நீயே நிழலானால்

நீரின் மேல்விழும் மரநிழல் போலவே
நிழலாய் என்னுடன் வந்தாய் - என்
நினைவில் என்றும் நின்றாய் - மின்னும்
முத்துக்கள் பூத்த கொடியினை போலவே
முகத்தில் புன்னகை கொண்டாய் - என்னை
முழுவதும் நீயே வென்றாய்

பாவை உந்தன் அழகை கண்டு
பரவசம் அடைந்தேன் நானே - காதல்
பைத்தியம் ஆனேன் நானே - காலம்
சேர்ந்து தடைகள் நீங்கி நாமிருவர்
சேரும் நாளெது மானே? - நாம்
சேர்ந்தால் இன்பம் தானே

கண்மணியே அழகே கவியெழுதி உன்னிடம்
காதல் சொல்ல வந்தேன் - என்
காதல் மனதை தந்தேன் - கொண்ட
ஆசைகள் அனைத்தையும் ஏட்டில் எழுதி
அன்பை பொழிய வந்தேன் - உன்னை
அள்ளிக் கொள்ள வந்தேன்

தென்றல் தீண்டும் உணர்வை நீயும்
தீண்ட தீண்ட உணர்ந்தேன் - என்
சிந்தை மயங்கி நின்றேன் - உயர்
வானில் பறக்கும் பறவை போலவே
மனவானில் நானும் பறந்தேன் - எந்தன்
மனக்கவலை எல்லாம் மறந்தேன்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:28 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 82

மேலே