பிள்ளை வரமா பிறவா வரமா----------------------சுந்தர ராமசாமி

தலைக்குப் பின்னுலுள்ள முடிச்சை அவிழ்த்து, மூக்குக் கண்ணாடியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார், பரமசிவம் பிள்ளை. தலையைக் கொக்கு மாதிரி கடைக்கு வெளியே நீட்டி நோட்டம் பார்த்தார். வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. உயிரியக்கமே இல்லை.

கல்லாப் பெட்டியைத் திறந்து சில்லறையை எண்ணினார். அன்று விற்று முதல் பதிமூன்றரை அணா! “யாவாரம் செஞ்சு பொளந்தாப்லெதான்! எளவெடுத்த யாவாரம்!” என்று முணுமுணுத்துக் கொண்டார். வாடிய வெற்றிலையை அப்படியே சுருக்கி வாயில் தள்ளிக்கொண்டு உலர்ந்த சுண்ணத்தைப் பொடித் தூவிக்கொண்டார். கடை இழுத்துப் பூட்டிவிட்டு, பூட்டை பலமுறை இழுத்து பார்த்து பக்கவாட்டுச் சந்தில் நுழைந்து வீட்டை நோக்கி பொடி நடை நடந்தார் பிள்ளை.

கணபதி கோயிலைத் தாண்டியதும் தான், மனைவி காலை சொல்லியனுப்பியது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பிடி நல்ல மிளகு கொண்டு வரும்படி மனைவி சொல்லியிருந்தாள்.

அவர் மூத்த பெண் பிரசவத்திற்கு தாய் வீடு வந்திருந்தாள். ஏழு மாத கர்ப்பம். ஏற்கனவே பெண் பெஞ்சல். சோகை பிடித்த உடம்பு விரலை வெட்டினால் கூட ரத்தம் வராது என்று தோன்றும். இந்த அழகில் வருடம் தப்பியதும் பிரசவம் தப்புவதில்லை. திருமணம் நடந்து இன்னும் ஐந்து ஆண்டுகள் நிரம்பவில்லை. அம்மாள் நாலாவது பிரசவத்திற்குத் தாய் வீடு வந்திருக்கிறாள்!

அன்று பரமசிவம்பிள்ளையின் மனம் வெந்து கொண்டிருந்தது. ஒரே கசப்புணர்ச்சி. வாழ்வின் அபஸ்வரங்கள் மனத்தில் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

சின்னஞ்சிறு பிள்ளையாக இருக்கிறபொழுது பகலில் ஓய்வில், இரவில் தூக்கமும் இல்லாமல் புகையிலே மண்டியில் மாடாய் உழைத்தது ஞாபகத்திற்கு வந்தது. ஏழு ரூபாய்ச் சம்பளத்தில் கணக்குப்பிள்ளை என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே ஆயுளில் பதினைந்து வருடம் தாண்டிவிட்டது. வாழ்க்கை என்பது அவருக்கு மேடு பள்ளம் அல்ல, ஒரே பள்ளம்தான்! அப்புறம், அவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தை நினைத்து விட்டாலே பிள்ளைக்குப் பிரசவந்தான் ஞாபகத்திற்கு வரும். அங்கு ஊஞ்சலின் ஆட்டம் நிற்பதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்து குதித்துவிட்ட மாதிரி தோன்றும். கல்யாணமாகி பத்து வருடத்திற்குப் பின்னால் குழந்தை பிறந்தது; இல்லை, குழந்தைகள் பிறந்தன. தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி போட்டதுமே ‘டபிள் பிரசவம்!’ அப்புறம் வருடா வருடம் பிரசவம்… கர்ப்பம்… பிரசவம்… குழந்தை… மீண்டும் கர்ப்பம். ஸ்ரீமதி பிள்ளை மாதாந்திர அவஸ்தை போன்ற தொல்லைகளுக்கொன்றும் ஆளாவதில்லை. இதற்கு நடுவில் பிள்ளை கொழும்புக்கு வேறு போனார். கொழும்புக்குப் போய் எல்லோரும் சம்பாதித்தார்களாம். ஒரு தேயிலைத் தோட்டத்தில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்தார். ஐந்து வருடத்தில் திரும்பி வந்தார். சம்பாத்தியம் மலேரியா ஒன்றுதான்! மூன்றாவது குழந்தைக்கும் நான்காவது குழந்தைக்கும் ஆறு வருஷம் இடைவெளி. அதுதான் கொழும்பு யாத்திரையில் கண் கண்ட லாபம்!

