விண்ணைத் தீண்டத் துடிக்கும் கட்டிடங்களின் அவலம்

விண்ணைத் தீண்டத் துடிக்கும் கட்டிடங்களின் அவலம்

எங்கும் மேக மூட்டம். கண்ணிற்கு எட்டிய வகையில் புகைமயமான காட்சி அந்த இடத்தில். எல்லோரும் அல்லோல கல்லோலப்பட்டு, ஓசை எழுப்பிய வண்ணம் கூண்டில் இதுநாள் வரை அடைப்பட்டு, விடுதலையான பறவைகள் விலங்குகளைப் போல நாலா புறாமும் சிதறி ஓடினர். ஒரு புறம் தீயணைப்பு படையினரின் பல்லுயிரைக் காக்க தன் இன்னுயிரையும் பணையம் வைக்கும் தியாகப் போராட்டம். மற்றொரு புறமோ அருகில் இருக்கும் வீடுகள், வளாகங்கள், அறியாமை இருளைப் போக்கும் அளப்பரிய கல்விச்சாலைகள், நோய்வாய்ப்பட்டு அவதியுறும் பல இன்னுயிர்களைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கும் மருத்துவக் குழுவினர்களைக் கொண்ட மருத்துவ மனைகள், மக்கள் பசியாற்றும் உணவு விடுதிகள், இடையறாது பணியாற்றி அலுத்த வேளையிலே சற்றே இளைப்பாற அமைதி தேடும் பொழுதுபோக்கு இடங்கள், கண்ணிற்கு களிப்பினை ஊட்டி மனதிற்கு இதம் அளிக்கும் செயற்கை பூங்காக்கள் இன்னும்... இன்னும்.... இன்னும்.... பலப்பல,,,,, அவையுமா? தீ நாக்கின் பசிக்கு இரையாக வேண்டும்?

இத்தகைய அவல நிலைக்கு ஆளாக விரும்பாதோர் அந்த இடத்தில், ஏன் அந்த ஊரிலேயே இனி இருக்கவே கூடாது என்று எண்ணியோ என்னவோ, தங்கள் எஞ்சிய மூட்டை முடிச்சுகளுடனும், தட்டு முட்டு சாமன்களுடனும், கையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாய் தன் பிள்ளைகளை வாரி அணைத்துக் கொண்டு அவசர அவசரமாய் வெளியேறினர்.

அப்பாட! ஒரு வழியாக இந்த இயந்திர கதியிலிருந்து விடுதலை கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி மலர, முகத்தாமரையாய் மலர்ந்து நிசப்தம் நிறைந்த, எங்கும் பசுமைக் கோலம் கொண்ட வயல்வெளிகளையும், பறவைகளின் இனிய ஓசையும் தேனில் திளைக்கும் வண்டுகளின் ரீங்காரங்களையும், ஆர்ப்பரிக்கும் கடலையின் முழக்க நாதத்தையும், குதூகலமாய் சுற்றித்திரியும் மழலைப் பட்டாளங்களின் கும்மாளங்களையும் கண்ட பிறகே, அவர்களின் இதயங்களும் தத்தம் உடமைகள் பலவற்றை இழந்திருந்தாலும். ஏதோ பாரத்தை இறக்கி வைத்த உணர்வுடன் சற்றே அமைதியுற்றது.

ஏன் இந்த அவலம்?

நகர்ப்புறங்களிலே எங்கும் விண்ணை முட்டும் கட்டிடங்கள். பல்கிப் பெருகும் அடுக்குமாடிக் குடியிருப்புகள். இவைகள் உருவாக, எத்தனை எத்தனை பயன் தரும் இனிய மரங்களும் சோலைகளும் மண்ணில் சாய்ந்தனவோ?

அம்மட்டுமா? சகல வசதி வாய்ப்புகளும் வீட்டிற்குள்ளேயே கிடைக்கின்றது என்றால், அது எத்தகைய இடம்? அதனுள் குடியேறலாமா? என்றெல்லாம் சிறிதும் சிந்திக்கக் கூட நேரமின்றி பல லட்சங்களைக் கொடுத்து முந்திக்கொண்டு முதலாவதாக குடியேறிவிட வேண்டும் என்று பதிவு செய்து கொள்ளும் ஒருசாரார் ஒருபுறம், மற்றொருபுறமோ வாடகைக்காவது இங்கு வீடு கிடைக்காதா என்று ஏங்கித் திரிந்து, சில ஆயிரம் ரூபாய்களை அள்ளிக் கொடுக்கப் பாடுபட்டுத் தேடிய பொருள்களையெல்லாம் அடகு வைதாவது குடியேறிவிடவேண்டும் என்ற சிலரின் சிந்தனைச் சிறகுகள்.

அத்தகையோர் தங்கள் இன்னுயிரைப்பற்றி சிறிதேனும் சிந்தித்திருந்தால் எத்தனை உயிர்ச் சேதங்களைத் தவிர்திருக்கலாம்?

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க எளிய இருப்பிடம் போதுமே?

இனியாவது சிந்திப்போம்... செயல்படுவோம்....விபத்தைத் தவிர்ப்போம், இன்னுயிர்களைக் காப்போம், பொன்னான வாழ்வு வாழ்வோம், மலரச் செய்வோம் புதுயுகத்தை. வருக! வருக! தோழர், தோழியரே!
அன்புடன்

ஸ்ரீ. விஜயலஷ்மி, தமிழாசிரியை, கோவை.

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (18-May-18, 12:12 pm)
பார்வை : 513

சிறந்த கட்டுரைகள்

மேலே