கூட்டு குடும்பம்
கடலை மிட்டாய் தருவான் என்று
அண்ணன் கால் பிடித்து விட்டதும்
ஐந்து பைசாக்காக அப்பா பேனாவைத்
தேடி வீட்டையே திருப்பி போட்டதும்
அத்தை குதிரை வண்டியில் வருவதை
பார்க்க வாசலில் தவம் கிடந்ததும்
பெரிய சித்தப்பா தூங்கும்போது
பயந்து அடி மேல் அடி வைத்து நடந்ததும்
சின்ன சித்தப்பா கூட சிரித்து சண்டை
போட்டு தயிர்வடை சாப்பிட்டதும்
பெரியசித்தி கூட பாட்டு படித்து
ஏழு கல் விளையாடியதும்
பசுமரத்து ஆணி போல் மனதில் இருக்கிறதே
அம்மா கொட்டுக்கு பயந்து
வீட்டு வேலை செய்ததும்
திக்கி திக்கி தாத்தாவிற்கு
ஆங்கில பேப்பர் வாசித்ததும்
சின்ன அத்தை கூட சேர்ந்து
வாசலில் உட்கார்ந்து எல்லாரையும்
கிண்டல் பண்ணி சிரித்ததும்
சின்ன சித்தி விதம்விதமா சமைப்பதை
ரசித்து உண்டு மகிழ்ந்ததும்
அக்கா கல்யாணம் பண்ணி போனதும்
விடிய விடிய அழுததும்
அத்தான் கூட ஐஸ்க்ரீம் சாப்பிட
பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து போனதும்
கூட்டுகுடும்பத்தின் கோலாகலங்கள்.................
எத்தனை எத்தனை நிகழ்வுகள்
அத்தனை அத்தனை சந்தோஷங்கள்
அழுதாலும் சிரித்தாலும் அனைவரும்
ஒன்றாக இணைந்து பகிர்ந்த நாட்கள்
நான் எனது என்ற வார்த்தைகளுக்கே
அவசியம் இல்லா நாட்கள்
ஒற்றுமை மரியாதை அன்பு
வாழ்ந்து புரிந்த காலங்கள்
விதம் விதமா உடை கிடையாது
விரும்பிய உணவு கிடைக்காது
ஊர் சுற்ற போனது கிடையாது
ஏமாற்றம் வெறுப்பு தெரியாது
தெரிந்ததில்லாம் இவை தான்
உற்சாகம் சந்தோசம் மகிழ்ச்சி
கூட்டுகுடும்பம் பேரு கூட
இப்ப வந்தது தான்
அப்ப தெரிந்ததெல்லாம்......
எங்கள் குடும்பம்......... என்று தான்