பிள்ளைக்கு ஐந்து பெண்களும் நான்கு பிள்ளைகளும் உண்டு. சட்டென்று, ‘அவ்வளவு குழந்தைகள் பெயரையும் வரிசையாகச் சொல்லும்’ என்றால் ஒரு நிமிஷம் திணறிப்போவார் பிள்ளை. ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாம்! பிள்ளை ஏன்கனவேயே ஆண்டி. அஷ்ட தரித்திரம்தான் பிதிரார்ஜிதச் சொத்து. மனைவி வழியில் ஒரு சின்ன வீடு வந்து சேர்ந்தது. மூத்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்ததில் அந்த வீடும் மற்றொருவனுக்குச் சொந்தமாகி விட்டது. அவருடையதாக இருந்த வீட்டில்தான் இப்பொழுது அவர் இருக்கிறார். வாடகையை மட்டும் சொந்தக்காரனுக்குக் கொடுத்து விடவேண்டும்.

“இதுவும் ஒரு வாழ்க்கையா?” என்று பிள்ளை அலுத்துக்கொண்டார். “இது வாழ்க்கை இல்லை. உயிர் போகமாட்டாத அவஸ்தைதான்!” என்று தோன்றிற்று.

“என் பெண்ணிற்கும் இந்தக் கஷ்டம்தானே. நாளைக்கு அவளும் திண்டாடத்தான் போகிறாள். மாப்பிள்ளைதான் என்ன கலெக்டரா?… கலெக்டர்தான். ஏதோ ஒரு ராப்பாடி பாங்கில் பில் கலெக்டராக இருக்கிறான். முப்பது ரூபாய் சம்பளம். இவனுக்குத்தான் எதுக்கு இவ்வளவு குழந்தைகள்? முன் யோசனையே இல்லை…”

ஆனால் பிள்ளையைப் பொறுத்த வரையில் அவருக்கு அய்யங்காரின் சிநேகம் ஏற்படுவதற்கு முன்னால், இந்த மாதிரி சிந்தனையே தோன்றியது கிடையாது. எல்லாம் ஆண்டவன் செயல் என்று நம்புகிறவர் அவர். “என்னய்யா, நேத்து பிரசவமாச்சாமே. தாயும் சேயும் சவுக்கியமா?” என்று இருபத்தைந்து வருட காலம் எத்தனைபேர் எத்தனை தடவை அவரிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் பிள்ளையின் பதில் ஒன்றுதான்; என்னமோய்யா, ஆண்டவனாகப் பார்த்துக் கொடுக்கிறான். என் கையிலே என்ன இருக்கு. கொளந்தெ வேணும்னா வருதா? அட, வேண்டாம்னா தான் நிக்குதா? இதெல்லாம் மனுஷ காரியமா? ஒம்ம குடும்பத்துல தாங்குமான்னு கேப்பிய. மரம் வச்சவன் தண்ணி விடறான்.

ஒருமுறை வழக்கும்போல் சர்வசாதாரணமாக இப்படி பதில் சொல்லப் போய் பிள்ளை அய்யங்காரிடம் அகப்பட்டுக்கொண்டார்.

