எப்ப காணப்போறா
பகல், இரவு பார்க்காம
பொழுதெல்லாம் சிரிப்பு சப்தம்
காது வழி புகுந்த ஒலி
கடைசி வரை உள்ளிருக்கும்
அப்படி ஒரு சிரிப்பு அவளுக்கு
மலர்போல மணக்கும் இவள்
மணமானவள், பேரு புவனா
பூனாவில் பணி கணவனுக்கு
பொண்ணு ஊருக்கு புதுசு
பார்ப்போரை மயக்கும் பேரழகி
ஊரு பிரச்சனைக்காக வந்த
ஒரு போலீஸ் அதிகாரி
இவள் வீட்டிற்கு வந்து
இருவரும் சிரித்து மகிழ்ந்ததை
ஊரு சனம் ஒருமாதிரி பார்த்தது
அழகு சிலையை
அள்ளி அணைக்க நினைத்த
உள்ளூர் வாசிகளுக்கும், புவனா
உறவாகிப்போனது தான் வேதனை
விதி யாரை விட்டது
இல்லேன்னு போனா
இல்லேன்னு சொல்லாம
கொடுக்கிற மகராசி—மக்களைக்
காத்த புண்ணியவதி
மீன் வித்த காசு நாறுமா என்ன?
திருட்டு வழக்கில் பிடிபட்டு
சிறைபட்ட ஒரு இளைஞனின்
புது மனைவி புலம்பி தவித்ததால்
போலீஸ் நிலையம் சென்று
புவனா இளைஞனை விடுவித்தாள்
ஊருக்கு திரும்பி பேருந்தில்
வரும்போது விபத்தில் சிக்கி
உயிர் விட்ட புவனாவுக்காக
ஊரே கதறி அழுததை—இனி
இவயெப்ப காணப்போறா?