வஞ்சி உனைக் கொஞ்சயிலே

எழில் உருவங்கொண்டு கண்களை பறித்தாய்
தேன் இசையாக காதினுள் நுழைந்தாய்
முக்கனி தரும் சுவையினை தந்தாய்
குளிர் தென்றலாய் தேகத்தை வருடினாய்

மலர்ந்த முகத்துடன் வெட்கம் கொண்டாய்
மெல்லிய இடையுடன் மந்திர நடையிட்டாய்
வான்மழை சிந்தும் கார்மேகம் போல
செந்தமிழில் பேசி தேன்மழை பொழிந்தாய்

கூரிய விழிகளால் கைது செய்தாய்
குறுநகை புரிந்து மயங்க வைத்தாய்
கண்களில் கவிதைகளில் நீயே நிறைந்தாய்
கட்டழகு மேனியால் கவர்ந்து சென்றாய்

வான்நிலவும் பின்னால் வரும் - உன்
மான்விழிகள் சொல் கேட்டு - இதில்
நான்மட்டும் என்ன செய்வேன்? - உன்
மடியினில் என் தலை சாய்த்தேன்

உன் இதழ் சிந்தும் புன்னகை கண்டு
என் மனம் காதலில் ஏங்குதே!
தினமும் கனவில் உன்னைக் கொஞ்ச
எந்தன் இரவுகள் முடியாமல் நீளுதே!
---------------------------
கோ.வேல்பாண்டியன்

எழுதியவர் : கோ.வேல்பாண்டியன் (9-Sep-18, 1:31 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 145

மேலே