கதைக்கலை
அன்புள்ள ஜெ.,
மாங்குடி சிதம்பர பாகவதர்(1880-1938) பற்றி உங்கள் தளத்தில் ஏற்கனவே கட்டுரைகள் படித்திருக்கிறேன். சுந்தா எழுதிய “பொன்னியின் செல்வர்” பழைய கல்கி பைண்டு புஸ்தகத்தில் சமீபத்தில்அவர் பற்றி கல்கி எழுதியதைப் படித்தேன். அவர் எழுதுகிறார் “அவருடைய தோற்றமே ஹாஸ்யத் தோற்றம். சார்லி சாப்ளின் முதலிய பெயர் பெற்ற ஹாஸ்யக்காரர்களே கூடத் தங்கள் இயற்கை வேஷத்தை மறைத்து வெளிவேஷம் போட்டுக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் நமது பாகவதருக்கு அத்தகைய வெளிவேஷங்கள் அவசியமில்லை. அவருடைய இயற்கை உருவத்தைப் பார்த்தாலே போதும். “குப் குப்” என்று சிரிப்பு வருகிறது. பிறகு அவருடைய ஒவ்வொரு சைகையும் சிரிப்புத் தருவதாய் இருக்கிறது. அவர் விசுப் பலகையில் உட்காருவது ஒரு வேடிக்கை, எழுந்து நிற்பது ஒரு வேடிக்கை. நடனம் செய்யத் தொடங்கினாலோ அளவிலா வேடிக்கை. இவ்வளவும் போதாதென்று ஹாஸ்யப் பேச்சுக்கள் மற்றும் உபகதைகள் வேறு..
இயற்கையாகவே அவர் நகை பூத்த வசீகர முகம் உடையவர். ஹாஸ்யமாகப் பேசத் தொடங்கியதும் மற்றவர்களுடன் சேர்ந்து தாமும் சிரித்து மகிழ்கிறார்…கதையின் மத்தியில், ஹாஸ்ய ரசம் பொருந்திய ஒரு கட்டத்தின் போது, தற்செயலாக, சபையில் உட்கார்ந்திருந்தோரின் முகத்தோற்றத்தின் மேல் என் கவனம் சென்றது என்ன அற்புதமான காட்சி! சூர்யோதயத்தில் பூரணமாய் மலர்ந்துள்ள பூக்கள் நிறைந்த தாமரைத் தடாகம் ஒன்றைத்தான் அக்காட்சிக்கு ஒப்பிடக்கூடும்” (பாயசம் கதையில் தி ஜானகிராமன் எழுதிய பற்கள் பற்கள்..எங்கும் பற்கள் என்ற கல்யாணக் காட்சி நினைவுக்கு வருகிறது) ஏறக்குறைய பரிபூரண சங்கீதத்திற்குரிய அம்சங்கள் எல்லாம் அவர் பாடலில் பொருந்தியிருப்பதாக் கூறும் கல்கி அவருடைய குறையாகச் சொல்வது அவர் அதிகமாக “அவனாகப்பட்டவன்,இவனாகப்பட்டவன்” போன்ற வார்த்தைகளை உபயோகிப்பதை. “வாலியாகப்பட்டவன் சுக்ரீவனாகப்பட்டவனைப் பார்த்துச்சொல்லுவான். லங்கையாகப்பட்டது இங்கிருந்து பல காத தூரம் இருக்கப்பட்டதனாலே…” என்பது போல ஏகப்பட்ட ஆகப்பட்டதுகள். வேடிக்கைதான்.
