போரும் மனித வாழ்க்கையும்

போரும் மனித வாழ்க்கையும்

சாதாரண வாழ்க்கை வாழும் நாம் சாதாரணமாகவே நம் வீட்டில் உள்ளவர்களுடனோ, நண்பர்களுடனோ சண்டையோ, சச்சரவிலோ ஈடுபட்டு விட்டோமென்றால் அன்றைய நாள் முழுக்க நமக்கு மனசில் ஒரு வருத்தம் இருந்து கொண்டே இருக்கும், இது உண்மைதானே?

ஆனால் யோசித்து பாருங்கள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் நம் மனித இனம் பல்வேறு போர்களை நடத்திக்கொண்டே இருக்கிறது. இந்த கட்டுரை படித்துக்கொண்டிருக்கும் போதே எங்கோ ஒரு இடத்தில் ஒரு வெடி விபத்தோ அல்லது, மற்ற நாட்டுடன் சண்டைகளோ, இல்லை உள் நாட்டிலேயே கலவரங்களோ நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவ்வாறு சண்டையிட்டு கொள்பவர்கள் அனைவருமே இதை விரும்பி செய்கிறார்களா, இல்லையா என்பது நம் கேள்வியன்று? அதன் காரண காரியங்களை பற்றி ஆராய்ச்சி செய்வதும் இக்கட்டுரையின் நோக்கம் அன்று.. மனித வாழ்க்கை என்பது நாகரிக வளர்ச்சியோடு “போரிடுதல்” என்பது சார்ந்தே இருந்திருக்கின்றது.