செல்லப்பிள்ளை அய்யங்கார் சாதாரண மனிதர்தான். ஆனால் சமீபகாலமாக அவருக்கு கொஞ்சம் மவுஸு ஜாஸ்தி. ஆயிரத்தொள்ளாயிரத்தி நாற்பத்தேழு வருடம் வரை ‘ரூல் பிரிட்டானிக்கா’ பாடிய ராஜவிசுவாசி தான் அவர்.

இப்பொழுது ’ஜனகணமன’ பாடுவதில் தொண்டை கிழிகிறது. அதோடு ஜில்லா போர்டுதேர்தலிலும் வெற்றி. பொதுநல ஊழியர்தான் என்றாலும், சமீபகாலமாக ‘குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்’ என்ற தீவிரச் சீர்திருத்தத்தில் ஐம்புலன்களையும் கேந்திரப்படுத்தி வேலை செய்து வருகிறார். பிரசாரத்தின் வலு ஏற ஏற ‘அய்யங்கார் வருகிறார்’ என்றாலே எல்லோரும் ஓட்டம் பிடிக்கும் நிலைமை வந்துவிட்டது.

என்னங்காணும் சொல்கிறீர்? மரம் வச்சவன் தண்ணீர்விடுவானாம். இதெல்லாம் பத்தாம் பசலி! தண்ணீர் எவ்வளவு இருக்கோ, அதுக்கு மரம் வச்சாப் போரும். இப்போ என்ன குடீ முழ்கிப்போயிடும். சொல்லும். எப்பவும் வீட்டிலெ நாலு தூளி போட்டு ஆட்டினாத்தான் ஜாதில சேத்தியோ? நானெல்லாம் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன். இதென்னடா இது? ஓயாமல் பிரசவம்… இப்படியா வருஷா வருஷம் கொழந்தையெப் பெத்துட்டு ஆலாப் பறப்பீர்! அட, பயித்தியார மனுசா!”

பிள்ளையைத் தாக்குத்தாக்குன்று தாக்கிவிட்டார் அய்யங்கார். அயங்காரின் கர்ஜனையில் அசந்துபோனார் பிள்ளை. பிள்ளையின் மாப்பிள்ளையும் கூட வந்தார். அவர் கேட்டார்:

“அதுக்கு நீங்க என்ன வேணும்றீங்க?”

“அப்படிக் கேளு! என்ன வேணும்னு சொல்றேன்னா, குடும்பத்தை கட்டுப்படுத்தணும். ஆம். ஏன் கட்டுப்படுத்தணும்? நம்ம சோத்திலே உணவு கம்மி. செழிப்பில்லை. ஊர் விஷயத்தைத் தள்ளு. ஒம்ம விஷயத்தை எடுத்துக்கும். உமக்குப் போதியவசதி இருக்கா? பணச் சௌகரியமிருக்கா? நீர் டஜன் டஜனா கொழந்தையெப்பெத்து என்ன செய்யப் போகிறேராம்?”

“அப்பொ வசதி இருந்தா புள்ளெ பெறலாம்னு சொல்லுங்க. கம்மிஷன் கடை நாடாருக்கு ஒரு டஜன் தாண்டிட்டுத்தே. அவர்ட்டெபோயி ‘அட்வைஸ்’ பண்ணப்படாது? அங்கே போய் வாயைத் திறந்தா…”

“திறந்த என்ன, தலையைச் சீவிடுவானோ? அவன் அப்பன் கிட்யே சொல்லுவேனே! இந்தப் பேச்செல்லாம் எதுக்கு? அவன் லகாரமா வார்றான். உமக்குத்தான் வக்கில்லையே!”

“அப்போ சம்பாத்தியத்துக்கு தகுந்தாப்போல, கொழந்தையையும் பெத்துக்கிடலாம்னு சொல்லுங்க. அட, மனுசன் துட்டுக்குப் போக்கத்துப் போயிட்டானா, புள்ளை கூட பிறக்கூடாதுன்னு சொல்லுவீங்க போலிருக்குதே. அப்படின்னா…”

“சரி, சரி, பேச்சை நிறுத்து” என்று அதட்டினார் பிள்ளை. சண்டை கிளம்பிவிடக்கூடாதே என்ற பயம் அவருக்கு.

