திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 2

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா விளம்)

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன். பாடல் 2

பொருளுரை:

அஷ்டகுல பர்வதங்களும் ஒலிசிறந்த தரிசு மணியாகவும், அகிலலோகங்களையும் உள்ளே அகப்படுத்தும் தன்மையவாயும், பெரிதாயும் உள்ள திருச்சிலம்பினைத் தரித்துள்ளவன்.

நூபுரம் என்றது நுபுரம் எனக் குறுகி நின்றது.

விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரச மரத்தினீழலில் அவனுடன் இருந்து விரும்பி யுள்ள முப்புரங்களைச் சங்கரித்துள்ளவன்.

அண்ணி எனற் பாலது அணி என இடைக்குறை யாய் நின்றது.

தேவர்கள் கற்பகப் பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப்படுகின்ற தேவேந்திரனுடைய எணு என்றது ஏணு என நீண்டது.

புரந்தரன் என்றது புரத்தரன் என வலித்து நின்றது.

இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை சூழ்ந்த சீகாழிப்பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன்.

தேவேந்திரன் மூங்கில் வழியாக வந்து பூசித்ததால் வேணுபுரம் என்னும் பெயர் பெற்றது.

பொழிப்புரை:

சிலம்பினைத் தரித்துள்ளவரும், முப்புரத்தை எரித்தவரும், தேவேந்திரனுடைய சோலை சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவர் எனக் கூட்டி உரை கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-18, 9:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 212

மேலே