காதல்
தங்க நிறத்தாள் அவள்
தேகத்தில் தங்கத்தின்
தக தகப்பு , மூடி திறந்த
அவள் இமைகள் அந்த
வானத்து தாரகையென
மின்மினுக்க,மலர் விழியாள்
கருநீல தாமரை விழிகள்
திங்களின் ஒளிபோல்
தன்னொளி தந்து -என்
மனதை ஊடுருவ
அவள் ஸ்பரிசங்கள்
படும் முன்பே அவள்
அன்பின் முத்திரையை
அந்த கண்ணொளியில்
ஒரு நொடியில் கண்டுகொண்டேன்
ஒரு பானை சோறுக்கு
ஒரு சோறு பதம்போல
அப்பொழுதுதான் நதியில்
நீராடிவிட்டு வந்தவள்
முகத்தில் பூசிய மஞ்சளும்
தங்க நிறத்திற்கு மெருகூட்ட
கட்டுக்கடங்கா காரன்ன
கருங் கூந்தலை கோதி
கட்டுக்கடங்கிட பின்னி விட்டாள்
சிற்றாடைக் கட்டி
கொடியிடையாள் அவள்
அசைந்து அசைந்து
தங்க ரதம் போல்
என்முன்னே ஆடி வந்தாள்
கொஞ்சம் என் முன்னே நின்றுவிட்டு
மோஹன முத்துப்புன்னகை
ஒன்றை உதிர்த்தாள்
நாணம் அதற்குள்
அள்ளிக்கொள்ள காரிகை
அவள் ஓடி அடைந்தாள்
தன் மனையை ஆற்றங்கரை
ஓரத்து மனையை -சென்றவள்
முற்றம்வந்து மறைந்திருந்து
என்னைப் பார்க்க
என் பார்வைக்கு முன்னே
என் இதயம் என்னவள்
அவளுக்கு சொந்தமானது.
என்னவள் என் மாமன்
மகள் அவளுக்கு.