முத்தங்கள்

முத்தங்கள் . . .

முத்தங்கள் பெரும்பாலும்
சைவத்தில் சேருவதில்லை
அசைவத்திலும் கலப்பதில்லை
இரண்டுக்கும் இடையில் நிற்கும் . . .

முத்தங்கள் ஆண்பாலும் இல்லை
பெண்பாலும் இல்லை
அனைதிற்கும் பொதுவாகவே
தன்னை நிலை நிறுத்தி கொள்ளும் . . .

அதே போல் எல்லா முத்தங்களையும்
காமத்துடன் தொடர்பு படுத்திவிட முடியாது
மழலைக்கு
அன்னைக்கு
மலருக்கு என
தொடங்கி முடியும்
இடம் பொருளை வைத்து தன்னை மாற்றி கொள்ளும . . .

பொதுவாக அனைத்து முத்தங்களுமே
உதட்டில் இருந்துதான் தொடங்கும்
விழிகளால்,
தொலைபேசி வாயிலாய்,
குறுந்தகவல்களால்,
பரிமாரிகொள்ளும் முத்தங்களை தவிர . . .

ஆனால் முடியும் இடத்திற்குதான்
வரையறை இல்லை
சில தருணங்களில் தொடங்கிய இடத்திலும்
முடியும் . . .

முத்தங்களுக்கு கால்கள்தான் இல்லை
ஆயினும் அது சிறகுகள் இன்றியும்
காற்றில் மிதக்கும் தன்மையுடையது . . .

முத்தங்களில் பெரும்பாலும்
போலிகள் இல்லை
விலைமாந்தர் போன்ற
விதிவிலக்குகள் தவிர்ப்பதும்
தேவைபடும் . . .

முத்தங்கள்
சப்தத்துடனோ
அமைதியுடனோ வெளிப்படும் . . .
அது சூழலையும்
சுற்றுபுறத்தையும் பொருத்தது
அதனால் முதங்கள்
சுதந்திரமானவை என்றும் கூறிவிட இயலாது . . .

முத்தங்கள்
உயர்திணை அக்றிணை என்று
பேதங்கள் பார்ப்பதில்லை
அனைத்திலும் பதியும் தன்மை உடையது . . .

முத்தங்கள் பெரும்பாலும்
பச்சோந்தி இனத்தை
சார்ந்ததாகவே காணப்படும்
சேரும் இடத்திற்கும்
தொடங்கும் இடத்திற்கும் ஏற்ப
தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் . . .

முத்தங்கள்
வயது வித்தியாசமோ
நிற வேற்றுமையோ
மத பாகுபாடோ
ஜாதி உயர்வு தாழ்வோ
எதையும் பார்ப்பதில்லை
அன்பை மட்டுமே சுமந்து செல்லும்
சில நேரங்களில் மட்டும்
அழுகையையும் சேர்த்து கொள்ளும் . . .

முத்தங்களுக்கு ஆயுள் குறைவு
ஆயினும் பூமியின் ஆதி தொடங்கி
அந்தம் வரையிலும் வாழ்ந்து கொண்டேதான்
இருக்கும்
அதிகமாய் தொடர்ச்சியாய்
வேறு வேறு இடங்களில்
தன் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்
தன்மையுடையது . . .

முத்தங்கள் என்பது
அடிப்படை தேவையோ
அத்தியாவசிய தேவையோ
சட்டப்படி தேவையோ என
எதுவும் இல்லா சூழலிலும்
அனைவரையும் அனைத்தையும்
சேர்ந்தேதான் வாழ்கிறது . . .

முத்தங்கள்
வெறும் சப்தங்களோ
உதடுகளின் படிமங்களோ மட்டுமல்ல
அது உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
சுமந்து செல்லும் உருவமில்லா
உலகத்தின் மிக பெரிய அதிசயம் . . .

தயவு செய்து முத்தங்களை யாரும்
தட்டி விடாதீர்கள்
அதற்கு கீழே விழுந்து உடைய தெரியாது
யாரும்
விருப்பமின்றி பரிமாறி கொள்ளாதீர்கள்
அதற்கு போலிகளை கண்டரியும்
சாமார்த்தியம் இல்லை
அனைத்தையும் விட மிகவும் கவனம்
தயவு செய்து முத்தங்களை யாரும்
கொலை செய்து விடாதீர்கள்
அதற்கு சாகவும் தெரியாது . . .
சாகும் வழியும் தெரியாது . . .

எழுதியவர் : ந.சத்யா (31-Aug-18, 1:09 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : muthangal
பார்வை : 243

மேலே