மந்திர வனம்

மந்திர வனம்



1





இந்த உலகத்தின் அதிசயங்களில் பெரியது எது என்று கேட்டால் வனங்கள் என்று சொல்லலாம். அவ்வளவு ஆச்சரியங்களை தன்னுள்ளே தேக்கிக் கொண்டு அமைதியாய் ஒரு சாது போல இருக்கும் இந்த வனங்கள். இதனுள்ளே இல்லாதது எது.? தங்கமா கனிமமா நீரா இயற்கை வளங்களா உயிர்களா எது இல்லை.? பஞ்சபூதத்தின் மொத்த கலவைகளாக, பிரபஞ்சத்தின் அறிவியலாக எது தான் இங்கு இல்லை.? ஆற்றங்கரயில் நாகரிகம் பிறந்ததாக சொல்வதுண்டு ஆனால் அதற்க்கெல்லாம் முன்னோடி வனங்கள். அவ்வித வனங்களில் தலையாய வனமென்றால் அது சதுரகிரி வனம் தான் அதை போல மர்மங்களுக்கும்,


சதுரகிரி மலையடிவாரம் தாணிப்பாறை..

மூன்று இளைஞர்கள் காரில் வந்து இறங்கினர். இவர்கள் முன் பரந்து விரிந்திருந்தது சதுரகிரி வனம்..

ஊய்.. மச்சான் சூப்பர்டா..

ஆமா மச்சி நல்ல இடம்டா..

சரி வாங்க மச்சிகளா மலைக்கு போகலாம்..

மச்சி கொண்டு வந்துருகிங்களா..?

என்னத்தடா.?

அதான் மச்சி சரக்கு..

மறப்பேனா..? இதோ பாரு என அவன் பேக்கை திறந்து காட்ட உள்ளே மது பாட்டில்கள்..

செம்மடா..

சரி வாங்கடா மலை ஏறுவோம் என அவர்கள் நடக்கதுவங்கினர்..

தம்பி தம்பிகளா நில்லுங்கப்பா. என ஒரு பெரியவர் ஓடிவந்தார்..

யோவ் என்னயா..?

தம்பி எங்க போறிங்க.?

பாத்தா தெரில மலைக்கு தான் போயிட்டு இருக்கோம்..

மலைக்கா போறிங்க.?

ஆமா..

அப்படியே போரிங்கலேப்பா..?

பின்ன எப்படி போறது.? மலைக்கு போறதுக்கு பிளேன் சர்வீஸ் எதுன்னா நடத்துறியா..? என ஒருவன் நக்கலாக கேக்க.

செருப்பு போட்டுட்டு போரிங்கலேப்பா செருப்ப கழட்டிட்டு போங்க..

செருப்பு போட்டு போனா என்னயா..?

இல்ல தம்பி இது சாமி வனம். இங்க அந்த சிவனே சாமியா இருக்குறதா ஐதிகம் வனத்துக்கு யாரும் செருப்பு காலோட போக கூடாதுப்பா..

யாருயா நீ..? மலைக்கு செருப்பு காலோட போக கூடாதுன்னுட்டு கால்ல முள்ளு கிள்ளு குத்திடாது..

சாமி கும்பிட போறவங்கள முள்ளு ஒன்னும் குத்திடாதுப்பா, அப்படியே குத்துனாலும் என்ன சாமியதான பாக்கதான போறிங்க.

சாமிய பாக்க யாரு போறா..?

அப்போ எதுக்கு மலைக்கு போறிங்க என்ற கேள்விக்கு ஒருவன் தண்ணி குடிப்பது போல சைகை செய்து தள்ளாடி காமிக்க, அந்த பெரியவர் அதிர்ந்தார்..

தம்பிகளா வேணாம் இது சாமி வனம் இங்க இதெல்லம் பண்ண கூடாது
தப்புப்பா.. இங்க தப்பா எது பண்ணவும் இந்த வனம் அனுமதிக்காது..

யோவ் போயா, சாமி பூதம்னுட்டு டேய் வாங்கடா இந்த கிழம் கிடக்குறான். என நடக்க துவங்க அந்த பெரியவர் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார்..




