அவனும் நானும்-அத்தியாயம்-13

....அவனும் நானும்....

அத்தியாயம் : 13

கல்லூரியின் கன்டீனுக்கு வெளியே போடப்பட்டிருந்த மர பென்ஞ்சில் அமர்ந்திருவாறு அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் கீர்த்தனாவும் அவளது தோழிகளும்...

"ஹேய் கீர்த்து இந்த வீக்கென்ட் ஆச்சும் எங்க கூட வெளியே வருவியா மாட்டியா...??..."

"ஹ்ம்...நான்தான் உங்ககிட்ட முதலே சொல்லியிருக்கேனே...இந்த வீக்கென்ட்னு இல்லை எந்த வீக்கென்டுக்கும் நான் எங்கேயும் வரமாட்டேன்...அந்த இரண்டு நாளுமே மொத்தமாய் என் குடும்பத்துக்காக நான் செலவிடுற நேரம்...அதனால அந்த இரண்டு நாளைக்கு மட்டும் என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க...ப்ளீஸ்.."

"இவளைப்பத்திதான் உனக்குத் தெரியுமே ப்ரீத்தி...அப்புறமும் எதுக்குத் தேவையில்லாமல் உன் எனேர்ஜியை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க...??..."என்று சௌமி கோபமாய் கொந்தளிக்கவும்,

"ஹேய் நான் என்ன உங்க கூட வெளிய எங்கேயுமே வரமாட்டேன்னா சொன்னேன்...சனி,ஞாயிறு மட்டும் என்னை எதுக்கும் கேட்காதீங்கன்னுதானே சொன்னேன்.."

"சரிம்மா...சரி...இனி உன்னை வீக்கென்ட்ல நாங்க தொந்தரவு பண்ணல
போதுமா..??.."

"அதைக் கொஞ்சம் சிரிச்சிட்டேதான் சொல்லேன்டி..."

"ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...போதுமா..??.."

"இதுக்கு நீ சிரிக்காமலே
இருந்திருக்கலாம்..."

"உங்க சண்டையை அப்புறமா ஆறுதலாய் வைச்சுக்கோங்க...இப்போ எனக்கு ஏதாச்சும் கூலா குடிக்கனும் போலருக்கு...ஐஸ்கிறீம் குடிக்கலாமா..??.."

"நீங்க இரண்டு பேரும் வேணும்னா ஐஸ்கிறீம் குடிங்க...நான் கொஃபி குடிக்கிறேன்..."என்று அறிவித்தாள் கீர்த்தனா..

"நீ இருக்கியே...உன் டேஸ்ட் ஏன்டி இப்படி எல்லாத்திலையுமே விசித்திரமாவே இருக்கு...யாராவது இந்த உச்சி வெய்யில்ல போய் கொஃபி குடிப்பாங்களா..?.."

"யார் குடிக்குறாங்களோ இல்லையோ நான் குடிப்பேன்...அது விசித்திரமாய் இருந்தால் இருந்திட்டுப் போகட்டும்..."

"என்னவோ போ...உன்கூட இத்தனை வருசமா பழகுறோம்...ஆனாலும் உன்னையும் உன் டேஸ்ட்டையும் புரிஞ்சுக்கவே முடியலை.."

உண்மைதான் அவளோடு பழகிய அனைவருமே சொல்கின்ற விடயம்தான் அது..அவளை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது சற்றுக் கடினமானதொன்றுதான்...அவளது குடும்பத்தினருக்கு கூட என்றுமே அவள் புரிந்து கொள்ள முடியாத புதிர்தான்...

"சரி நீ இங்கேயே இரு...நாங்க இரண்டு பேரும் போய் வாங்கிட்டு வாறோம்.."

"ம்ம்..சரி..."

அவர்கள் சென்றதும் என்ன செய்வதென்று தெரியாது சுற்றும் முற்றுமாய் பார்வையை சுழலவிட்டுக் கொண்டிருந்தவள்,அப்போதுதான் அவளிற்குச் சற்றுத் தூரமாய் தனியாக அமர்ந்திருந்த அவனைக் கண்டு கொண்டாள்...

"அட நம்ம வோட்டர் பொட்டில் சேர்...என்ன எப்பவுமே தனியாவே சுத்திட்டிருக்காரு..??.."என்று அவனைப்பற்றி மனதில் எண்ணமிட்டுக் கொண்டவள்,அவனிடத்திலிருந்து பார்வையை விலக்க முயன்றாள்...ஆனாலும் சுற்றிச் சுற்றி அவளது பார்வை அவனிடத்திலேயே நிலைத்து நின்றது...

