மலராத மொட்டுகள்
என்னைத் தொடுவதென்றால்
உனக்கு மட்டும் ஏன்
அவ்வளவு அருவறுப்பு
என்னைக் காணும் போது
உனக்கு மட்டும் ஏன்
உள்ளுக்குள் அவ்வளவு நகைப்பு
இதோ...!
இங்குதான்
நீயும் பிறந்தாய்
நானும் பிறந்தேன்
மாதங்களில்
நம்மிருவருக்குமே பத்துதான்...
நீ விழுந்த
அதே கருவறையில் தானே
நானும் விழுந்தேன்
குழந்தையாய் இருந்த போது
உனக்கும் தாய் மடி
எனக்கும் தாய் மடி
தாலாட்ட மறந்ததில்லை
ஒரே விரல்பிடித்து
நாம் ஊர்ந்து சென்ற
வீதிகளும்...
உனக்கும் எனக்கும்
ஒரே இருக்கைதந்த
பள்ளிகளும்
இன்று...
என்னை மட்டும் ஏன்
தள்ளி வைத்து பார்க்கிறது...!
தவங்கிடந்து பெற்ற
தாய் கூட
என்னை
தவறென்று ஒதுக்கியது ஏன்..?
தந்தை கண்டுவிட்டால்
தகாத வார்த்தைகள் சொல்லி
என்னை
தள்ளி வைப்பது ஏன்..?
உறவுகள் கூட
என்னை
தங்களின் குலத்தில் பிறந்த
பாவமாய் பார்ப்பது ஏன்..?
இப்போதெல்லாம்
இந்த உலகத்தின் மத்தியில்
நான் மட்டும்
தனிமையில் கிடக்கிறேன்
என்னைப் பற்றி
அறிந்து கொள்ள
எனக்குள்ளே தொடுத்துக்கொண்டேன்
கேள்விக்கு கணைகளை...
இப்பொழுதுதான்
எனக்கு விளங்கியது
நான்...
இந்த பூமியில் பிறந்த
புதுப்பிறவி என்று
ஓடி வந்து
ஒருவரிடம் சொன்னேன்
நான் இவ்வுலகின்
எட்டாவது அதிசயமென்று...
என்னை
அவரது விழிகள்
ஏற இறங்கப் பார்த்துச் சொன்னது
இல்லை இல்லை
நீ எட்டாவது அல்ல
ஒன்பதாவது என்று...!
வேதனையில் கிடந்தவனுக்கு
அவர் சொன்ன பதில்
வேலாக இறங்கியது
நெஞ்சில்...
எனது துன்பம்
எனதின்பம்
இரண்டிலும் பங்குகொள்ள
எனக்கென்று யாருமில்லை..
நிலவும்
சூரியனையும் போல
எனது பயணமும்
தனிமையில் தொடர்ந்தது...
ஆயிரம்
விண்மீன்கள்
அருகில் இருப்பதுபோல்
தோன்றலாம்...
ஆனால்
அவையெல்லாம்
நிலவுக்குத் துணையில்லை
எனது உடலில்
எனது மனதில்
எனது குணத்தில்
மாற்றங்கள் எழுவதற்கு
நானா காரணம்...!
அறிவியல் செய்த
பாவமல்லவா...
மனிதனின்
ஆறாவது அறிவின்
துரோகமல்லவா...
ஆணாய்ப் பிறந்து
பெண்ணாவதும்
பெண்ணாய்ப் பிறந்து
ஆணாவதும்...
வீணாய்ப் போன
காலத்தின்
சூழ்ச்சியய்யா...!
என்னை குறை சொல்லும்
மனிதமே கேள்...
இனிப் பெண்ணை
புவென்றுரைக்கும்
பிதற்றலை நிறுத்திவிட்டு
உன் அறிவை
திறந்துகொள்
அனைத்தையும் உணர்ந்துகொள்
மலரைப் பெண்ணென்று
பெருமையாய்
நீ சொன்னால்...
அடுத்தொரு செடி இங்கே
அவதரிப்பதென்ன..?
இப்போது சொல்
மகரந்தச் சேர்க்கையென்ற
மகத்துவம் பொய்தானே...
உன்னால்
மலரில் ஈரினம்
பிரிக்கத் தெரிந்தால்
அப்போது வா
பூவையரைப் பூவென்று
நானும் அழைக்கிறேன்
மலரில்
ஆணென்றும் பெண்ணென்றும்
அடையாளம் எங்கு கண்டாய்...
மலரென்றால்
நாங்கள் தான்
மறவாதே மானிடா
அடையாளம் அறியாத
மலர் நாங்கள்
ஈரினம் புரியாத
புதிர் நாங்கள்
மலராத தெரியாத
மொட்டாக
நாங்கள்
உதிரும் வரையிலே
உயிர் வளர்ப்போம்
உங்களுக்குத் தூரமாக
பூமிக்குப் பாரமாக
எங்களை எண்ணாதே...!
அஃறிணை பாலுக்கு
அடுத்தாவது
எங்களுக்கென்றொரு
இடம் ஒதுக்கு
சிந்தனை செய்யடா மனிதா
நீ...
சிந்தனை செய்
ஆணும் ஆணும்
கலந்த பிறந்தோம்
நாங்கள்...
பெண்ணும் பெண்ணும்
இணைந்தா பிறந்தோம்
உன்னைப் போல்தானே
ஒருதுளிக் குடுவையில்
உருவான
உயிர் நாங்கள்.