மனித இனம்

மனித இனம் இயற்கையுடன் வாழ்ந்த காலத்தில் மனித வாழ்க்கைக்காக வேட்டையாடியும், பழம் கொட்டைகளை உண்டும் வாழ்ந்து வந்தார்கள். இவைகள் இயற்கையிலேயே கிடைப்பவைகளாக இருந்தமையால் பெரும் போராட்ட களமாக வாழ்க்கை இருந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதன் பின்னர் அவன் தன் இடத்தை விட்டு நகர்ந்து உணவு தேடலில் ஈடுபடும் போதுதான் இந்த பிரச்சினை ஆரம்பிக்கிறது எனலாம். ஆனால் முதலில் மனிதன் தன் இடம் பெயர்தல் வாழ்க்கையில் ஆற்றோராமாக தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறான். அப்பொழுது கூட வாழ்விடம் அமைப்பது என்பது அவனுக்கு தெரியாமல்தான் இருந்திருக்கிறது. கிடைக்கும் பாறை சந்துகளிலும், பொந்துகளிலுமே வாழ்ந்திருக்கிறான். இப்படி அமைந்திருப்பதால்தான், அவனால் இடம் விட்டு இடம் நகர ஏதுவாக இருந்திருக்கிறது. அதற்கு பின் அவன் தாங்கள் நிரந்தரமாக இருக்க வசிப்பிடங்களை ஏற்படுத்திக்கொள்ள நினைக்கிறான். அப்பொழுது அவனுக்கு தேவையான உணவுகளுக்காகவும், தங்குவதற்காகவும் புகலிடங்களை ஏற்படுத்தி கொள்கிறான். அவர்கள் கூட்டமாக இருப்பதால் ஒரு சமூகமாக அமைந்து விடுகிறது. இந்த சமூகத்தின் பாதுக்காப்புக்கு சில ஏற்பாடுகளை செய்ய தொடங்குகிறான். அதனால்தான் பெரிய பெரிய அரண்கள் அமைக்க தொடங்குகிறார்கள் அப்படிபட்ட அரண்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவைகளின் காலம் 7000 வருடங்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள்
இவர்களின் வாழ்விடங்கள் மரங்களாலும், மண்ணாலும் குடிசை கட்டி வாழ்ந்த காலம் கி.மு.5700 என்று கூறுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் மனித பெருக்கமும் தொடங்கியிருக்கலாம்.
இப்படி ஒவ்வொரு குழுக்களாக தொடங்கி அது ஒரு சமூகமாக மாறும்போது அதாவது கற்களை, எலும்புகளை கொண்டு ஆயுதங்கள் தயாரித்து கொண்டு ) தங்களை பாதுகாத்து கொள்ளவோ, அல்லது எதிர்க்குழுக்களின் பொருட்களை களவாடவோ அவர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கிறார்கள். இது “ஆரம்ப கால போர்” என்று வைத்துக்கொள்ளலாம்.
அடுத்ததாக நிலைத்த வாழ்க்கைக்கு வேட்டையாடுதலோ, அல்லது காய் கனிகள் உண்பதிலோ அல்லாமல் “விவசாயம்” என்னும் தொழிலை ஆரம்பிக்கிறார்கள். விவசாயம் ஆரம்பிக்கபடும் முன்னரே கால்நடைகளை “மேய்த்தல்” தொழில் தொடங்கி விட்டது..சில காட்டு விலங்குகளை பழக்கி மனித இனத்தோடு ஒத்து வாழ அவைகளை பழக்கி விடுகிறான். இதன் காரணமாகவும் இனங்களுக்குள் அல்லது சமூகத்துக்குள் சண்டை ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கிறது. இந்த சண்டைகள் பெரும் மனித அழிவை ஏற்படுத்தும் அளவுக்கும் இருந்திருக்காது என்பது திண்ணம். காரணாம் அப்பொழுது எந்த உலோகங்களும் மனிதர்களால் கண்டு பிடிக்கபடாமல் இருந்தது.
கி.மு.3000ல் செம்பின் கண்டு பிடிப்பும், கி.மு.1000 ல் இரும்பின் கண்டு பிடிப்பும் மனித இனத்திற்கு பெரிய கண்டு பிடிப்பாக ஆயுதங்கள் உருவாக்க காரணமாக இருந்தது. இதனால் மனித வாழ்க்கையில் பெரும் புரட்சி மாற்றம் ஏற்பட்டது. இவர்கள் சேர்ந்திருக்கும் கூட்டம் ஒரு அரசுவாக செயல்பட்டன. அவற்றிற்கு ஒரு தலைமை உருவாக்கப்பட்டது. மாற்றார் நிலத்தை ஆக்ரமித்தலும், அவர்கள் கூட்டத்தை வசப்படுத்த யுத்தங்களும் ஆரம்பித்தன.
இப்படி குழுக்களாக பிரிந்து அவைகளுக்கு ஒரு தலைமை ஏற்பட்டு அவர்களை மஹாராஜாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் வாரிசு தோன்றல்களும் வளர ஆர,ம்பித்தன. இப்பொழுது இரும்பின் தோற்றமும், செம்பின் தோற்றமும் பல்வேறு ஆயுதங்களை உற்பத்தி செய்வதன் மூலம் தங்கள் அரசை காப்பாற்றிக்கொள்ளவும், மற்ற அரசுகளை தாக்கி அழிக்கவும் ஆரம்பித்தனர். இப்படி யுத்தங்களும் மனித வாழ்க்கை நாகரிகத்தில் பரிணாம வளர்ச்சி பெற்றது.
இப்படி குழுக்களுக்குள் வரும் மோதலை தவிர்த்து குழுக்களுக்குள்ளே ஏற்படும் சண்டை சச்சரவுகளை தீர்க்க நீதி நிர்வாகம் போன்றவைகள் மெல்ல தோன்ற ஆரம்பித்தன. இவைகளுக்கு தலைமை ஏற்க ஒரு சில தகுதிகள் ஏற்படுத்தப்பட்டு அந்த இடத்துக்கு வர சில போராட்டங்களும் தேவைப்பட்டன. மனித வளர்ச்சி நாகரிக வழ்க்கையை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறலாயிற்று.
இப்படி ஆரம்பித்த குழுக்கள் அரசுகளாகி அவைகளுக்குள் தலைமை ஏற்படுத்தி அவர்கள் மற்ற அரசுகளை மண்டியிட வைக்க போர்களை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முக்கியமானவர்கள்

மாவீரன் அலெக்சாண்டர் (கி.மு. 356-323)
இளம் வயதிலேயே உலகம் முழுவதையும் கைப்பற்றி ஆட்சி புரிவேன் என்ற வேட்கையோடு மாசிடோனியாவிலிருந்து படையுடன் புறப்பட்டான். மாசிடோனியா கிரேக்க நாட்டின் வட புறத்தில் இருந்தது., இவன் தொடர்ச்சியாக எகிப்து, பாபிலோனியா போன்ற நாடுகளை கைப்பற்றி ஆசியாவுக்குள் நுழைந்தான். சிந்து நதியை கடந்து இந்திய பஞ்சாப் நகரை கைப்பற்ற முயன்றான். அவன் வைத்திருந்த குதிரைப்படையே அவனை பெரும் வெற்றி பெற வைத்தன. ஆனால் இந்தியாவில் இருந்த யானைப்படையால் அவனது வெற்றி என்பது சற்று கேள்விக்குறியாயிற்று. அதனால் அவனது வீர்ர்களின் மன சோர்வும், தன் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற அவர்களின் எண்ணமும் அலெக்சாண்டரை தன் நாட்டுக்கு திரும்ப வைத்தது. பாபிலோனை அடைந்த வேளை கி,மு,323 ல் நோயுற்று இறந்தான்.


