்
கேட்ட பாடல்
அந்த விபத்தொன்றின் பின்
நிறமற்றுப் போன என் பயணத்தில்
அவளுக்காக நான் தவிர்த்த பாடல்
"வணக்கம்" பரிச்சையமான
அதே குரல் தான்.
சற்றும் எதிர்பாராதவன் நான் எழுந்து
என்னைச் சுதாகரித்துக் கொள்ள
என்னவளைப் பற்றிக் கொள்ள
முயல்கிறேன்
என்னில் இருந்து நழுவி விழுந்து
ஒலி எழுப்பியபடியே உருண்டு
செல்கிறாள்...
"தம்பி அந்த தடியைக் கொஞ்சம்
எடுத்துக் கொடுப்பா
அந்தாள் கண்ணு தெரியாதவர்"
யாரோ கூறுவது காதில் விழுகிறது..
கறுப்புக் கண்ணாடிக்குள்
கலங்கும் என் கண்கள்
எழுதிய கவிதையை
உச்சியில் சுழன்று கொண்டிருந்த
மின் விசிறியின் உஷ்ணக் காற்று
மட்டுமே வாசித்துக்கொண்டிருக்க
வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்...