தென்றல்
மனம் லயிக்கும் மஞ்சள் வெயில் மாலையிலே
இன்பமாய் தொட்டு போகும் தென்றலோடு உரையாடல்
ஓ தென்றலே
நீ என்னைத் தழுவி செல்லும் நேரமெல்லாம்
என்னுள்ளே சில கேள்வி ஏனோ சிறகடிக்கும்
இதமான
நின் தழுவல் பிரதிபலிக்கும் தருணமும் ஏன்
நின் தழுவல் மிஞ்சும் தருணமும் உணர்ந்தேன்
நான் எடுத்துரைப்பதைக் கேள்
இடும் விபுதி கருவிழியில் படும் முன்னர்
இமைக்கும் நொடியில் இடையே கைவைத்து
தாத்தா பாடி ஊதி விடும் தருணம் உணர்ந்தேன்
இதுவரை இயற்கை என்று இருந்த இதமான தென்றலை
செயற்கையாகக் கூட உருவாக்கமுடியும் என்று
கழுதை வயதாயினும் கவலையின்றி கனவுக்கான
அன்னை மடியினில் சாய்கையில் முந்தியெடுத்து அவள்
முகத்தில் வியர்வை தொடைத்து இலகுவாக வீசிய
அந்நேரம் என் சிந்தையில் ஒரு எண்ணம் இவளிடம்
இருந்து தான் நீ மனதை வருடும் வித்தை பயின்றியோ
கைப்பிடித்த மங்கையுடன் மஞ்சத்தின் மத்தியிலே காதல் பாடம்
உடல் இறுக்கும் வேளையிலே உள்ளம் உருகும் சூழலிலே
உன்னதம் எய்தியவளின் உஷ்ண மூச்சு உடல் தொட்டு
உணர்த்தியது தென்றலே குறித்துவைத்துக்கொள் தரும் உணர்வில்
இவன் எதிர்மறை ஆயினும் உணர்ச்சியில் உனக்கு நிகர் போலும்
பிஞ்சு கால் கொண்டு பஞ்சுபோல் பறந்து வந்து
ஆர்வம் மிகுதியாகி அமுதாவாய் திருக்கும் பதுமையே
வார்த்தைக்கு முன் அமிர்தம் எனும் உமிழ்நீர் கலந்த மூச்சு
என் தேகம் தீண்டி நான் பரவசம் அடையும் தருணம்
உணர்ந்தேன் தென்றலே உன்னை விஞ்சும் சூழல் இப்புவியில் உண்டென்று