2


சதுரகிரி மலையில் ஓடுகிற தீர்த்தங்களும் மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வேர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாகும் என்று சொல்கிறார்கள். திசைக்கு நான்கு கிரிகள்(மலைகள்) விதம் பதினாறு கிரிகள் சமமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் மொத்த பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். பூமியில் வேறு எங்கும் காண கிடைக்காத ஜோதி விருட்சம், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மலையில் உள்ளன. “கருநெல்லி” என்ற ஒரு நெல்லிவகை ஒன்று இங்கு இருக்கிறது அதை சாப்பிட்டால் இறவாமை உருவாகும்..





சதுரகிரி மலைக்கு போகும் சாலையில் அந்த கார் விரைந்து கொண்டிருந்தது காரில் தொழிலதிபர் சாமிநாதனும் அவர் மனைவி மற்றும் அவர் மகன் குமாரும் அமர்ந்திருந்தனர்..

ஐய்... அம்மா அங்க பாரும்மா மலை.. குதுக்களித்தான் குமார்..
மலையை கண்டு அவன் சந்தோஷபட்டதில் ஒரு தவறும் இல்லை தான், ஆனால் ஒரே தவறு அவன் வயது. குமார்க்கு வயது 25 ஆனால் நடவடிக்கையோ 5 வயது சிறுவனை போல இருந்தது. காரணம் ஒரு விபத்து. நண்பனை பார்க்க போவதாக சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிவயவனை குடித்து விட்டு லாரி ஒட்டிக்கொண்டு வந்தவன் இடித்துவிட தூக்கி எரியபட்டவன் பின்னந்தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரம் நினைவு தப்பி கண் முழித்தவன் நிலை தான் இப்படி..
காட்டாத மருத்துவமனை இல்லை. எல்லோரும் கை விரித்து விட,
சாமிநாதனின் நண்பர் முருகன் தனக்கு தெரிந்த நாடி ஜோதிடரிடம் அழைத்து போனார்..

வாங்க என்ன விஷயம்.? என்ற நாடி ஜோதிடரிடம் விஷயத்தை விளக்க,
நீண்ட யோசனைக்கு பின்.
உங்க மகன் பிறந்த நட்சத்திரம் நேரம் சொல்லுங்க..
சாமிநாதன் சொன்னார், உள்ளே போய் ஜோதிட கட்டுக்கள் ஒவ்வொன்றாய் தேடி ஒரு பத்து நிமிட தேடலுக்கு பின்

“கிடைச்சுருச்சு” உங்க பையன் பேர் குமார் சரியா.?

சரிங்க சாமி..

சரி இருங்க படிச்சு பாக்குறேன்.. ம்ம்ம்ம் உங்க பையனுக்கு தலைல அடிபட்டு இப்ப ஒரு அஞ்சு வயசு பையன் மனநிலைல இருக்கார் சரிதானே..

சாமி நீங்க தான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லனும் உங்களை தான் நம்பி வந்திருக்கேன் நீங்க தான் என் பையனுக்கு ஒரு வழிய சொல்லணும்.

இருங்க பார்ப்போம் என்ற படி ஏட்டில் பார்வையை செலுத்தினார்.

“கேளப்பா தீர்வை
நான்கு புறமும் மலை சூழ்ந்த
வனம் சென்று ஆகாச லிங்கம்’
காண பிறக்குமே வழி“ என்றிருந்தது

அப்படியே படித்து அதற்க்கு விளக்கமும் சொல்ல ஆரமித்தார்.

நான்கு புறமும் மலை சூழ்ந்த வனம்ன்னா சதுரகிரி மலை அந்த மலைல போய் நீராடி ஆகாச லிங்கத்தை பார்த்தால் உங்க மகனுக்கு ஒரு வழி பிறக்கும்னு ஏடு சொல்லுது.. என்கைல ஒன்னும் இல்ல எல்லாம் அந்த ஈசன் கைல தான் இருக்கு அவன் என்ன சொல்றானோ அத தான் அந்த காலத்துல உணர்ந்து சித்தர்கள் எழுதி வைக்க அத நாங்க சொல்றோம். போங்க சதுரகிரி போய் அந்த சிவனை தரிசிச்சு மனமுருக வேண்டுங்க. அந்த ஈசன் ஒரு வழி தருவான் உங்க பையனையும் குணமாக்குவான். நம்பி போங்க நம்பி வந்தவங்கள ஈசன் எப்பவும் கைவிட்டதே இல்ல.

