அரைவட்ட நிலாக்கள்
கேள்விகளையெல்லாம்
நான்
கேட்டுக்கொண்டிருப்பேன்
விடைகளின் மொத்த
உருவமாய் அவள்
நடந்து செல்வாள்! என்னை
கண்டு கொள்ளாது!
கவிதையின் வாசனையே
அறியாத நான் அவளின்
அழகுதனை வர்ணிக்க முயன்று
விடியலின் வாயிலில் வந்தும்
ஒரு முழு கவிதை வடியாது
வருத்தமுற்று
உறங்கியிருக்கிறேன்!
ஆயிரம் முறை அவளை நான்
பார்த்தாலும் அதிலோ
ஒருதுளியும் அர்த்தமிருக்காது
ஒருமுறை அவள் என்னைப்
பார்த்தால் அதிலோ ஆயிரம்
அர்த்தங்கள் உள்ளதாய்
ஆனந்தத் தாண்டவமாடும்
எனது உள்ளம்!
அவளது இதயத்திற்குள்
என்னை வைத்து
கல்லூரியின் பாட புத்தகங்களை
அவளின் மார்பின்மீது
வைத்துக் கொண்டு
நடைபோடுவாள் என்னை நான்
காண விடாது!
அரைவட்ட நிலாக்கள்
என்னிடம் நிறைய
இருக்கிறதென்றேன்
புரியாமல் திகைத்தாள்
அவளுக்கு எவ்வாறு தெரியும்?
அவள் வெட்டி எறிந்த தனது
விரல் நகங்கள்தான்
அது என்பது!