தலையணை

தலையணை மந்திரம்...
அங்கம் புதைத்து
ஆரத் தழுவி
இயல்பினை மறந்து
ஈர்க்கும் காதலி...
உச்சிதனை முகர்ந்து
ஊடல் உணர்த்தி
எத்தனை முத்தம்
ஏந்திய கரங்களில்...?
ஐந்திணை கண்ட பைம்பொழில் பொண்ணே...!
ஒருநாளும் உனையன்றி
ஓரம்கிடந்து உறங்கியதில்லை
ஔவையும் அந்நாளில் எழுதியதில்லை
அஃதும் பின்நாளில் பிரித்துணர்ந்தேன்...
கன்னங்களில் எச்சில் காணவில்லை
காலமெல்லாம் உன் தேகத்தினில்...
கிழப்பருவம் தொடங்கிய பின்பும்
கீறல் கூட தருவிடவில்லை...
குரல்வளை பொங்கி எழும் ஒலியும்
கூற்றில் கூட கண்டதுமில்லை...
கெஞ்சியும் அஞ்சியும் மிஞ்சியும் வாழ்வது
கேளிக்கையென கோபம் கொண்டு நின்றாயோ...!
கைதியாக வைக்கட்டுமா ஒரு நிபந்தனை...
கொடையாளி நீயானால் கொடுத்துவிடு உன்மனதை
கோரிக்கை மெய்யானால் விடுதலை செய் மண்ணகத்தே...!
கௌதமன் நீல்ராஜ்...