சாமிநாதனும் கும்பிட்டு தட்சணையும் செலுத்தி விட்டு வீட்டுக்கு வந்ததும் மனைவிடம் விஷயத்தை சொன்னார்.
பூஜை அறையை நோக்கி கும்பிட்டு விட்டு நாளைக்கே போலாங்க. இதோ சென்று கொண்டிருக்கிறனர்.


3




சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் “சுணங்க விருட்சம்” என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போல இருக்கும். அந்த காய் கனிந்து விழும்போது நாய் குரைப்பது போல இருக்கும். விழுந்த கனி பத்து வினாடிக்கு பின் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும்.
இடையில் புயல் வெள்ளம் எது வந்து அதை அடித்து சென்றாலும் மரத்தை நோக்கி திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த வனத்தில் இன்னொன்று நந்திஸ்வரர் வனத்தில் கனையெருமை என்று ஒரு மரம் உள்ளது அந்த மரத்தின் அடியில் யாரேனும் நின்றால் எருமை போல மரம் கனைக்கும்.. அதை போல இன்னொரு விருட்சம் நள்ளிரவில் கழுதை போல கத்தும். இப்படி வனம் முழுக்க ஏராளமான விஷயங்கள்.



செல்லும் வழியெங்கும் மரக்கிளைகளை ஒடித்து துவம்சம் பண்ணியபடி ஆர்பாட்டத்துடன் சென்று கொண்டிருந்தனர் அவர்கள். மலையின் ஓரிடத்தில் அமர்ந்தது கொண்டு வந்திருந்த மதுவகைளைளையும் சிப்ஸ் பாகெட்டுகைளையும் பிரித்து மதுவை மூவரும் அருந்த துவங்கினர்.. நேரம் செல்ல செல்ல போதை அதிகமாகியது..

மாப்ள செம்ம போதை ஏறிடுச்சி, அந்த பாட்ட போடு...

செல்லில் “ஆலுமா டோலுமா” ஒலிக்க ஆரமித்தது மூவரும் எழுந்து ஆட ஆரமித்தனர்..

ஒரு வழியாக ஆடிக்களைத்து முடித்ததும், தள்ளாடி தள்ளாடி நடக்க ஆரமித்தனர்.
போதை கண்களை மறைக்கக் நடந்து கொண்டிருந்தவர்களின் கண்களில் ஒரு மரத்தின் அடியில் ஒரு லிங்கம் கண்ணில் பட எல்லோரும் அதன் அருகில் சென்றனர். லிங்கம் அப்பொழுது தான் பூஜை நடந்தது போல தீபம் ஏற்றபட்டு மாலையுடன் இருந்தது. சுற்றுபுறமெங்கும் சந்தனத்தின் வாசம்.

மச்சி இங்க பார்ற லிங்கம். அதன் அருகில் சென்று சுற்றிச் சுற்றி பார்த்தனர்..

பின் ஓரிடத்தில் அமர்ந்து மீதமிருந்த மதுவகைகளை அருந்த துவங்கினர். ஒருவன் சூட்டோடு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க தீப்பெட்டியை தேடினான்..

மாப்ள லைட்டர கொண்டா..

மாப்ள கொண்டு வரலடா...

ஏன்டா, சிகரெட்ட வாங்கி ஒரு தீப்பட்டி கூடவா வாங்காம வருவீங்க என்று அலுத்துக் கொண்டவன் கண்ணில் சிவலிங்கம் அருகே எரிந்து கொண்டிருந்த தீபம் கண்ணில் பட தள்ளாடி எழுந்து அதன் அருகில் சென்று தீபத்தை எடுத்து பற்ற வைக்க முயன்றான் திடும்மென யாரோ ஊதி அணைத்தது போல தீபம் அணைந்தது..!!

என்ன மச்சி பத்த வச்சுட்டியா..?

ச்சே.. இல்லடா அணைஞ்சுருச்சு..