மறுநாள் பரமசிவன் பிள்ளையின் வீடு தேடிவந்து மாப்பிள்ளையைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போனார் அய்யங்கார்.

இரவு மாப்பிள்ளையிடம் விஷயத்தை விசாரித்தார். பிள்ளை.

“அவரு கூட்டிக்கிட்டுப் போய் கதை அளக்க ஆரம்பிச்சாரு. மனுசன் ‘பிரேக்‘ இல்லாமப் பேசறான். எல்லாத்தையும் பச்சை பச்சையாச் சொல்றாரு. நமக்குத் தான் கேக்கக் கூச்சமா இருக்குது. அவருக்குச் சொல்லிச் சொல்லி குளிர் விட்டுப் போச்சு. ரெண்டு மூணு சின்னப் பொஸ்தகமும் கொடுத்திருக்கிறாரு. எல்லாம் சர்க்கார் வெளியிட்ட தாம்!”

பிள்ளை இனிமேலாவது பெண் தன் வீட்டிற்குப் பிரசவத்திற்கு வராமல் இருந்தால் போதும் என்று எண்ணினார்.

“அவர் பேச்சைக் கேட்டா என்ன? குடி முளுகியா போயுடும்? அவரு சொல்றபடி நடந்துகிட்டா எல்லாருக்கும் கயிஷ்டமில்லெ, ஆமா!”

மாப்பிள்ளை மறுநாள் ஊருக்குப் போய்விட்டார். இது நடந்து ஒரு வருடமாக வில்லை.

இப்பொழுது பெண் பிரசவத்துக்கு தாய்வீடு வந்திருக்கிறாள்.

என்ன பிள்ளைவாள், கடை பூட்டிப் போறேளாக்கும்!”

பிள்ளை திரும்பிப் பார்த்து அய்யங்கார் நின்றுகொண்டிருந்தார். கீற்று நாமம்; கதர் உடை; கையில் தங்கச் செயின்; வாய் நிறைய வெற்றிலை.

“ஆமாம். ஊரிலேருந்து பெண் வந்திருக்காளாமே! நேத்து அப்படிவரச்சே, வாசலிலே நின்னுண்டு இருந்தாப் தோணித்து.”

“ஆமா வந்திருக்கு.”

“என்ன விசேஷம்? பொறந்த நாளோ?”

“கொளந்தைககுப் பொறந்த நாளு இனிமேதான் வருது. அதுக்குள்ளார இவவந்தாச்சு

“ஒடம்பு சரியில்லையோ!”

“ஒடம்புக்கு ஒண்ணுமில்ல. இந்தப் பொம்புளைகளுக்கு வேற சோலி? வருஷா வருஷம் வயத்தெ தள்ளிட்டு வந்து கழுத்தெ அறுக்குது. சவெத்த விட்டு தள்ளுங்க!”

“ஓஹோ, அப்படியா சமாசாரம்? நம்ம மாப்ளேட்ட கிளிப்பிள்ளைக்கு சொல்றாப்லெ சொன்னேனே. சேச்சே! மோசம்! கொஞ்சம் விஷயம் தெரிஞ்சா ஆசாமீன்னா நெனச்சேன்!”

“நம்ம பேச்சே விடுங்க. ஓங்களுக்குத்தான் என்ன? கொளந்தங்களுக்கு கொறவா?”

நாலு“பின்னென்ன?”

“பின்னென்ன?”

“பின்னென்னவா? நாலு. நாலுன்னா நாலுதான். அதுக்கு மேலே பெறப்படாது. அவளுக்கு ஒரு பொண், எனக்கு ஒரு பிள்ளை. எனககு ஒரு பொண், அவளுக்கு ஒரு பிள்ளை. அவ அப்பா, அவ அம்மா, என் அப்பா, என் அம்மா, எல்லார் பெயரும் இட்டாச்சு. இனிமே கொழந்தே கிழந்தே எங்கிற சமாச்சாரமே கிடையாது. என்னா?”

