தன்னுள் திரளும் குளம்

இந்தக்குளம் என்னை
உறிஞ்சி விடலாம் விரைவில்.
கால்களை நனைக்கும்
அந்த ஈரம் சாகும் காலடியில்.
குளம் வட்டமாய் இல்லை
ஒரு மாதிரியான வட்டம்.
வட்டம் என்பது
உயிர் குடித்து உயிர் தரும்.
குளம் இப்போது
என்னை குடிக்கிறது.
குளத்தின் அடியில் உண்டு பல.
என்னென்னவோ இருந்தாலும்
இருப்பதில்லை இன்னொரு குளம்.
கடலின் கொப்பூள்
கழுகின் தொட்டி
நாரைகளின் தொழுவம் அந்த
குளம் என்னை குடிக்கிறது.
தொலைதூர ஆட்டிடையன்
என்னை பார்க்கிறான்
பார்ப்பவன் கண்ணீராய் குளம்.
ஆட்டிடையன் வைத்த
மிச்ச அப்பம் மிதக்கும் குளத்தில்
குளமானேன் நானும்.
கண்ணீரின் உப்பில்
இன்னொரு கடலாக மாறியவண்ணம்.

எழுதியவர் : ஸ்பரிசன் (27-Jul-18, 12:31 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 60

மேலே