படிக்க மறந்த பாடங்கள்

படிக்க மறந்த பாடங்கள்

நண்பர்களாக இருந்தோம் - ஆனால்
நட்பாக இருந்ததில்லை
உறவினர்களாக இருந்தோம் - ஆனால்
உறவின் மேன்மை உணரவில்லை
அறிவியல் அறிந்தோம் - ஆனால்
அறம் கற்கவில்லை
குறளை கொண்டாடினோம் -ஆனால்
கொல்லாமை மறுத்தோம்
வரலாறுபுவியியல் கற்றோம் - ஆனால்
வன்மம் மறக்கவில்லை
அறிவை வளர்த்தோம் - ஆனால்
ஆணவம் அழிக்கவில்லை
வணிகவியல் புரிந்துகொண்டோம் - ஆனால்
வாழ்வியல் மறந்துவிட்டோம்
கடவுளை நேசித்தோம் - ஆனால்
மனிதம் மறந்தோம்
வேதங்கள் பயின்றோம் - ஆனால்
வேற்றுமைகள் விதைத்தோம்
பள்ளி படிப்பை முடித்தோம் - ஆனால்
பிறன்வலி புரியவில்லை
கல்லூரி காலம் கடந்தோம் - ஆனால்
வாழ்வியல் விளங்கவில்லை
உடலுறுப்புக்கள் படித்தோம் - ஆனால்
உயிரின் இரகசியம் தெரியவில்லை

இனி
உடலின் இயக்கத்தை மட்டுமல்ல
உயிரின் நோக்கத்தையும் கற்போம்
வேற்றுமையின் வேர் அறுக்க
அன்பின் விதைகள் தூவுவோம்
நீதிநெறியும் ஒழுக்கமும்
பள்ளிபருவத்தில் மனப்பாடம்
செய்து மறந்துபோவதற்கல்ல
என்றுணர்ந்து
வழிநடந்து வாழ்ந்து காட்டுவோம்

உதவிக்காக நீட்டப்படாத கைகள்
உண்பதற்கு தகுதியற்றவை

முறையற்ற உறவுகள் தேடும் உடல்
உயிர்வாழ தகுதியற்றவை

பெண்களை உடலாக மட்டுமே
பார்க்கும் கண்கள்
பார்வையிழக்க தகுதியானவை

தன்னால் முடிந்தும் தடுக்கப்படாத
தவறுகள் தன்தவறுகளே

சிற்றின்ப சிதறல்ககளிலேயே
வாழ்வு முடிந்துவிட கூடாது

ஒழுக்க கட்டுபாடுகளற்ற சமூகம்
அடுத்தவரின் வலியறியாத சமூகம்
உடலின்பம் மட்டுமே உண்மையென்று
வாதிடும் சமூகம்
இழிநிலையையே அடையும்

கல்வி நிலையங்களில்
வேலைக்கும் வணிகத்திற்கும்
தயார்படுத்துவதை தாண்டி
சத்தியத்தின் சக்தி
நேர்மையின் கம்பீரம்
உழைப்பின் உயர்வு
மானுடத்தின் மேன்மை
அன்பின் ஆற்றல்
தூய்மையின் தாக்கம்
ஆன்மாவின் தெளிவு
ஆகியவற்றை பயிரிடுவோம்
களைகள் குறைந்து
மானுடம் உயிர்த்து
சமூகம் தழைக்கும்

எழுதியவர் : சூரிய காந்தி (23-Jul-18, 5:53 pm)
சேர்த்தது : சூரிய காந்தி
பார்வை : 70

மேலே