செங்கிஸ்கான்.
அடுத்த்தாக மங்கோலியத்தலைவன் செங்கிஸ்கான் 1157-1227) குதிரை படையுடன் சீனாவின் ஒரு பகுதி, துருக்கி, ஆப்கானிஸ்தான், உள்பட தென் கிழக்கு ஐரோப்பாவையும் ஆக்ரமித்து ஆண்டான். இவனின் இவ்வளவு நீண்ட தூர பயண வெற்றி கண்டிப்பாய் அவனது குதிரைப்படை மூலமே சாதித்து இருக்க முடியும். ஏனெனில் இவனது எண்ணற்ற வெற்றி பயணம் மிக நீண்ட தொலைவு கொண்ட்தாய் இருக்கிறது.
சிலுவை யுத்தம்
முஸ்லீம்களிடமிருந்து கிறிஸ்துவ நிலத்தை மீட்க மேற்கு ஐரோப்பியர்கள் நடத்திய சிலுவை யுத்தம் இரண்டு நூற்றாண்டுகள் நீடித்த போதும் அவை தொடர்ந்து நடை பெறவில்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் 1095 ம் ஆண்டில் இருந்து விட்டு விட்டு நடந்தன.
நாகரிக வளர்ச்சியினாலும், கல்வியினால் ஏற்பட்ட மாற்றங்களாலும் பல்வேறு நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தோன்றலாயிற்று. அதே போல் மனித அடிமைத்தனமும் வேர் விட்டு வளர்ந்தன.
தேர்ந்தெடுத்த அரசுகள் தோன்றினாலும், ஒரு சில நாடுகளில் தேர்ந்தெடுத்தவர்களின் நாடு பிடிக்கும் ஆசையினால் பெரும் போர்கள் தோன்ற காரணமாயிற்று.. இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக ஐரோப்பாவில் நெப்போலியன் நடத்திய யுத்தமாகும். இந்த யுத்தம் 1815 ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.. அதற்கு பின் 1914 வரை அங்கங்கு பல நாடுகளுக் கிடையில் சிறு சிறு யுத்தங்கள் நடந்து கொண்டுதான் இருந்தன.
அதன் பின் உலகையே திரும்பி பார்க்க வைத்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இரு உலகப்போர்களை உதாரணமாக கொள்ளலாம்.
முதலாவது உலகப்போர் 1914- 1918 வரை நடந்து முடிந்தது, இந்த போருக்கு பின் , இப்படிப்பட்ட போர்கள் இனிமேல் ஏற்படா வண்ணம் தடுக்க சர்வதேச சங்கம் (League of Nations) பிரெஞ்சு நாட்டில் அமைக்கப்பட்டது.. எனினும் இச்சங்கத்தால் இரண்டாம் உலகப்போர் நடை பெற்றதை தடுக்க முடியவில்லை.

