எழுத்தாளனின் பிரசவம்

ஒரு எழுத்தாளனின் பிரசவம் எப்படி நிகழும் தெரியுமா ? அது எப்போது நிகழும் தெரியுமா . திடீரென்று இதை பற்றி எழுத தோன்றி எழுத ஆரம்பித்துவிட்டேன் .ஒரு தாய் ஒரு இனிய கூடலில் அவள் அறியாத ஒரு தருணத்தில் கரு தரிப்பது போலவே ஒரு எழுத்தாளனும் கரு தரிக்கிறான் . எதோ ஒரு நாளில் எதோ ஒரு தலத்தில் எதோ ஒரு தருணத்தில் எதோ ஒரு இனிய சம்பவத்தின் மகிழ்ச்சியிலோ எதோ ஒரு துயர சம்பவத்திலோ அல்லது எதோ ஒரு அதிர்ச்சியிலோ அல்லது யாரென்று அறியாத ஒருவனின் துயரம் கண்டு எழும் மனித நேயத்தின்போதோ அல்லது எங்கோ நடக்கும் சமூகத்தின் நீதியில்லா அநீதிகளை காணும்போதோ இப்படி எதோ ஒரு தருணத்தில் அவனுக்குள் ஒரு எழுத்து ஒரு உணர்வாக கருவாகி அவனுக்குள் இருந்துகொள்கிறது .ஒரு தாய் ஒன்பது மாதமும் 7 நாட்களுமாய் அந்த கருவை சுமந்து அதற்காக பிடித்ததையும் பிடிக்காததையும் ஓன்று போல பாவித்து சாப்பிடும் அந்த அன்பு கலந்த குருதியின் சுவையிலும் அவள் தாய்மைச் சூத்திலும் சுகமாய் வளர்வதைப் போலவே அவனுக்குள்ளும் தரித்த எழுத்தின் அணுக்கள் அவனறியாமல் அவனுக்குள் வளர்ந்துகொண்டே இருக்கிறது . அது அவன் உண்ணும் உணவைச் சுவைத்து அல்ல அவன் உணர்வுகளை உண்டு அவன் எண்ணங்களை கொண்டு உரமூடப்பட்டு வளர்ந்து கொண்டே போகிறது.

யாருமறியா தருணத்தில் தாயின் மடி படிகள் தாண்டி யோனி வழி வெளி வர முண்டியடிக்கும் அந்த அழகிய தருணத்தில் பிரசவிக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தையைப் போல தான் எழுத்துக்களும் ஒரு இனிய தருணத்தில் அவனுமறியாமல் அவனுக்குள்ளிருந்து அவனையும் புறம் தள்ளி அவன் அகம் விட்டு புறம் வந்து விழுகிறது குருதி தெறிக்க அலறி வந்து விழும் அழகிய சிறு மழலையை போல .

பிரசவிக்கும் தாய்க்கு குழந்தை டாக்டர் கைபட்டு பின் செவிலியர் கைபட்டு தண்ணீரில் சுத்தப்படுத்தி வெள்ளைத்துணிகளில் பொதிந்து காட்டப்படும் குழந்தையின் முகம் காணும் சுகம் வேற எதிலும் வாராத இன்பம். அதுபோல தான் எழுத்தாளனின் எழுத்துக்கள் அனுபவ கரங்களில் பட்டை தீட்டப்பட்டு எங்கோ ஒரு ஆச்சு சாலையில் காகிதக்குவியலில் பொதியப்பட்டு அந்த எழுத்தாளனின் எழுத்துக்கள் ஒரு புத்தகமாய் வரும்போது அவன் கைகள் உணரும் சுகம் இருக்கிறதே அது சொல்லி மாளாது .

அது போன்ற ஒரு இனிய உணர்வுகளை என் கரங்களும் என்றேனும் பெறக்கூடும் . அப்போது இந்த எழுத்துக்கள் நிஜம் என்பதை நிச்சயமாய் என்னால் சொல்ல முடியும் . அதுவரை தூரத்து நட்சத்திரத்தை என்ன முயற்சிப்பதை போல ஏதேதோ எழுதிக்கொண்டிருக்கும் என் கரங்கள் .

எழுதியவர் : யாழினி வளன் (22-Aug-18, 5:30 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 128

மேலே