சரி வாடா பாத்துக்கலாம்..
வந்து அமர்ந்து மது அருந்த துவங்கினான்.. எதிர்பாராமல் சிவலிங்கம் பக்கம் திரும்ப அங்கே தீபம் மீண்டும் திரும்ப எரிந்து கொண்டிருந்தது.!!

மாப்ள.. மாப்ள விளக்கு எரியுதுடா..

திரும்பி பார்த்து, டேய் சரியா பார்த்தியா.? இல்ல போதைல உளர்ரியா.?

மாப்ள நான் என்னை பொய்யா சொல்றேன் பத்தவைக்கும் போது அணைஞ்சு போய் இப்போ மறுபடியும் எரியுதுடா என அதிர்ச்சியுடன் சொல்ல,
அதே சமயம் அருகில் பாறையில் புலி வந்து நின்று அவர்களை பார்த்து உறும துவங்கியது..!!

உறுமல் சத்தம் கேட்டு ஒருவன் திரும்பி பார்த்து,

மாப்ள.. பு.. புலி.. புலிடா..

டேய் சும்மா இர்ரா இவன் வேற..

டேய் நிஜம்மா தான்டா அங்க பாரு.. என்று அவன் தலையை திருப்பி காட்ட, புலியை பார்த்து அவனுக்கு மொத்த போதையும் இறங்கி போனது..
புலி திடிரென அவர்களை நோக்கி பாய்ந்தது.. மூவரும் திசைக்கொன்றாக சிதறி ஓட ஆரமித்தனர்..



4
அசுவினியார் என்ற சித்தர் மூலிகைகள் மற்றும் அவற்றின் நுட்பங்கள், கோவில்கள் அதன் சூட்சுமங்கள், தனது வாழ்நாள் அனுபவங்கள் பலவற்றை தொகுத்து ஒரு நூலக எழுதினார். அந்த நூலின் பெயர் “கர்ம காண்டம்” பன்னிரென்டாயுரம் பாடல்கள் கொண்ட அந்த நூல் அவரது மாணவர்களை கருத்தில் கொண்டு எழுதபட்டது. அசுவினியார் எழுதிய இந்த நீள் சதுரகிரியில் எங்கே எவ்வாறு மறைக்கப்பட்டுள்ளது என்பதை அகத்தியர் தனது “ஏம தத்துவம்” என்ற நூலில் பின்வருமாறு சொல்லிருக்கிறார். சதுரகிரியில் மேற்கு பகுதியில் திட்டன இடத்தில் மறைவாக ஒரு சுரங்கம் உள்ளதாம். அந்த சுரங்க வாசலில் ஆஞ்சிநேயர் காவலுக்கு இருக்கிறார். அவரை தாண்டி உள்ளே செல்ல சித்தர் காவல் இருக்கிறதாம். அவரை வணங்கி அருள் கிடைக்க வேண்டியும், என் சந்தேகங்களை போக்கிக் கொள்ளும் பொருட்டு சிறப்பான கர்ம காண்டம் என்னும் பெரு நூலை காண்பதற்காக இங்கு வந்தேன் என்று அவர் தாள் பணிந்து வணங்க அவரும் படிக்க தந்தருள்வார்.. என்று அகத்தியர் சொல்கிறார்.



சதுரகிரி மலையடிவாரம் தாணிபாறையில் காரில் இருந்து இறங்கினர் சாமிநாதனும் அவர் மனைவியும் குமாரும்..

ஐய்யோ.. எவ்வளோ பெரிய மலை, ப்பா.. வாங்கப்பா மலைக்கு போலாம் இளித்தான் குமார்..

போலாம்டா ராஜா இருப்பா.. என்று விட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று தூரத்தில் பிள்ளையார் கோவில் ஓன்று இருந்தது சென்று வணங்கி விட்டு மலைக்கு போகும் பாதையில் ஏற எத்தனித்தனர்..

அய்யா கொஞ்சம் நில்லுங்க.. அந்த பெரியவர் அவர்களை அழைத்தார்.
யார் நீங்க மலைக்கு எதுக்கு போறிங்க.?

