அமுதமொழி – விளம்பி – வைகாசி – 25 2018
8-Jun-18
பாடல்
அபயாம்பிகை சதகம் அன்பாய் உரைக்க
உபய சரணம் உதவும் - சபைநடுவுள்
ஆடுகின்ற ஐயன்முதல் அன்பாய் பெற்ற ஒரு
கோடுமுகத் தானை குறித்து
அபயாம்பிகை சதகம் - நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
அஞ்சொல் நாயகி எனும் அபயாம்பிகையின் பெயரில் இயற்றப்படும் இந்த அபயாம்பிகை சதகம் எனும் நூறு பாடல்களை அன்புடன் உரைக்க அம்பலத்தில் ஆடும் ஐயன் அன்பாய் பெற்ற முதல் புத்திரரும், ஒரு தந்தத்தை முகத்தில் கொண்டவருமான வினாயக பெருமானின் இரண்டு திருவடிகளை சரணடைய அவன் அருள் செய்வான்.
விளக்க உரை
• அபயாம்பிகை சதகம் உரைக்க விநாயகரிடம் அருள் வேண்டி நின்ற திறம் பற்றியது இப்பாடல்.
• அபயாம்பிகை சதகம் - சதகமரபிற்கு ஏற்றவாறு 'மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே' என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
• அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து 'பாதாம் புயத்திற் சிறுசதங்கை' என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
• உபயம் – இரண்டு
'அபயாம்பிகை' எத்தனை முறை சென்று தரிசித்தாலும் ஒவ்வொரு முறையும் தன்னை தன்னில் இருந்து வெளிப்படுத்தும் பாங்கு அலாதியானது. அழகு, வசீகரம், மோனம், முழுமை, எழில், மந்தஹாசம் என எத்தனைப் பொருள் கொண்டு விவரித்தாலும் அத்தனையும் மீறியதான அருட் சக்தி.
சாக்த வழிபாடு செய்யாத சித்தர்கள் இல்லை. சொல் குற்றம், பொருள் குற்றம் அனைத்தும் வினையால் ஏற்படுவது. அத்தகைய குற்றங்களை களைந்து முழுமையான படைப்பாக ஆக்க சிறப்புடையதும், எல்லாவற்றையும் அருளுக்கூடியவருமான, சாக்த வழிபாட்டிலும் சிறந்தவரான என் குரு நாதரை மனதில் கொண்டு அவரது திருவடிகளைப் பற்றி இந்த பாடல்களுக்கு விளக்கம் எழுத இருக்கிறேன்.
இயன்ற அளவில் வெள்ளிக்கிழமை அன்று இடம் பெறுமாறு எண்ணம் கொண்டு இருக்கிறேன்.
குரு அருளும் திருவருளும் நம்மைக் காக்கட்டும்.