குத்துவிளக்கேற்றித் தொடங்கிய விழா

ஒரு விழா என்று வந்தால், அந்த இடத்தில் மக்கள் கூட்டமிருக்கவேண்டும். மகிழ்ச்சி அங்கே நிலவவேண்டும். குத்துவிளக்கங்கே எரியவேண்டும். மலர்களும், மாலைகளும் கொட்டிக் கிடக்க வேண்டும். முக்கியமாக விருந்தினர்கள் நிரம்பியிருக்க வேண்டாம்.

எந்த ஒரு விழாவாக இருப்பினும், இந்தக் கவிதை அதற்குப் பொருந்தும். இது ஒரு பொதுவான கவிதை, கொடுக்கப்பட்ட படத்துக்காக எழுதப்பட்டது.

=====================================
குத்துவிளக்கேற்றித் தொடங்கிய விழா..!
=====================================


பத்துபேர் கூடுமிடத்தில் பந்தலும் மேடையும்
..........பார்த்துப் பார்த்துப் போடப் பட்டிருக்குமாம்..!
கொத்துக் கொத்தாய் மலர்கள் தொங்குமாம்
..........கூடியிருப்போரெலாம் மகிழ்ந்தே தோன்றுவர்..!
பொத்தாம் பொதுவாக அதுவோர் விழாவாம்
..........பகட்டுக்கு அங்கே பஞ்சமில்லை என்றாலும்..!
குத்துவிளக்கொன்று அங்கே ஏத்தா விட்டால்
..........கொண்டாட்டத் திற்கங்கே என்ன மதிப்பாம்..!


எத்துணை விழாக்கள் அமைத்தாலும் அவை
..........எல்லாவற்றுக்கும் மேலே ஒருமேடை தேவை..!
ஒத்துழைப்பு அங்கே இல்லாவிட்டால் மேடை
..........ஒன்றுக்கும் உதவாத செயல் போலாகிவிடும்..!
அத்துணை பேரும் விழிவைத்துக் காக்கவே
..........அனைவருக்கு மொரு தலைவரும் வருவார்..!
புத்தாடை உடுத்திய புதுத் தோரணையோடு
..........குத்துவிளக் கேற்றியதைத் துவக்கி வைப்பார்..!



சித்திரப் பூப்போலேச் சிரிக்கின்ற சிங்காரிகள்
..........சீராக சப்தஒலி எழுப்பியே கைதட்டுவார்கள்..!
மத்தியில் நிற்பவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு
..........மலர்க் கொத்தைக் கொடுத்தபின் வாழ்த்துவர்..!
முத்திரை பதிப்பதுபோல் அனைவரும் தம்
..........முத்தான வாழ்த்தை யெலாமங்கே உதிர்ப்பார்..!
வித்தகராமவர் மனிதரில் மாணிக்க மென்றும்
..........வித்தியாசம் இல்லாத வரென்றும் முழங்குவர்..!

================================================
நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (7-May-18, 5:22 pm)
பார்வை : 56

மேலே