பசியாற்றும் பள்ளிக்கூடம்

அரசு பள்ளியில் சேர
ஆவலாக
சென்ற மாணவன்
தினமும் சோறு
கிடைக்கும்
என்று !

பட்டினி அறியாது
பால் அதனை உண்டு
விட்டு
உறக்கத்தில் இருந்த
குழந்தைக்கு
தெரியுமா
அன்னையவள்
உண்ணாது உதிரத்தை
உணவாக்கியது

ஈ எறும்பு
கடிக்காமல்
முப்பொழுதும்
காத்திருந்தாள் தன் உறக்கம்
காணாது

பால் மறந்த பருவத்திலே
வீல் என்று அழும்போது
துடிதுடித்து
போவாள்
ஏன் என்று அறியாது


ஆக்கி வச்ச சோறு
தீர்ந்து விடும்
என்று
உனக்கு
ஒரு வாய்
தந்திடுவாள்
தண்ணீரை குடித்து விட்டு
தானும் படுத்துக் கொள்வாள்
உன் அருகே
என்ன செய்ய கட்டினவன்
கையால
கிட்டினது அவ்வளவுதான்

மூணு வயசு
வருவதற்குள்
பால்வாடி அனுப்பி வைத்தேன்
பாலும் பயிறும் கிடைக்கும் என்று
அரசு பள்ளி அனுமதிக்கு
ஆசிரியர்கள்
வீடேறி
வந்த உடன்
சேர்த்து விட்டேன்
மதிய சோறு கிடைக்கும் என்று
சோத்துக்காக போனாலும்
சுகமாக வாழ
நாளெழுத்து
படித்து வந்தாய்
பெருமிதம் கொண்டோமே
நாம் பெற்ற
துயர் இங்கு
வேறெவரும் பெற்றிடாத
பேரறிவு
தந்திடவே
ஆசிரியர் ஆனாயோ...

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 11:10 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 3261

மேலே