ஏனென்று தெரியாமலே அவளின் பார்வை அவனையே வட்டமடித்துக் கொண்டிருந்தது...அவனை அவள் மூன்றாவது தடவையாகக் காண்கிறாள்..இந்த மூன்று தடவைகளுமே அவன் முகத்தில் அவள் புன்னகையின் சாயலையே கண்டதில்லை...

"இவன் ஏன் எப்போ பார்த்தாலும் முகத்தை உர்ரென்னே வச்சிருக்கான்...கொஞ்சமாச்சும் சிரிச்சான்னா பார்க்க அழகாத்தான் இருப்பான்.."என்று அவளை அறியாமலேயே அவள் மனதில் அப்படி ஓர் எண்ணமோடவும்,திடுக்கிட்டு நிமிர்ந்தவள் மனதை அடக்கி அவனிடத்திலிருந்து அவள் விழிகளை விலக்க முயன்ற அதே நேரத்தில் சரியாக அவன் விழிகள் மேலுயர்ந்து அவள் விழிகளைச் சிறைப்பிடித்துக் கொண்டன...

ஏற்கனவே அவன் மேலிருந்து பார்வையைத் திருப்ப முடியாது திண்டாடிக் கொண்டிருந்தவள்,இப்போது மொத்தமாகவே அவனது பார்வையில் அடித்துச் செல்லப்பட்டாள்...நல்லவேளையாக அப்போது அவனது பார்வைச் சிறையிலிருந்து காப்பாற்ற அவளது தோழிகள் இருவரும் வந்து சேர்ந்தனர்...

"அங்க யாரைப் பார்த்திட்டிருக்க..??.."என்றவாறு சௌமி அந்தப் பக்கமாய் திரும்பவும்,அங்கே கிருஷ் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்...சௌமி திரும்பும் போதே அவளைத் தடுத்துக் கொள்ள முயன்றவள்,நல்லவேளையாக கிருஷ் இடையில் வந்ததில் தப்பித்துக் கொண்டாள்...

"ஹலோ கேர்ள்ஸ்...என்ன இப்போ ப்ரீ டைமா..??.."

"ஹாய் சேர்...ஆமா.."

"எது சேரா..??..எனக்கு அழகாய் ஒரு பெயரு வைச்சிருக்காங்கம்மா...அதையே சொல்லிக் கூப்பிடுங்க...இந்த சேர்,மோர் எல்லாம் வேண்டாம்.."

"ஹா...ஹா...ஓகே கிருஷ்..."

"ம்ம்...குட்...ஆமா உங்க மத்த ப்ரண்டுக்கு என்னாச்சு..??..அன்னைக்கு சும்மா பட்டாசு மாதிரி வெடிச்சாங்க...இன்னைக்கு என்னடான்னா அமைதியின் சொரூபமாய் உட்கார்ந்திட்டு இருக்காங்க...??.."

"இதை நீங்க அவகிட்டேயே நேரடியாய் கேட்கலாமே..??.."

"அதுக்கென்ன கேட்டிட்டாப் போச்சு.."

என்னதான் அவனது பார்வை வட்டத்திற்குள் இருந்து அவளை அவளது தோழிகள் காப்பாற்றியிருந்தாலும்,அவனது விழிகளிற்குள் தொலைந்து போன அவளின் விழிகளை மீட்டுக் கொள்ள முடியாது அவள் தவித்துக் கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்...அதனால் அவர்கள் கதைத்ததெதுவுமே அவளின் காதினில் ஏறவில்லை....எதுவோ மாயவலைக்குள் சிக்கிக் கொண்ட சிறுகுழந்தை போலிருந்தவளை சௌமிதான் இறுதியில் நிகழ் உலகிற்கு மீட்டெடுத்துக் கொண்டாள்...

"ஹலோ மேடம்..."என்று கிருஷ் அவள் முன்னே சொடக்குப் போட்டு அழைத்தும்,அவள் எந்த அசைவுமின்றி அமர்ந்திருந்தாள்...

"இங்க பார்ரா...நாங்க இவரை சேர்னு கூப்பிடக்கூடாதாம்...ஆனால் இவர் மட்டும் எங்களை மேடம்னு கூப்பிடலாமாம்...இது எந்த ஊரு நியாயம்...??.."

"ஹா...ஹா...தெரியாமல் கூப்பிட்டுட்டேன்...மன்னிச்சிருங்க சௌமி..."என்று அவன் பவ்யமாகக் கையெடுத்துக் கும்பிடவும்,அங்கே ஓர் சிரிப்பலை எழும்பியது...ஆனால் அப்போதும் கீர்த்தனா கனவுலகத்தினில்தான் சுழன்று கொண்டிருந்தாள்..

