அந்த கை என்னைச் செலுத்த துவங்குகிறது
அந்த நாள்
வழக்கம்போல என்னறைக்குள் உறங்கி கொண்டிருந்தேன்
வேறு வேலை இல்லாததால் என் உறைக்குள்
உருண்டு உருண்டு எங்களுக்குள் கோலி விளையாடிக்கொண்டிருந்தோம்
திடீரென்று ஒரு சத்தம்
ஒரு வலிய கை வந்து
என்னைத் தொட்டது.
நான் சிலிர்த்துக் கொண்டேன்
ஆஹா என் கனவுகளின் பயணம்
ஆரம்பம் என்றேன
நான் எதிர்பார்த்தபடியே அந்த கைகள்
ஒரு நீளமான துப்பாக்கியை ஏந்தி என்னை
அதன் உள்ளே செலுத்த தொடங்கியது
நான் குதிக்க தொடங்கினேன்
இவ்வளவு நாள் ஜடப்பொருளாக இருந்த நான்
இன்று ஒரு தீயவனை ஜடமாக்கும் போருக்கு
கிளம்பப்போகிறேன் என்று அவரின் கையில்
ஒட்டிய துப்பாக்கியோடு நானும் ஒரு
நாய்க்குட்டியை போல ஒட்டிகொண்டேன்
வெறி கொண்ட கயவர்களையோ காமுகர்களையோ
மிகப்பெரிய திருடனையோ பயங்கர தீவிரவாதியையோ
சுடப் போகிறேன் என்று மீசையை முறுக்கிக்கொண்டேன்
என்னை ஏந்திய போலீஸ்காரரின் மீசையை விட
சிலிர்த்து எழும்பியது என் கடமையும் கனவுகளும்
என்னை ஏந்திய கைகள் குறிபார்க்கும்போது
நான் பலத்தை திரட்டி புஜம் நிமிர்த்தி பார்த்த பொழுது
எந்த தீவிரவாதியையும் காணவில்லை
அமைதியாய் நடந்து வந்த எறும்புகளைப்போல மக்கள் கூட்டம்
பான் ஸ்டெரிலைட் ்வாசகங்கள் இரண்டும் மட்டும் கண்ட நான்
கொடுங் குற்றவாளிகளை எங்கே என்று தேட தொடங்கினேன்
ஒரு சத்தம் என்னை அந்த கை செலுத்த துவங்குகிறது
ஐயோ அப்பாவி மக்கள் மீதா நான் என்று பாயப்போகிறேன்
என்று நான் கூனிக்குறுகி உங்கள் கால்களையாவது நோக்க முயற்சித்தேன்
அனால் என்னைத் தாங்கிய கொடுங்கரங்கள்
உங்கள் நெற்றிகளையும் நெஞ்ச்சினையும் குறி வைக்க
நான் பெரும் குற்றத்துக்கு உடந்தை போகும் குற்ற உணர்வோடு
அந்த வன்மையான கரங்களின் போக்கில் பாய்ந்து
உங்கள் உயிரெடுத்து நானும் மாண்டு போனேன்
மன்னித்து விடுங்கள் எனக்கு அப்படியே
திரும்பி குறி வைத்தவனை நோக்க்கி பாயும் திறனிருந்தால்
நிச்சயம் அந்த கொடூரக்காரன் நெஞ்சில் தான் பாய்ந்திருப்பேன்
இப்படிக்கு தூத்துக்குடியின தோட்டா ஓன்று