வஞ்சி உனைக் கொஞ்சயிலே

வளையோசை மெட்டுகளால் இளங்காள எனையடக்கி
மையிருட்டுக் கூந்தலில் மல்லிகையாய் தினஞ்சூடி
தேன்தமிழ் சொல்லெடுத்து தெம்மாங்கு பாடிவரும்
தேவதையே உனக்குள் உயிராகி கரைந்தேன்...

சக்கரையைத் தேடிவரும் கட்டெறும்பாய் என்நெஞ்சம்
அக்கரையில் நீநிற்பதை வாசம் பிடித்ததும்
கடலாடும் அலைகள்போல் கால்கள் நடந்தேன்
கரைமோதும் நுரையாகி உன்கைகளுக்குள் உடைந்தேன்...

கன்னம் வருடுமெழில் காவியத் தூரிகைகளால்
என்னுள்ளச் சிறகுகளில் வண்ணங்களைத் தீட்டியதும்
தென்னம் கீத்தாய் உன்மடியில் சரிந்தேன்
சின்னப் பிள்ளையாய் மதிமுகம் ரசித்தேன்...

ரெட்டைக்குழல் துப்பாக்கிக் கண்கள் சுட்டதும்
தூத்துக்குடி போராட்டக் களம்போல் வீழ்ந்திடாது
இதய அறைகளில் உன்சுவாசம் நிறைந்தோட
காதலோடு மீண்டும் மீண்டும் பிறந்தேன்...

உனையள்ளி பூக்களாய் கொஞ்சிடும் போதெல்லாம்
உலகமே உறைந்து கிடந்தாலும் அசைகின்றேன்
சுனையூற்றாய் இதழ்கள் சிந்தும் புன்னகையில்
எனைநிதம் மீனாக்கி நீந்தி நனைகின்றேன்...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 9:43 am)
பார்வை : 247

மேலே