"அட உங்க ப்ரண்டுக்கு என்னதாங்க ஆச்சு...நாங்க மூனு பேரும் இங்க சிரிச்சிட்டிருக்கோம்...அவங்க என்னடான்னா ஏதோ யோசிச்சபடியே இருக்காங்க...உங்க மூனு பேருக்குள்ளேயும் ஏதாச்சும் பிரச்சினையா என்ன...??..."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை கிருஷ்...இவ்வளவு நேரமும் நல்லாத்தான் இருந்தாள்...நாங்க ஐஸ்கிறீம் வாங்கிட்டு வரப்போன இடைவெளியில்தான் என்னமோ நடந்திருச்சு போல..."என்றவாறே அவள் முதுகில் ஓங்கியொன்று வைத்தாள் சௌமி...

"ஆஆஆ...இப்போ ஏன்டி அடிச்ச..."

"ஏன்டி இங்க ஒரு மனுசன் அப்போலயிருந்து உன்னைக் கூப்பிட்டிட்டே இருக்காரு...நீ என்னடான்னா ஏதோ பேய் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திட்டிருக்க...இதில ஏன் அடிச்சன்னு கேள்வி வேற..??.."என்று சௌமி முறைத்துக் கொள்ளவும்,லேசாய் அசடு வழிந்தவள்,

"மன்னிச்சிருங்க கிருஷ்ணா சேர்...ஏதோ ஒரு யோசனை..அதான் கவனிக்கல...ரியலி சொரி..."

"அதெல்லாம் மன்னிக்க முடியாது..."

"ஏன்..?????...என்னைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாய் தெரியலையா..?ப்ளீஸ் மன்னிச்சிருங்களேன்..."

"அப்படின்னா ஒரு கன்டிசன்..."

"என்ன...??.."

"இந்த சேரை எல்லாம் தூக்கிப் போட்டிட்டு வெறும் கிருஷ்னு மட்டும் கூப்பிடுங்க...மன்னிச்சிடுறேன்.."

"அட இவ்வளவுதானா....கிருஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்....போதுமா...??.."

"ஆ..ஆ..இப்போதைக்கு இது போதும்..."என்றவன் சிறிது நேரம் அவர்களோடு உரையாடிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்...

"ஆமா யாருடி இவன்..??.."என்று அவன் அந்தப் பக்கமாய் செல்லவும் இந்தப் பக்கமாய் ப்ரீத்தி அவர்களது காதைக் கடித்தாள்...

"அன்னைக்கு இவகிட்ட ஒருத்தரு இலவசமாய் திட்டு வாங்கினார்னு சொன்னேனே...அந்த அவர்தான் இவரு..."

"ஏன்டி அவரைப் பார்த்தாலே பாவமாய் இருக்கு...அவரைப் போயா அன்னைக்கு அந்த திட்டு திட்டினாய்..??.."

"பச்...நான் என்ன வேணும்னேவா போய் திட்டினேன்...ஏதோ தெரியாமல் நடந்திடுச்சு..."

"இந்தப் பேச்சை விட்டிட்டு சீக்கிரமாய் ஐஸ்கிறீமைக் குடி கரைஞ்சிடப் போகுது.."என்று சௌமி ஐஸ்கிறீமின் பக்கம் கை காட்டவும் அத்தோடு அங்கே வார்த்தைகளிற்கான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..

சௌமியும்,ப்ரீத்தீயும் ஐஸ்கிறீமைச் சுவைப்பதில் கண்ணாயிருக்க...கீர்த்தனாவின் விழிகளோ மீண்டும் அவனைத் தேடும் வேலையில் இறங்கியது...ஆனால் அவன் அப்போதைய இடத்திலிருந்து இப்போது காணாமற் போயிருந்தான்...அது அவளிற்குள் காரணமின்றியே மிகுந்த ஏமாற்றத்தை அளிக்க,எப்போதும் அவளிற்குக் கசக்காத அந்தக் கொஃபி கூட அப்போது அவளிற்கு மிகவும் கசப்பாய் தோன்றியது...

ஆனால் மறைவாய் நின்று அவளின் தேடலை ரசித்துக் கொண்டிருந்தவனிற்கோ அந்தத் தருணம் இனித்தது...எப்போதும் சிடுசிடுவென்றே இருக்கும் அவனின் முகம் அவளின் ஆசைப்படியே புன்னகையில் மலர,அங்கே இரு உள்ளங்கள் எழுதப் போகும் கவிதைக்கான தொடக்கப்புள்ளி அழகாய் வரையப்பட்டது...





தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (3-Aug-18, 7:59 pm)
பார்வை : 720

மேலே