வீ டு பக்கத்தில் வந்ததும் தப்பித்தோம் பிழைத்தோ மென்று உள்ளே தாவினார் பிள்ளை.

வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். குழந்தைகள் வரிசையாகப் படுத்துக் கிடக்கிறார்கள். ஒன்று, இரண்டு மூன்று…. ஒன்பது!

பிள்ளை சாப்பிட உட்கார்ந்தார்.

சம்சாரம் பேசிக்கொண்டே அவற்றை சோற்றைப் பிழிந்து போட்டார்.

“…. மீனாச்சிக்குக் காலிலெ சிரங்கு…ராசா பரீச்சையிலே முட்டை போட்டுட்டான்.

சம்படத்திலே வச்சிருந்த ரூபாயைத் திருடிக்கிட்டு, கோலப்பன் சினிமாவுக்குப் போயுட்டான்… பிள்ளைத் தாய்ச்சிக்கு காப்பி போட்டு குடிக்கணும்னு ஆசையா இருக்கு… ஆனா வீட்டிலெ காப்பிப் பொடி இல்லை… கடைக்குட்டி சுப்பு சிலெட்டை ஒடச்சிட்டு அளுது…. நாளை பால் பணம் கொடுக்கணும்… இனிமே நாளெக் கடத்த முடியாது…திங்குதிங்குனு குதிக்கான்…”

பிள்ளை ஒரு வார்த்தை பேசாமல் வாசலில் வந்து படுத்துக் கொண்டார். படுக்கை கொள்ளவில்லை. நெஞ்சில் பாரத யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

திடீரென்று வீட்டினுள் ஏதோ சத்தம் கேட்டது.

உள்ளே பாய்ந்தார். மனைவி கீழே விழுந்து கிடந்தாள்.

“என்ன? என்ன செய்யுது?”

பதிலில்லை.

“என்ன, சொல்லேன்! வைத்தியரெக் கூட்டிக்கிட்டு வரட்டுமா?”

பதிலில்லை.

“அட, வாயைத்திறந்துதான் பதில் சொல்லேன். என்ன செய்யுது?”

மெல்ல கண்ணை விழித்தாள் மனைவி.

“பதறாதீங்க. எல்லாம் வருஷா வருஷம் வர்ற வியாதிதான். பத்து மாச வியாதி!”


* * *

பல மாதங்களுக்குப் பின்னால் ஒருநாள் பிள்ளையை அய்யங்கார் பிடித்துக்கொண்டார்.

“என்ன பிள்ளைவாள், ஆத்திலெ புத்திரன் அவதாரமாகியிருக்கானாமே. ரொம்ப சந்தோஷம்…”

பிள்ளை பதில் சொல்லவில்லை

அவர் முகத்தைப் பார்க்க, அய்யங்காருக்குப் பரிதாபமாக இருந்தது.

“அட, இதெல்லாம் மனசிலெ போட்டுக்காதேயும். எல்லா நாம நெனக்கிற மாதிரி நடக்கிறதா? இப்போ…”

பேச்சை முடிக்குமுன் அய்யங்காருக்கு ஒரு தந்தி வந்தது. பிரித்துப் பார்த்தார்.

“என்னய்யா விசேஷம்! தந்தி வந்திருக்குதே!”

“ஊரிலெ சம்சாரம் பெத்துருக்காளாம்!” என்றார் ஐயங்கார்.

“அடி சக்கை! நீங்களும் விட்டேளில்லை. போலிருக்கே!” என்று குதூகலத்தோடு கூறி மகிழ்ந்துகொண்டார், பரமசிவம் பிள்ளை!





.

எழுதியவர் : (3-Jun-18, 12:03 pm)
பார்வை : 128

மேலே