ஆதலினால் காத்திரு

கடிகாரத்தை பரிசளிக்கும்
உன் சூசகம் அறிவேன்.

காலதாமதங்களுக்கு
கடிகாரமெனில்
என்
காலந்தவறாத வருகைகளுக்கு
பரிசாய்
என்ன தருவாய்

எனக்கான
உன் காத்திருப்பின்
இடைவெளியை
நிரப்பிக்கொண்டிருக்கும்
என் காதலை
கவனிக்கவில்லையா நீ

நீதானே சொல்வாய்
காத்திருத்தலில்
உயிர்த்திருக்கிறது
உன் காதலென்று

நிமிடங்களும் மணிகளும்
கால நெடுங்கணக்கின்
சிறு பின்னங்கள்

உன்னை அடைதலுக்கான
என் காத்திருப்பு
யுகங்கள் பல கடந்ததென்பதனை
அறிவாயா

ஆதலினால் காத்திரு.

- சுப்ரமண்ய செல்வா -

எழுதியவர் : சுப்ரமண்ய செல்வா (9-Sep-18, 6:03 pm)
சேர்த்தது : சுப்ரமண்ய செல்வா
Tanglish : aadalinaal kaathiru
பார்வை : 433

மேலே