பெண்டாட்டி தாசன்

பெண்டாட்டி தாசன்
==================

மண்ணுலகில் பிறவியெடுத்து மனிதனாய் வாழ
..........மனைவியும் அமைய வேண்டும் நல்லவளாக.!
கண்ணாளனாக அமைய வேண்டும் கணவனும்
..........காலமதற்கு ஓரளவேனும் கைகூட வேண்டும்.!
எண்ணத்தில் எத்துணையோ ஆசைகள் நிறைய
..........ஏங்கும் மனைவியின் தேவையறிந்து கொண்டு.!
வண்ணத் துணிமணிகளை வாங்கித் தருவீர்
..........வகையாய் கம்மல் ஜிமிக்கி அன்பளிப்பாக்குவீர்.!


தவமிருந்து பெற்றதைப்போல் அவளுமே நல்ல
..........தாரமாக அமைதல் வேண்டும் இறையருளால்.!
அவள் கொடுக்கும் அன்புக்கு வெகுமதியாக
..........ஆராய்ந்து பரிசளிப்பீர் இல்லறம் செழிக்கவே.!
தவறென்று அவளெதையும் சுட்டிக் காட்டினால்
..........தவறாமலவை நடக்காது பார்த்துக் கொள்வீர்.!
சுவரை வைத்தே சித்திரமும் என்பதுபோல்
..........சுகமாய் குறைவிலாமல் கவனித்துக் கொள்வீர்.!


இலக்கு ஒன்றை நிர்ணயித்து இல்வாழ்க்கை
..........இன்பமாக்க இல்லாளின் துணை அவசியமே.!
அலக்கழித்து அவளை அல்லல் படவைத்தால்
..........அத்துணையும் பாழாகும்! வாழ்வு நரகமாகும்.!
சலசலப்பு இல்லாத சஞ்சலமற்ற வாழ்க்கை
..........சம்சாரியின் கையில்தான் என்பதை உணருக.!
குலக்கொழுந் தாயவள் தளிர்விட குடும்பத்தில்
..........கட்டியவளுக்கு தாச னானாலும் தவறில்லை.!
=========================================
நன்றி:: கூகிள் இமேஜ், வல்லமை மின் இதழ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (2-Jul-18, 2:08 pm)
Tanglish : pendaatti thasan
பார்வை : 163

மேலே