சாமிநாதன் விஷயத்தை சொன்னதும், ஓகோ.. அப்படியா.? அப்போ நீங்க இதுக்கு முன்னாடி மலைக்கு வந்ததில்லன்னு சொல்லுங்க.. என்று விட்டு குமாரையும் ஒரு பார்வை பார்த்தார்..

சரி.. செருப்ப கழட்டிட்டு வாங்க நானே ஆகாச லிங்கம் கோவிலுக்கு தான் இப்போ போயிட்டு இருக்கேன் உங்களையும் அப்படியே கூட்டிட்டு போறேன்..
பக்கதர்கள் கூட்டம் “ஹர ஹர மகாதேவா” என்ற கோஷத்துடன் மலையில் ஏறிக்கொண்டிருந்தது..
அவர்களுடன் சேர்ந்து ஏற எத்தனித்தனர். பெரியவர் தடுத்தார்..

அந்த பக்கம் வேணாம், நாம இந்த பக்கமா போகலாம் என்று இன்னொரு வழியை காமித்தார்..

சாமி எல்லோரும் இந்த பக்கம் தான போயிட்டு இருக்காங்க. இது தான மலைக்கு போகும் பாத.?

மலைக்கு அந்த பக்கம் போலாம் தான்.. இது குறுக்கு வழி சீக்கிரமா போய்டலாம் வாங்க. என்றபடி அவர் அந்த பாதையில் நடக்க, வேறு வழியின்றி அவர்களும் துவங்கினர்..

ஒருமணி நேரத்துக்கும் மேலான நடை.. செல்லும் வழியெங்கும் மனத்துக்கு ரம்மியான காட்சிகள்.. ஆங்காங்கே அருவிகள், நிருற்றுகள், வானளாவ மரங்கள், இதுவரை பார்த்திராத பூக்கள், வித்தியாசமான விலங்குகள்..

போகும் வழியில் ஒரு மரம் அதனடியில் நூறு ஆடுகளை ஒரே சமயத்தில் வெட்டினால் தேங்கும் ரத்தம் போல மரத்தை சுற்றி இருந்தது, பார்க்கும் போதே திகிரென்ற்றது.. அதை கவனித்த பெரியவர்

என்ன பாக்குறிங்க அது ரத்தகாட்டேரி மரம், அந்த மரத்துல இருந்து எப்பவும் அதனோட பால் வழிஞ்சுட்டே இருக்கும், அது சிகப்பா இருக்குறதால அப்படி இருக்கு நீங்க பயப்படாம வாங்க என்றபடி அவர் நடக்க துவங்கினார்..
சாமிநாதனின் சட்டையை பிடித்து அவர் மனைவி இழுத்தார்..

ஏங்க நாம எவ்வளவு தூரம் தான் நடந்துட்டு இருக்குறது ஆகாச லிங்கம் சன்னதியும் வந்த மாதிரி தெரியல.. எனகென்னமோ இந்த பெரியவர் மேல சந்தேகமா இருக்குக்குங்க..

என்னம்மா சொல்ற.?

இப்பலாம் யாரையும் நம்ப முடியறது இல்ல. தந்திரமா நம்மள கூட்டி போய் நம்ம நகைகள திருட முயற்சி பண்ண போரறோனு தோணுது..

என்ன உங்க மனைவி என்ன திருடன்னு சொல்றாங்க போல என்று மனதை படித்தது போல கேட்டார்..

அ.. அப்படிலாம் இல்லைங்க சாமி இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்னு கேட்டுட்டு இருந்தா. சாமிநாதனிடம் நிறையவே சமாளிப்புகள்..

ரொம்ப தூரம் இல்ல பக்கத்துல தான்.. கூடவே நீங்க பேசியது எனக்கு தெரியும் என்பது போல மர்ம சிரிப்பு.. அப்படியே நடக்க துவங்கினார்..

என்னங்க நாம மெதுவா தான பேசிகிட்டோம் எப்படி கண்டு பிடிச்சார்..?

நீ கொஞ்சம் பேசாம வர்றியா என்று அதட்டி விட்டு திரும்பினால் அங்கெ அந்த பெரியவரை காணம்...!!!!


