பழந்தமிழ் இலக்கியங்களில் உலகப்பார்வை

அனைவருக்கும் தெரிந்த வரி ஐ.நா.சபைக்கும் போன வரி – தமிழில் அதுவும் பழைய சங்கத் தமிழில் உள்ளது! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இந்த ஒரு வரியில் மற்ற அனைத்து சங்கப்புலவர்களைக் காட்டிலும் உலகப் புகழ் அதாவது உலகில் எங்கெல்லாம் தமிழர் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பரவிய புகழ் -பெற்றுவிட்டார் கணியன் பூங்குன்றனார். அவ்வளவு பெருமையும் - இந்த ஒருவரிக்கு உண்டு எனில் அதன் காரணம் உலகம் முழுவதையும் ஓன்றாக -ஒரே மனித உலகமாக-நினைத்தது தான். உண்மையில் சமண முனிவராகிய பூங்குன்றனார் நிலையாமைக் கருத்தை வலியுறுத்த எழுதிய பாடலின் முதல் வரியே அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் முந்திக்கொண்டுவிட்டது என்பதுதான் உண்மை.

மொத்தமுள்ள சஙகத் தமிழ்ப் பாடல்கள் 2381இல் இவர் எழுதிய பாடல்கள் இரண்டே இரண்டுதான்! இந்தப் பாடல் தவிர இவர் எழுதிய மற்றொரு பாடல் எது எனக் கேட்டால் ஆராய்ச்சியாளருக்குத்தான் தெரியும்! உலகைத் தழுவிக் கொண்ட இந்தப் பாடலைத்தான் உலகமும் தழுவிக் கொண்டது, ஏன் என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

காதல் மணம் - கலப்பு மணம் செய்யத் துணிந்த ஒருவன் சாதியை-மதத்தை-இடத்தையெல்லாம் தாண்டி இணைவது பற்றியும் தமிழ்க்கவிஞன் பாடியிருக்கிறார். அவர்பெயர் ‘செம்புலப் பெயல் நீரார்’எனும் புலவர். (உண்மையில் தனது உண்மையான பெயர் மறைந்தும் ஒரே பாடலில் புகழ்பெற்ற உவமையால் அதே உவமையின் பெயரில் நிலைத்து விட்டவன் அவன்.)

“யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல-
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

காதல் பற்றிய பாடல்கள் அனேகமாக -உலக மொழிகள் அனைத்திலும்- உலகப் பார்வை உடையவைதாம். எனவே தமிழில் அது மிகுந்து கிடப்பதை இதற்குமேல் கூறவேண்டியதில்லை.
--------------------------------

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"

கம்பராமாயணப் பாடல் ...





நா.முத்துநிலவன் வலைப்பக்கம்.

எழுதியவர் : (21-Jul-18, 5:51 am)
பார்வை : 116

மேலே