திருநங்கையின் கடிதம்

எல்லோருமே சொல்கிறார்கள்

எங்களின் படைப்பு
இறைவன் செய்த சதியென்றும்
இதுவே உங்களின் விதியென்றும்!

முன்ஜென்ம பாவம் என்று சிலரும்
உன் பெற்றோரின் பாவக்கணக்கின் மிச்சம்
என்று பலரும்

என்ன தெரியும் உங்களுக்கு

ஆணென்ற ஆணவம் எங்களுக்கில்லை
பெண்ணென்ற அடக்குமுறையும் இருந்ததில்லை !

பாம்பிஞ்சிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததில்லை
பணத்திற்காக உறவுகளை கொன்றதில்லை
முகமூடி அணிந்து யாரிடமும் பழகுவதில்லை
சுய நலத்திற்காக யார் காலிலும் விழவில்லை
முன்னேற்றத்திற்காக யார் காலையும் வாரிவிடவும் இல்லை ...

ஆண்பால் பெண்பால் இல்லையெனினும்
பலர்பால் போற்றப்படுகிறவர்கள் நாங்கள்!

நடுநிலையில் பிறந்திருந்தாலும்
எல்லாவற்றிலும் நடுநிலையானவர்கள் !

அர்தநாரீஸ்வரனின் அர்த்தமுள்ள
அற்புத படைப்பு நாங்கள் !

"அஜக்கு" என்றும்
அரவாணி என்றும்
ஒம்போது என்றும்
உங்கள் இஷ்டத்துக்கு எங்களுக்கு பெயர்வைக்கிறீர்கள் !!

இதுகூட பரவாயில்லை

கைகளை அசைத்தும்
கண்களை சிமிட்டியும்
சமிக்கைகள் செய்வது
எங்களுக்கே ஏற்பட்ட சாபக்கேடு?

அடிப்படை உரிமைகளை
மனிதாபிமான மாண்புகளை
உரிய மரியாதையை
கொடுக்க மறுக்கும் நீங்கள்
முதலில் மனிதர்களாகவே இருக்க முடியாது
எப்படி எங்களை விட மேலானவர்களாக
இருக்க முடியும் ?

நாங்கள் மட்டும் தான் பிச்சை எடுக்குறோமா ?
நாங்கள் மட்டும் தான் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறோமா ?
அப்படியே வைத்து கொண்டாலும்
எங்களை அந்த சூழ்நிலைக்கு தள்ளியவர்களே
நீங்கள் தானே?

படிக்க படிப்பு
இருக்க இடம்
பிழைப்புக்கு ஒரு வேலை
நீங்கள் கொடுத்து எங்களை ஆதரித்திருந்தால்
உங்களை விட மேலானவர்களாக
நிச்சயம் எங்களால் வாழ முடியும்!

எங்களை கேலி செய்வதை விட்டுவிட்டு
உங்களுக்குள் அர்த்தமுள்ள
கேள்விகளை கேட்டு பாருங்கள்!

உங்கள் வீட்டில் இப்படியொரு
உயிர் இருந்தால்
அவர்களையும் இப்படி தான் பாப்பீங்களா?

இறைவன் எங்களை படைத்து
உங்களுக்கு பாடம் சொல்கிறான் !
பாவம் தேடாதீர்கள்...

திருநங்கையாய் பிறத்தல் சாபம் இல்லை!

இறைவனின் படைப்பில்

கை கால் ஊனமுற்று பிறக்கும் உயிர்களைப்போல்
நாங்களும் சிறிய குறையுடன் பிறந்தவர்கள் தான் !

இனியாவது எங்களையும் நேசியுங்கள் ?!

எழுதியவர் : குணா (24-Aug-18, 10:08 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 118

மேலே