5


சதுரகிரி வனத்தின் மற்றொரு மர்மம். “ தைலக் கிணறு” பிலாவடி கருப்பண்ண சாமியின் கோவிலுக்கு பின்புறம் மறைவாய் இருப்பதாய் கருதபடுகிறது இந்த கிணறு. இரசவாதம் செய்வதற்கான மூலிகை மிகுதி இந்த கிணற்றில் கொட்டப்பட்டு அதற்க்கு காவல் தெய்வங்கள் சித்தர்களால் நியமிக்கப்பட்டு சாமானியரின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அது பற்றி “போகர் ஜெனன சாகரம்” என்றதில் குறிப்பும் காணபடுகிறது. உண்மையான தேடலோடு வருபவர்களுக்கு மட்டும் இந்த தைலக் கிணறு காண கிடைக்கும் என்று போகர் சித்தர் சொல்கிறார்.. இது மட்டும் கிடைத்தால் இரும்பை எளிதில் தங்கமாக்கலாம்..




புலியைக் கண்டு மூவரும் மூன்று புறங்களிலும் சிதறியோட ஆரமித்தனர்.. அந்த புலியும் மூன்றாக மாறி அவர்களை துரத்த ஆரமித்தது தான் ஆச்சரியம்..
ஓட, ஓட அவர்களை புலி துரத்திக்கொண்டே இருந்தது.. போதை சுத்தமாக போய் உயிர் ஆசை மேலிட தண்ணிரை சிதறடித்துக்கொண்டும் பாறை தடுக்கி விழுந்தடித்துக் கொண்டும் ஓடிக்கொண்டிருந்தனர்..

சிவலிங்கத்தின் தீபத்தை சிகரெட்டுக்கு பற்ற வைக்க முயன்றவன் ஓடிக்களைத்து ஓரிடத்தில் மூச்சு வாங்க நின்று பின்னால் திரும்பி பார்த்தான். துரத்தி வந்த புலியைக் காணவில்லை.. பெருமூச்சு விட்டவாறே ஒரு மரத்தின் கிளையை பிடித்துக்கொண்டு நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்..
அதே நேரம் மரக்கிளையில் படம் விரித்தபடி ஒரு நல்ல பாம்பு..!!

யப்பாடி நாம எங்க இருக்கோம்.? அவனுங்க எங்க இருக்காங்கனு நான் இந்த காட்டுல எங்க போய் தேடுவேன்.? என்றபடி சுற்றுமுன்றும் பார்த்தவன் மரக்கிளையில் படம் விரித்தபடி இருக்கும் பாம்பு கண்ணில் பட, பாம்பு ஸ்ஸ்ஸ்ஸ்.. என்று சீறிக்கொண்டே சரியாக அவன் கையில் ஒரே போடு.. சுருண்டு விழுந்தவன் வாயில் நுரை கக்கி இறந்து போனான்..

இரண்டாமவன் திரும்பித் திரும்பி பார்த்தபடி ஓடிக்கொண்டிருந்தான். புதக் என ஒரு சகதியில் விழ,, அவன் முகமெங்கும் சேறு அப்பிக்கொண்டது. விழுந்தவன் மேல எழ முயற்சிக்க மாறாக, உள்ளே அமிழ ஆரமித்தான்.. அது சகதி அல்ல புதைக்குழி என்பதை உணர்ந்து மரண பயத்தில் நீச்சலடிப்பது போல கை கால்களை அசைக்க ஆரமித்தான்.. ஆனால் முடியவில்லை.. கால்கள் எவ்வித பிடிப்புமின்றி கிழே கிழே செல்ல அவன் கொஞ்ச கொஞ்சமாக புதைகுழிக்குள் முழ்கி காணாமல் போனான்..

