திருநெல்வேலி என்றதும்

திருநெல்வேலி என்றதும்
அல்வா நினைவுக்கு வரலாம்
சத்தியமாய் அது நினைவுக்கு
வருவதில்லை எனக்கு
அந்த அல்வாவை விட
தித்திக்கும் எத்தனையோ
நினைவுகள் இருக்கிறது

திருநெல்வேலி என்றதும்
துப்பட்டா மூடிய
தேவதைகளின் அடக்கத்தோடு
ஒட்டிக்கொண்டிருந்த தெனாவெட்டு
அந்த ஏலே என்ற
சங்கீத சொல்
தான் முதலில்
காதில் ரீங்காரமிடுகிறது

காய்ந்த காடு
வெட்டாந்தரை வழி
சுள்ளுன்று உச்சந்தலையை
பிளக்கிற வெயில்
குளிர்ச்சிக்காக தண்ணீரை
வைத்து அறையின்
தரையை குளிப்பாட்டின
சூடான நாட்கள்
என்ன வெயில் என்று
உச்சி கொட்டிய
நாட்களின் நினைவு
இன்று சிலிர்க்கும் சாரலாய்

காட்டுக்குள் கடந்து போன
கல்லூரி விடுதி சாலை
காட்டுக்குள் இருக்கும்
சூனியக்காரியின் அரண்மனையாய்
முதல் நாளில்
தெரிந்த கல்லூரி
பின்னொரு நாளில்
தாஜ்மகலாகி இப்போது
மனசார சொர்க்கம்
என்று சிலிர்க்கும்
ஒரு ஊரு திருநெல்வேலி

முதலில் வந்து
இறங்கிய புது பஸ் ஸ்டான்ட்
அப்போது உறிஞ்சி குடித்த
ரோஸ் மில்க்
அப்போது மட்டுமல்ல
எப்போது போனாலும்
ரோஸ் மில்க் தான்

ஞாயறு தோறும் போகும்
பாளை பஸ் ஸ்டாண்ட்
ராஜா xerox கடை
ஒரு புத்தகத்தை வாங்கி
பத்து காப்பி எடுத்துக்கொண்டு
கும்பலாக வந்த நாட்கள்
புத்தகமா வாங்கினா
காசு செலவழிஞ்சுடுமாம்

அதில் மிச்சம் பிடித்த
காசில் கடையில் போய்
பிரியாணி தின்ற
நாட்கள் ஆஹா

அதுவும் எப்படி
ஒரே தட்டில்
சாப்பிட்ட நாட்கள்
ஒற்றுமை மட்டுமல்ல
காரணம் ஒரு
பிரியாணி வாங்கி ரெண்டு பேர்
சாப்பிடவே அப்போது
எங்களிடம் காசிருக்கும்
மெனு கார்டுக்கும்
மென் பர்ஸுக்கும்
எங்கள் மூளைக்கும்
கணக்கு யுத்தம்

நூறு ரூபாய் காசை
லட்ச ரூபாய் மாதிரி
பையில் வைத்து கொண்டு
ராஜா மாதிரி
ஜங்ஷன் பஸ்டாண்டில்
வலம் வந்த வார
இறுதி நாட்கள்

ஜானகிராம் ஹோட்டல்
ஸ்பெஷல் பாஸந்தி
அந்த ஜங்ஷன்
பரபரப்பான பஸ் ஸ்டாண்ட்
அப்புறம் அந்த
ரயில்வே ஸ்டேஷன்
தெருவோர சாப்பாட்டு
கடை வாசனை
ஜன்னலோர ரயில்
பயண சுகம்

பச்சை பசேல்
வயல் வெளி
தாமிரபரணி தண்ணி
தந்த சுவை
அந்த நீளமான
மேம்பாலம்
இரு பக்கத்திலும்
இருக்கும் பிளேஸ்போர்டில்
ற்மக்வ புடவையோடு
சிரிக்கும் சினிமாக்காரி

அவ்வப்போது போன
அரவிந்த் மருத்துவமனை
எப்போதாவது போன
சயின்ஸ் சென்டர்
போத்தீஸ் கடையை
மிரட்சியோடு பார்த்து
மேலும் கீழும்
சுத்தி வந்தது
ற்மக்வ கடையில்
செட் சுடிதார் எடுத்தது
நடைபாதையில் கிளி
ஜோசியம் கை ஜோசியம்
எல்லாம் பார்க்க
அவன் நிச்சயமாய்
மனசுக்கு பிடித்த
கல்யாணம் என்று
எல்லோருக்கும் ஒண்ணுபோல
சொன்னாலும் சிரிச்சு
நகர்ந்த பொழுதுகள்

ராம் முத்துராம்
சினிமா கொட்டகை
பிடித்த நாயகனின்
போஸ்டர்கிட்ட ஒட்டிநின்று
புகைப்படம் எடுத்தது

விடுதிக்குள் ஆறு
மணிக்குள் அட்டெண்டன்ஸ்
போட வேண்டியதால்
பார்க்கமுடியாமல் போன
இருட்டு கடை
ஆனாலும் தோழமைகளிடம்
வாங்கிவரச் சொல்லி
தப்பாமல் தின்றோம்
இருட்டிய நேரத்தில்
எங்கள் ஊருக்கும்
கொண்டு போகையில்
வரவேற்பு எங்களுக்கும்
எங்கள் அல்வா
பார்சலுக்கும் சேர்த்தே
இருக்கும் நிச்சயமாய்

மதங்கள் கடந்து
தரிசித்த நெல்லையப்பர்
சாமி கோவிலும்
அந்த புளியோதரியும்
அதன் வாசனையும்
Get well ஆஞ்சேநேயர்
கோவில் தரிசனம்
பாளையங்கோட்டை புனித
சவேரியார் கோவில்
தரிசனமென எல்லாம்
ஒன்றென கலந்து
கிடந்த நாட்கள்
ஒரு விழியை
மட்டும் தரிசிக்க
ஏங்கி கிடந்தும்
அந்த நாட்களே
என வாழ்க்கையின்
அத்தனை சுகத்தையும்
கண்ட நிலாக்காலமோ
கனா காலமோ
எல்லாம் அந்த
சொர்க்க பூமி
நெல்லையிலே எங்களுக்கு
நடந்தேறியது
நான்கு வருட படிப்பாக
பாடத்தை படித்தோமோ
என்னமோ தெரியாது
வாழ்க்கையை கற்றுத்தந்த
பூமியது எங்களுக்கு

திருநெல்வேலி தந்த
இனிய நினைவுகளோடு
திருநெல்வேலி தெருவில்
மீண்டும் நடந்துபோன
சுகத்தை அனுபவித்து
விடை பெறுகிறேன்

எழுதியவர் : யாழினி வளன் (18-Jul-18, 10:00 pm)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 172

சிறந்த கவிதைகள்

மேலே