இரண்டாம் உலகப்போர் -1939-1945 வரை நடந்தது. இது மிக கொடுரமாக நடைபெற்றது. இது வரை போரிடுவதற்கு உபயோகமாய் இருந்த கனரக ஆயுதங்கள் வளர் நிலை மாறி அணு ஆயுதமாக உரு கொண்டு இந்த போர் நடைபெற்றது. 1945 ஆகஸ்டு 6 ல் அமெரிக்காவால் ஜப்பானில் “ஹிரோசிமா” நகரில் போடப்பட்ட அணு குண்டால் 90,000 பேர் உடனே இறந்தனர். 1,45,000 பேர் அணுக்கதிரால் பாதிக்கப்பட்டனர். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்டு 9ல் ஜப்பானில் “நாகசாகி” என்னும் நகரில் போடப்பட்ட அணு குண்டால் நகரே அழிந்தது. 40,000 பேர் சம்பவ இட்த்திலேயே இறந்தனர். 70,000 பேர் அணு கதி வீச்சால் பாதிக்கப்பட்டனர். இவைகள் தவிர இந்த போரினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஏழு கோடிக்கு மேல் இருக்கும், ரஷ்யா,அமெரிக்கா பிரெஞ்சு, ஜெர்மனி, போன்ற நாட்டவர்கள் அதிகம் பேர் மாண்டு போயினர். பல லட்சக்கணக்கான யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டு மரணிக்கப்பட்டனர்.
இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இரு உலகப்போர்களிலும் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள், ஜெட் விமானக்க்ள், மற்றும் பல்வேறு உபகரணிகளும் இந்த யுத்த்த்தில் ஈடுபடுத்தபட்டன.
இந்த யுத்த்த்தின் அழிவை மனித குலம் பார்த்து இனிமேல் இப்படிப்பட்ட போர்கள் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது. இவற்றில் சுமார் இரு நூறுக்கும் உட்பட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு சில நாடுகள் ஐ.நா. சபையின் அறிவிறுத்தலையும் மீறி போர் நடத்திக்கொண்டிருந்தாலும் பெரிய அளவில் போர்கள் ஏற்படா வண்ணம் தடுத்துக்கொள்ள ஐ.நா.சபை முடிந்த அளவில் முயன்று கொண்டுதான் உள்ளது.
இந்தியாவில் பேரழிவுக்கு உட்பட்ட போர்கள் என்று பார்த்தால் அசோக சக்கரவர்த்தி காலத்தில் நடைபெற்ற் “கலிங்க போர்” எனலாம். வெறும் வில், வாள், வேல், குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை இவைகள் கொண்டே நடந்ததென்றாலும் நம் நாட்டை பொருத்தவரை அது பேரழிவுக்கான போர்தான். இதன் மூலம் இந்த போரினால் அசோகர் புத்த மத்ததை தழுவி, அதை வளர்ச்சி அடைய செய்தார். இதனால் “கொல்லாமை” என்னும் அத்தியாயம் தொடங்கப்பெற்றது.
மற்றபடி முகலாயர் படையெடுப்பு, ஆங்கிலேயர் படையெடுப்பு, போன்ற படையெடுப்புக்கள் நடைபெற்று இந்தியாவும் ரத்தக்களறியான சரித்திரம் உண்டு.

முடிவுரையை நோக்கி

மானிடவியல் அகழ்வாய்வு, சமூகவியல், வரலாறு சார்ந்த ஆய்வில் இன்றும் உறுதிப்படுத்தி கூற முடியாத சில நிகழ்வுகள் உள்ளன. யுத்தம் என்றால் என்ன? இந்த பகைமை, போராட்டம் இவைகள் மனித இயற்கையாக வாழ்ந்த போது ஏற்பட்டதா? இல்லை நிரந்தரமாக ஒரு இடத்தில் நிலை பெற்ற போது யுத்தங்கள் ஏற்பட்டதா? அல்லது அரசு,நகரம் போன்றவைகள் தோன்றியபோது ஏற்பட்டதா? ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் பல்வேறு வகைப்பாடுகளில் வளர்ச்சி பெற்று இன்று வரை மனித இனத்தோடு பின்னி பிணைந்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
இன்றும் சிரியா, மற்றும் சூடான்,நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், மற்றும் சில அரபு நாடுகளிலும் போர்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. சில நாடுகளில் உள் நாட்டு போர்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருகிறேன். “போர்” எங்கு தோன்றி நடந்தாலும், மனித குலம் தோன்றியது முதல் என்று வைத்துக்கொண்டாலும், இன்று வரை பாதிப்படைவது அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சராசரியான் மக்களே. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இவர்கள் சொந்த நாட்டிலே, இல்லை என்றால் பக்கத்து நாடுகளிலோ அகதிகளாக இருப்பது இன்று வரை மாறவே இல்லை.

பார்வை : இந்த கட்டுரை திரு கணேசலிங்கன் அவர்களின் “தாயின் குரல்” என்னும் நாவலில் “நாவல் பற்றிய சில குறிப்புகள்” என்ற முன்னுரையில் இருந்து எடுத்துள்ளேன். போர்களின் காரண காரியங்களையும் சொல்லியிருக்கிறார். நம் கட்டுரைக்கு அவைகள் எடுத்துக்கொள்ளப்படாமல்
“போர்” மனித வாழ்க்கையில் எங்ஙனம் பின்னி பிணைந்துள்ளது என்பது மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Jul-18, 5:41 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 466

மேலே