மூன்றமவன் கண்மண் தெரியாத வேகத்தில் ஓடிக்கொண்டே இருந்தான்.. ஒரு கட்டத்தில் கல் தடுக்கி கிழே விழுந்தவன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான்.. காற்றில் எங்கிருந்தோ சுகந்த வாசனை. அது அவனை வசியம் போல அவனை கட்டி இழுக்க, அவன் நடந்து கொண்டே இருந்தான் நடந்து கொண்டே இருந்ததில் கொஞ்ச கொஞ்சமாக தன்னை மறந்தான்.. தான் யார் என்பதும், தன்னை துரத்தி வந்த புலியை, தனது நண்பர்களை எல்லாம் கொஞ்ச கொஞ்சமாக எல்லாவற்றையும் மறந்தான் ஒரு கட்டத்தில் மனத்தில் எண்ணங்களே இல்லாமால் தண்ணீருக்குள் அமிழ்ந்து போவது போல, ஒரு மாபெரும் கட்டடத்தில் இருந்து கிழே தவறி விழுந்து சென்று கொண்டிருப்பவனை போல அவன் தன்னை மறந்து போனான் அந்த “மதி மயக்கி வனத்தில்”..!!




6
முன்னால் சென்று கொண்டிருந்த பெரியவரை காணாமல் திகைத்த சாமிநாதன் சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தார் அவரை காணவில்லை..

ஏங்க எனக்கு பயமா இருக்குங்க இந்த திக்கு தெரியாத காட்டுல நம்மள இப்படி விட்டுட்டு போயிட்டாரே அவரு. என அவர் மனைவி புலம்ப ஆரமித்தார். சாமிநாதனும் கலங்கி தான் போனார்.. சாமி, சாமி என கத்திப் பார்த்தார்.. பாரவைகளின் சத்தத்தை தவிர வேறு சத்தத்தைக் காணம்..
நடப்பது எதுவும் தெரியாமல் பறவைகளையும் அணில்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த குமார் கண்ணில் அந்த பட்டாம்பூச்சி தெரிந்தது..

ப்பா.. ப்பா.. பட்டாம்பூச்சிப்பா பிடிச்சிக்கொடுப்பா.. ப்ளீஸ்ப்பா.. ப்பா..

டேய் சும்மா இருடா நாங்களே தவிச்சு போய் இருக்கோம்..

ம்மா... ம்மா... அப்பா கிட்ட சொல்லும்மா.. ம்மா.. ம்மா.. சொல்லுமா..

சாமிநாதனின் மனைவி அமைதியாய் இருக்கவே, குமார் திடிரென பட்டாம்பூச்சியை நோக்கி ஓடத்துவங்கினான்..
இதற்க்கு தான் காத்திருந்தது போல பட்டாம்பூச்சியும் பறக்க ஆரமித்தது. குமார் அதன் பின்னாடியே ஓட ஆரமித்தான்..

டேய் டேய் குமார் நில்லு நில்லுன்னு சொல்றேன்ல நில்லுடா சாமிநாதனும் அவர் மனைவியும் குமாரை பிடிக்க துரத்த துவங்க ..

பட்டாம்பூச்சியை துரத்த துவங்கிய குமார் அதன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் சரிவைக் கவனிக்காதவன் தவறி அதில் விழுந்து கிழே உருள ஆரமித்தான்..

அம்மா... அப்பா....

அதிர்ச்சியடைந்த சாமிநாதனின் மனைவி ஏங்க... போங்க அவன காப்பாத்துங்க..

சரிவில் தெரிந்த இன்னொரு பாதையில் அவர்கள் கீழ் நோக்கி இறங்க ஆரமித்தனர்..

உருண்டு கொண்டே இருந்த குமார் சமதளம் போல இருந்த ஒரு பரப்பில் போய் விழுந்தான்.. விழுந்தவனிடமும் சன்னமான மயக்கம்..

கிழே வந்த சாமிநாதன் குமாரை தொட்டு உலுக்க ஆரமித்தார்.

குமாரு டேய் குமாரு எழுந்துருடா,,

ஐயோ என் மகனுக்கு என்னமோ ஆகிருச்சே என்னங்க எதாவது பண்ணுங்க..

