தொடங்கியது புத்தகக் கோலாகலம் 200+ அரங்குகள் | 2,00,000 தலைப்புகள் | 5,00,000 வாசகர்கள் | 1,00,000 மாணவர்கள்

தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் சென்னை புத்தகத் திருவிழா வெற்றிகரமாக 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆகஸ்ட் 18 முதல் 27 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. மாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடத்தப்படும் இவ்விழாவில், சுமார் ஒரு லட்சம் மாணவர்களைப் புத்தகக் காட்சிக்கு அழைத்துவரத் திட்டமிடப்பட்டிருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட அரங்குகள். அகில இந்திய அளவில் பதிப்பகங்கள் பங்குபெறுகின்றன. கோடிக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களுக்காகக் காத்திருக்கின்றன. அனுமதி இலவசம்!

இன்று காலை 10.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. புத்தகத் திருவிழாவைத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றுகிறார். பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் இருவரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

ஒரே பதிப்பகங்கள் வெவ்வேறு அரங்குகளில் திரும்பத் திரும்ப இடம்பெறுவதை இம்முறை தவிர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பேச்சாளர்கள், அரசியல் ஆளுமைகள், ஊடகவியலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காவல் துறையினர் என வெவ்வேறு துறையைச் சேர்ந்த ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள்.

விருதுகள்

2017, 2018-ல் வெளிவந்த சிறந்த 10 நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு, மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் என 10 பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன.

எப்போது செல்லலாம்?

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறும். 10% கழிவில் புத்தக வேட்டையாடலாம்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு கவிதை வாசிப்பு, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலிக் கூட்டம், இன்றைய சுற்றுச்சூழல் குறித்த உரை, சமூகம்-அரசியல்-சினிமா கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

‘இந்து தமிழ்’ அரங்கு: 21

புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ்’ அரங்கு வாசகர்களைப் பெரு மகிழ்வுடன் வரவேற்கிறது. அரங்கு எண்: 21.

சுப்பையா பாண்டியனின் ‘அறிவியல் ஆயிரம்’, ந.வினோத்குமாரின் ‘வான் மண் பெண்’, பாமயனின் ‘முன்னத்தி ஏர்’ போன்ற புதிய வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலின் ஐந்தாம் பதிப்பு வெளியாகியிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறுவர்களுக்கு மரியாதை

சிறுவர்கள், இளம் வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் பற்றிய அறிமுகக் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் புத்தகங்களுக்கான அரங்குகளைத் தனியே பிரித்தறியும் விதமாக பெயர்ப் பலகையில் அதற்கென பிரத்யேக நிறம் தரப்பட்டுள்ளது. சிறுவர் இலக்கியம் படைக்கும் இளம் எழுத்தாளர்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அவர்களுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

புத்தக வழிகாட்டி!

எந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை வாசகர்களுக்குச் சொல்வதற்காக சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் புத்தகம் எந்த அரங்கில் கிடைக்கும் என்பதைச் சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம். கூடவே, மூத்த வாசகர்கள் இளம் வாசகர்களுக்கு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதிய வெளியீடுகள்

2017, 2018-ல் வெளிவந்த புதிய புத்தகங்களை வாசகர்கள் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள, ஒவ்வொரு அரங்கிலும் தனியாகக் காட்சிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.

40 – 40

எழுத்தாளர்களும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளும் பங்கேற்கும் இந்தப் புத்தகக் காட்சியில், 40 வயதுக்குட்பட்ட கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 40-க்கும் மேற்பட்ட நூல்களை ஆய்வுசெய்கிறார்கள்.

சுத்தமான கழிப்பறை

சுகாதாரமற்ற கழிப்பறை என்பது ஒவ்வொரு புத்தகக் காட்சியின் முடிவிலும் எழும் முக்கியப் புகார். இம்முறை, கழிப்பறையைச் சுகாதாரமாகப் பராமரிப்பதற்காக சிறப்புக் கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

விமர்சனப் பலகை

வாசகர்கள் தாங்கள் படித்த புத்தகம் குறித்து பதிவுசெய்து காட்சிப்படுத்த புத்தகக் காட்சியில் ஒரு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. வாசகர்கள் தாங்கள் வாசித்த புத்தகம் குறித்து தங்கள் கருத்துகளை அதில் பதிவுசெய்யலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படிப்பட்ட புத்தக திருவிழா நடப்பது பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.இந்த புத்தக திருவிழா நல்ல முறையில் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.தினசரிகளில் மட்டும் செய்தியாக வருவதோ,விளம்பரம் செய்யப்படுவதோ ஓரளவு பயன் தரலாம்.ஆனால் அப்படிப்பட்ட விளம்பரங்களை விட தொலைக்காட்சிகளில் ஒரு 5 வினாடிகள் விளம்பரமாக வந்தாலே அது நல்ல பலனை கொடுக்கும்.நிறைய மக்களை அந்த விளம்பரம் சென்றடையும்பொழுது அந்த மக்களுக்கும் ஒரே இடத்தில் பலவகை புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்து மக்கள் பயனடைவார்கள்.புத்தக ஸ்டால் போட்டவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

புத்தக வடிவிலோ ,டிஜிட்டல் வடிவிலோ நம் படிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் . இதற்காக நம் வீட்டு குழந்தைகளை கண்டிப்பா புத்தக கண்காட்சிக்கு அழைத்து வரவேண்டும். குழந்தைகள் ஷாப்பிங் மால் , திரையரங்கம் , கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு பதிலாக ஒருதடவை இதுபோன்ற புத்தக கண்காட்சிக்கு சென்று வரலாம். புத்தக பிரியர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள் என்பதுகவலைக்குரிய செய்தி ,. 15 வருடங்களுக்கு முன் வாசிப்பை பழக்கமாக கொண்ட பலரும் இப்பொழுது வாசிப்பை நிறுத்திவிட்டனர், அதற்கு பலதரப்பட்ட காரணங்களை முன் வைக்கின்றனர், வேலை பளு , நேரமின்மை என்று ....இப்படி நாம் இருக்கும் பட்சத்தில் , அடுத்த தலைமுறைக்கு எப்படி நாம் வாசிப்பு திறனை கடத்துவது ?

----------------------------
சென்னை புத்தக திருவிழா வெற்றி பெற வாழ்த்துகள்.

படித்ததை பகிர்கிறேன்

எழுதியவர் : (20-Aug-18, 6:52 pm)
பார்வை : 60

மேலே