சுய முகவரி

சுய முகவரி
மணலும் கவி பாடும் மணவை
எமது ஊர்
மணல் யாம் விளையாடும் தருவை
கடற்கரையும் கட்டுமரப்பாயும்
எங்கள் படுக்கை

வண்ணத்து பூச்சிகளை
வலைகொண்டு பிடித்தோம்
தும்பிகளை துடைப்பானால்
அடித்தோம்

சூரிய உதயம் காண
சுற்றுலா பயணிகள் வருகை
உதயத்தின் எதிர்
உறங்கி முழிப்பதே எம் வாழ்க்கை

உடன் பிறந்த மங்கையர்
மணமேடை காணாது
தடையாக இருந்த வறுமை

தாயின் கண்ணீர்
வறுமை உடைக்கும்
வலிமை கொண்டது என்றுணர்ந்தபோது
வயது பதினெட்டு

வறுமை துரத்தலில்
வடநாடு தந்த வேலை
வயிற்றிற்கு சோறிட்டது

அறிமுகமில்லா முகங்கள்
அர்த்தமற்ற கைகுலுக்கல்கள்
தொலைந்துபோன தொடர்ந்த நட்புக்கள்

இயற்கை ஆற்றலை அறியாமலே
இளமை கழிந்தது

வந்த காதலெல்லாம்
சொந்தம் கருதி
சோகமாய் போனது

விரக்தியின் விளிம்போடு
பலமுறை கைகுலுக்கியிருக்கிறேன்
ஒருநாளும் விருந்துக்குமட்டும்
அழைத்ததில்லை

இமை நீர் பனிக்க பனிக்க
இதயம் துண்டாய் உடைந்தது

வறுமையின் துரத்தலில்
வசந்த வாழ்க்கை கசந்தது

தங்கையின் கழுத்தில் தாலி
தவித்த வாய்க்கு
தடாக நீராய்

நெஞ்சின் நெருஞ்சிமுட்கள்
ரோஜாவாய் மலர்ந்தன

நாட்கள் ஓடிய ஓட்டத்தில்
நான் யாரென்று அறிய
நாற்பது வயது கடந்தது

எழுத்து தளம்
எதேச்சேயாய் அறிமுகமானது

விழைவு
காலத்தின் நீட்சியில்
கரைந்துபோனே என் கனவுகள்
இன்று கவிதை வடிவில்

எழுதியவர் : இளவல் (8-Sep-18, 4:57 pm)
Tanglish : suya mugavari
பார்வை : 116

மேலே