அப்பொழுதெல்லாம் இன்று போல பெண்கள் வேலை, படிப்பு என்று வெளிவராத காலம். ஆண்களை முழுதும் அண்டி வாழ்ந்த காலம். சினிமா, டிராமா போன்றவை செலவு பிடிக்கும் விஷயங்கள். கோயில் மற்றும் பெரிய வீட்டுக் கல்யாணங்களில் வாரக்கணக்கில்,மாதக்கணக்கில் நடக்கும் இது போன்ற உபன்யாசங்கள்தான் ஒரே புகலிடம். வீட்டுக்குள்ளேயே புழங்கிக் (புழுங்கிக்) கொண்டிருந்த பெண்களுக்கு, காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கும் வயதானவர்களுக்கு(இவர்கள் அந்தக்காலகட்டத்தில் குறைவுதான்) , விதவைகளுக்கு(இவர்கள் அதிகம்) இது எவ்வளவுபெரிய விடுதலையைக் கொடுத்திருக்கும் என்று இந்த மூச்சுமுட்டும் கேளிக்கை உலகத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை சிரமப்பட்டுத் தள்ளும் நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். கல்கி எழுதுகிறார் “அந்தக் காலத்தில் ஒரு பெரிய மனிதர் வீட்டுக் கல்யாணமென்றால் அநேக மைல் தூரங்களுக்கு, கொஞ்ச நாட்களுக்கு அதைப்பற்றிய பேச்சாகத்தான் இருக்கும். “கல்யாணம் அபாரமாகச் செய்தான். கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யர் பாட்டு, அழக நம்பியாபிள்ளை மிருதங்கம், பஞ்சாபகேச சாஸ்திரிகள் கதை, செம்பனார்கோவில் ராமசாமி மேளம், அடடடா, என்ன மோக்ளா, கொன்னுட்டார்கள் போ” இது போன்ற பேச்சு கல்யாணம் நடந்த ரெண்டு மாதங்களுக்கு சுற்றுவட்டாரத்தில் நடந்துகொண்டிருக்கும். கச்சேரிகள் நடக்கும் பெரிய கல்யாணங்களுக்கு அழைத்தால்தான் போகிறது என்ற நியதி சங்கீதப் பிரியர்களுக்குக் கிடையாது.”சங்கீதம் என்ன இவன் அப்பன் வீட்டுச் சொத்தா? நாம் என்ன இவன் வீட்டுச் சாப்பாட்டுக்கா உட்காரப்போகிறோம்? என்று கல்யாண வீட்டு எஜமானனைத் திட்டிக் கொண்டே கச்சேரிகளுக்குப் போவார்கள். நானும் பல கச்சேரிகளுக்கு என்னை நானே அழைத்துக்கொண்டு போவதுண்டு”
அவ்வளவு பெரிய உடம்பைத் தூக்கிக்கொண்டு மணிக்கணக்காக நின்று கொண்டு கதைசொல்வது சாதாரணமான விஷயமல்ல. நிச்சயமாக “வெரிகோஸ் வேய்ன்ஸ்” வந்திருக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் நின்று கொண்டுதான் கதை சொல்லிருக்கிறார்கள். ஒருவேளை ஆண்டவனைப் பற்றிப் பேசும்போது உட்கார்ந்து கொண்டிருப்பதை அவமரியாதையாக நினைத்திருக்கலாம். நான் பார்க்க உட்கார்ந்துகொண்டு கதை சொல்ல ஆரம்பித்தது கிருபானந்தவாரியார்தான் என்று நினைக்கிறேன். அத்துறையில் அவரே 70 மற்றும் 80 களில் “சூப்பர் ஸ்டார்”.ஒவ்வொரு நவராத்திரியிலும் இவர் கதை ஒன்பது நாட்களும் மதுரை மீனாட்சிஅம்மன் கோயில் ஆடி வீதியில் நடக்கும். வீட்டில் அடைந்து கிடைக்கும் பெண்கள் அவர் கதை சொன்ன விதத்தைப்பற்றி மாதக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள் (என் அத்தைகள் உட்பட) சினிமாவில் எப்படி பாடல்கள் கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்ததோ, அதேபோல் கதாகாலட்சேபங்களிலும் பாட்டு குறைந்தது. கிருபானந்தவாரியார் திருப்புகழ், கம்பராமாயணம் போன்றவற்றிலிருந்து பாடல்களை ஒரு மாதிரி ராகத்தோடு ஓங்கிச் சொல்லுவார். அதுவே கேட்பதற்கு அருமையாக இருக்கும்.ராமாயணமோ, பாரதமோ அந்தந்தப் பாத்திரமாகவே மாறி நடித்துக் காண்பிப்பார்.அவர் அடிக்கிற “கமெண்ட்”டுகளுக்கும், “பஞ்”சுகளுக்கும் (ராமன் பாணம் விட்டா, ஒண்ணு ரெண்டாகும். காமன் பாணம் விட்டா ரெண்டு ஒண்ணாகும்) கூட்டம் கடைசிவரை சிரித்துக் குலுங்கிக்கொண்டேதான் இருக்கும். புராணங்களிலிருந்து அவ்வப்போது கேள்விகள் கேட்டு பதில் சொல்லும் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுப்பார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரி என் எஸ் எஸ் தன்னார்வலராக மீனாட்சியம்மன் கோயில் நவராத்திரி விழாவிற்குச் சென்ற போது அவருடைய பேச்சுக்களை ஆடி வீதியில் ஒன்பது நாளும் கேட்க வாய்த்தது. கடைசி நாளன்று எல்லோருக்கும் நெற்றியில் திருநீறு பூசிவிட்டார்.
சிறு வயதில் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் “சுந்தர காண்டம்” கதாகாலட்சேப கேசட்(சித்த சிரிச்சாளாம்..சித்த அழுதாளாம்…சித்த த்யானம் பண்ணினாளாம்…என்பார் அசோகவனச் சீதை குறித்து) கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது.