பதறாத கீழ உருண்டதுல மயக்கம் ஆகிருக்கான் இரு, இங்க எதாவது தண்ணி கிடைக்குதான்னு பார்கிறேன் என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தார் சாமிநாதன்..
பக்கத்தில் சற்று தூரத்தில் ஒரு சிவலிங்கம் கண்ணில் பட அதை நோக்கி சென்றார்..
ஊதுபக்தி வாசத்தோடு கம கமவென இருந்த சிவலிங்கத்தை கண்டவர் முறைத்தார்..
உன்ன நம்பி வந்தவங்கள இப்படியா சோதிப்ப..? என்றபடி தண்ணிர் இருக்கிறதா என சுற்றி சுற்றி பார்த்தார் இல்லை.. சிவலிங்கத்தின் அருகில் யாரோ அபிஷேகம் செய்த பால் மட்டும் தேங்கிருக்க அதை அப்படியே கைகளில் வழித்து எடுத்து குமாரை நோக்கி ஒடி வந்தார் குமார் மீது அப்படியே தெளிக்க..
குமாரிடம் அசைவு..

அப்பா.. அம்மா..

அய்யா ராசா எழுந்துருடா..

அம்மா அப்பா என்றபடி மலங்க மலங்க சுற்றும்முற்றும் பார்த்தவன் அப்பா நாம எப்படி இங்க வந்தோம்..?
சாமிநாதனிடம் பலத்த ஆச்சரியம்..

குமாரு உனக்கு நினைவு வந்துருச்சா.?

எனக்கு என்னாச்சுபா? கடைசியா எனக்கு ஆக்சிடன்ட் ஆனது வர நினைவு இருக்கு அதுக்கப்புறம் ஒன்னும் நினைவுக்கு வரல.. என்றவனை சாமிநாதனின் மனைவி கட்டிக்கொண்டாள்.. குமார் எழுந்திருக்க உதவியவர். நடந்ததை விளக்க ஆரமித்தார்..
சற்று துரத்தில் மணி சத்தம் கேக்க எல்லோரும் அங்கு திரும்பினர்..

ஒரு சாமியார் ஒருவர் சிவலிங்கத்தை பூஜித்தபடி இருக்க, அங்கு சென்றனர்..

யார் நீங்க.?

சாமி நாங்க மதுரைல இருந்து வர்றோம் இங்க ஆகாச லிங்கத்த தரிசனம் செய்ய வந்தோம்..

அப்படியா.? நல்ல நேரத்துல தான் வந்துருக்கிங்க.! இது தான் அந்த ஆகாச லிங்கம். இருங்க தீபாராதனை முடிச்சுக்கலாம் சாமிய கும்பிட்டுக்கோங்க.. என்றபடி தீபாராதனை காட்ட ஆரமித்தார்..

மனமுருக சாமிநாதனும் அவர்மனைவியும் லிங்கத்தை கும்பிட்டுக்கொண்டனர்..

சாமி..

என்ன கீழ போகனுமா..? வாங்க நானும் கிழ தான் போயிட்டு இருக்கேன்.. நடந்ததையெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டவர்

விதி இருக்குறவங்க தான் இந்த கோவிலுக்கு வருவாங்க. இங்க வந்தா சரியாகும்னு உங்க பையனுக்கு விதி, மனுசங்க காலடி என்னைக்கு இங்க பட ஆரமிச்சதோ அன்னைகிருந்து இதோட புனிதம் போக ஆரமிச்சுடுச்சு.. ஆனா இந்த வனம் வித்தியாசமானது தன்னை தானே புதுபிச்சு காப்பாத்திகிடும் என்ற சாமியாரின் பேச்சில் நிறையவே உள்ளர்த்தங்கள், பேசிக்கொண்டே கிழே வந்ததும் நன்றி சொல்ல அந்த சாமியாரை தேடினால் அவரைக் காணவில்லை..

அவர்கள் மலையை ஒரு கும்பிடு போட்டு விட்டு அவர்கள் காரில் ஏறி செல்ல ஆரமித்தனர்..
சற்று தூரத்தில் அவர்களை மலைக்கு கூட்டிபோன பெரியவர் அவர்களை பார்த்து மர்ம சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தார். அப்படியே மலையை நோக்கி ஓம் நமச்சிவாய என்று கும்பிட..

ஓம் என்ற சப்தம் மலை திரும்ப எதிரொலித்தது...

எழுதியவர்
-அருள்.ஜெ

எழுதியவர் : அருள் ஜெ (10-Jun-18, 9:26 pm)
Tanglish : manthira vanam
பார்வை : 1561

மேலே