அரசியல்வாதியாகிப் பார்

==========================
வாக்காளன் தெய்வமாவான்
௦௦
கடத்தல்காரன் தோழனாவான்
௦௦
கொலைகாரன் குடும்ப அங்கத்தவனாவான்
௦௦
எதிர்கட்சிக்காரன் துரோகியாவான்
௦௦
ஊழல் நீ ஆட ஊஞ்சலாகும்
௦௦
வஞ்சகம் வசமாகும்
௦௦
பொய்கள் தேவ வாக்காகும்
௦௦
ஒலிவாங்கி உயிராகும்
௦௦
உன்னைச் சுற்றி எப்போதும்
வெட்டிக் கூட்டம் இருக்கும்
௦௦
வாக்குறுதி வழங்குவதில்
உன்னை மிஞ்ச எவனும் இல்லை
என்பதை நீயே உணர்வாய் .
௦௦
நன்றி மறப்பாய்
௦௦
சுயநலம் விரிவடைய
பொதுநலம் பேசுவாய்
௦௦
பழைய சோற்றுக்கே
வகையற்ற நீ
ஐந்து நட்சத்திர ஹோட்டலில்
சிற்றுன்றிக் கேட்பாய்.
௦௦
செய்தித்தாள்களில்
பட்டம் செய்து பறக்கவிடவே
படாது பட்ட நீ
கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களில்
அதிதியாவாய்.
௦௦
மழைக்கும் பள்ளிக்கூடப் பக்கம்
ஒதுங்கா நீ
பள்ளிக்கூடம் திறந்து வைப்பாய்
௦௦
வங்கியில் கடனெடுக்க
நாயாய் அலைந்த உனக்கும்
சுவிஸ் வங்கியில்
மறைமுக கணக்கு வரும்.
௦௦
அரச பேரூந்துகளில்
டிக்கெட் இன்றிப் பயணித்த நீ
ஊர் பணத்தில்
சொகுசு விமானத்தில்
குடும்பத்துடன் உலகம் சுற்றுவாய்
௦௦
மாட்டுவண்டிகூட
இல்லாதிருந்த உன் வாசலில்
லம்போர்கினியும் பி எம் டபிள்யூவும்
ஊர்வலம் செல்லும்
௦௦
வீட்டு வாடகைக்கட்ட வழியின்றி
தலைமறைவாகித் திரிந்த
உனக்கும் மாளிகை வரும்
௦௦
செத்தா புதைக்க நாதியற்றுக் கிடந்த
உனக்கு அரச மரியாதை கிடைக்கும்.
௦௦
உன் வீட்டாரின்
ஆதரவு கூட இருக்காது
பொதுமக்கள் ஆதரவுண்டு என்றுப்
பீத்திக் கொள்வாய்
௦௦
குந்துவதற்கு பலகைக்கட்டைக் கூட
இல்லாதிருந்த உனக்கும்
சிம்மாசனம் வரும்
௦௦
சின்னச்சின்ன திருடர்களுக்கு
பெரிய தண்டணை சட்டம்
இயற்றி வைப்பாய்.
௦௦
பெரிய திருடர்களுடன் கைகோர்த்து
நாற்காலியை உறுதி செய்வாய்.
௦௦
உன்னையும் உன் கட்சியையும்
நம்பி வாக்களித்தவனுக்கு
அல்வா கொடுத்துவிட்டு
பதவிக்காய் பச்சோந்தியாய் மாறுவாய்.
௦௦
கொள்ளை அடிப்பது மட்டுமே
கொள்கையாக இருக்கும் என்றாலும்
கட்சிக் கொள்கையின் பிரகாரம்
என்று எல்லா மேடைகளிலும் முழங்குவாய்
௦௦
நுழையும் முன்பு பிச்சைக்காரனிடமே
பிச்சைக் கேட்டிருக்கும் நீ
நுழைந்ததுமே கோடிகளுக்கு அதிபதியாவாய்
௦௦
மானம் மரியாதை ரோசம்
வெட்கம் மனசாட்சி என்று
எல்லாம் தூக்கி எரி.
௦௦
வெள்ளை ஆடை அணி.
அரசியல்வாதியாகிப்பார்
மொத்தத்தில் நீமட்டும் வாழ்வாய்
௦௦