கதாகாலட்சேபத்தின் முன்னோடியான தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர், அறுபத்துமூவர் சரித்திரத்தை அற்புதமாய் எடுத்துச்சொன்ன சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், நிறைய சொந்த சாகித்யங்களையும், நகைச்சுவையையும் நிரவிக் கதை சொன்ன ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச பாகவதர், தில்லைஸ்தானம் நரசிம்ம பாகவதர் முதலியோரும் மாங்குடியார் காலத்தில் கதை சொன்னவர்களே. கதா காலட்சேபம் என்பது இலக்கியச் சொற்பொழிவுகளானது கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ காலத்தில்தான். அ ச ஞானசம்பந்தன், நீதிபதி மு.மு. இஸ்மாயில் முதலியோர் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் செய்தனர். கிருஷ்ணப்ரேமி வைணவர் வரிசையில் ஒரு முக்கியமான கதைஞர். இன்றும் விகாசா ஹரி(கிருஷ்ணப்ரேமி யின் மருமகள். சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட். அந்தக்காலம் போலவே நிறையப் பாடிப் பேசுகிறார்), ரங்கன்ஜி(கிருஷ்ணப்ரேமியின் மகன்),வேளுக்குடி கிருஷ்ணன் என்று அவருடைய வழித்தோன்றல்கள். கதை சொல்லல் என்பது குறைவாகவும், “ஆத்ம விசாரம்” அதிகமாகவும் உள்ள வகையில் தற்காலத்தில் நொச்சூர் வெங்கட்ராமன் சிறந்த சொற்பொழிவுகளை தமிழ் மற்றும் மலையாளத்தில் அளித்துக்கொண்டிருக்கிறார்.
கிருஷ்ணன் சங்கரன்.
---------------------------------------------------
அன்புள்ள கிருஷ்ணன்,
கதாகாலக்ஷேபம் என்னும் கலை ஒருவகை நாட்டார்கலைதான். இத்தகைய கலைகள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுசூழலில், அதற்குரிய உளநிலைகளை ஒட்டி மட்டுமே வாழும். அப்பண்பாடும், உளநிலைகளும் அழிகையில் தானுமழியும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. கதாகாலக்ஷேப நிகழ்ச்சிகளை நான் இளமையில் நாகர்கோயிலில் என் அக்காவீட்டருகே உள்ள அக்ரஹாரத்தில் கேட்டிருக்கிறேன். அவற்றின் உள்ளடக்கம் புராணகதைகள். ஆனால் மொழி பிராமண வட்டாரவழக்கு. ஆகவே பிறருக்கு அதிலுள்ள நுட்பங்கள் பிடிகிடைக்காது, சுவைப்பதுமில்லை.
அது மட்டுமில்லாமல் அந்த உள்ளடக்கமும் இக்காலகட்டத்திற்குரியது அல்ல. முதல்விஷயம் அதில் பேசப்படும் பாவபக்தி என்பது இன்றைய காலகட்டத்திற்கு மிக அன்னியமானது. இன்று வயதானவர்களிலேயேகூட சிலர்மட்டுமே அதை ரசிக்கின்றார்கள். விசாகா ஹரியின் காலக்ஷேப நிகழ்ச்சிகளை கேட்டுள்ளேன். மிகச்செயற்கையான மிகைநடிப்பு கொண்டவை. அதேசமயம் கிருஷ்ணபிரேமியின் கதாகாலக்ஷேபத்தில் அவ்வப்போதாயினும் வரும் வேதாந்தக் கருத்துக்களோ, காவியச்சுவையோ ஒருபோதும் அமைவதுமில்லை
ஆனால் அனைத்தையும் விடமுக்கியமானதாகச் சொல்லவேண்டியது அவற்றிலுள்ள சாதிய உளநிலை. சென்றகாலகட்டத்தின் சாதியமேட்டிமைத்தனம் அவற்றில் உறைகிறது. இன்று கதாகாலக்ஷேபம் செய்பவர்களில்கூட அதுவே வெளிப்படுகிறது. குறிப்பாக நகைச்சுவைகளில். கீழ்நிலையிலுள்ள மக்கள் பகடி செய்யப்படுவது மிகச்சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது. நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு கதாகாலக்ஷேபநிகழ்ச்சியில் ‘வண்டிக்காரன்’ என்ற கதாபாத்திரம் மிக மோசமான சாதியப்பகடிக்கு ஆளாக்கப்படுவதைக் கேட்டு கொதித்தது நினைவுக்கு வருகிறது
கதாகாலக்ஷேபம் போன்ற கலைகள் சாதிய வட்டத்திற்குள் மதம், பக்தி என்றபேரில் சாதிமேட்டிமை என்னும் கீழ்மையை வெளிப்படுத்தும் வரை அதை கலை என கொள்ள முடியாது. சென்றகாலகட்டத்தின் கெடுமணத்துடன் நம் வீட்டு முற்றத்தில் கிடக்கும் குப்பை என்றே கொள்ளமுடியும்.
அது கலை என்றால் பிற கலைகளைப்போல நவீன ஜனநாயகப் பண்புநலன்களை தானும் கொள்ளவேண்டும். நவீன உலகின் மானுட அறத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நகைச்சுவை, நடிப்புத்திறன் , இசைத்திறன் ,அறிவுவெளிப்பாடு ஆகியவற்றுக்கும் மேலாக முதன்மையாக இதையே இக்கலையை மதிப்பிடும் அளவுகோலாக இன்று நாம் கொள்ளவேண்டும்
ஜெ