புணர்ப் படு பொருள்- பரத்தை
அகிற்புகையும்
அகல் ஒளியும் என்னைக்
கலங்கடிக்க
மலர்மஞ்சம் சுமக்க நீ
இடைச் சுருக்கிக்
கால்நீட்டி
ஒய்யாரப் பார்வையுடன்
எனை நோக்கினாய்.....
வேல் குத்தி
நின்றதென் நெஞ்சம்....
கயலென உன்
விழிகள் விளையாட
மேலன்னமொட்டிய
நாவுடன்
நான் நின்றேன்..!
உன்
சிரிப்பை நான்
கூறுவதெங்கனம்???
வெட்டிய மின்னலால்
அவிழ்ந்த தாழம்பூவின்
வாசத்தில்
வண்டுகள் தேன்
குடித்துக் குடல் நிரப்ப
தூவானத்தின்
கருமேகத்துக்குக்
கைக் கூப்புமே...!
அது பொல நான்
உன் இதழ்களுக்கு
நன்றி சொன்னேன்.....
இருட்டிய பின்னிரவுகளின்
மோனம்
கலைக்கத் தவளையின்
தாளக்கூத்தில்
தன் கண்ணீர் கலக்கும்
ஒரு வரவிலா
விபச்சாரியின்
மறுநாள் பசியெனும்
கேள்விக்குக் கிட்டாத
பதிலாய்
என் கண்களில்
உனைப் பற்றிய ஐயம்...!
விதவையாம்!
விரகமாம்!
உணர்ச்சி மறத்துப் போன
விறகாம்!
நேற்றைக்குப் பூஜித்த
மலராம்!
மலடாம்!
தகிக்கக் கூட
சக்தி இல்லாத கோடை நேரத்து
மாலையாம்!
வறண்டு போன
பாலையாம்!
வற்றிப் போன
வயிறாம்!
படர இயலாது கால் மிதியாகிடும்
கொடியாம்..!
பட்டேத் தேய்ந்தப் படியாம்!
ஐயகோ
உன் இரவுகள்
இருண்டு மட்டுமா போனது..!
தனிமையில் மருண்டும்!
துணையின்றி வறண்டும்....!
திண்ணையில்
தேன்கிண்ணம்!
வாசலில்
மதுக்கிண்ணம்!
பசியுடன்
பரத்தைப் பூட்டிய வீட்டுக்குள்!
உன் இடை!
தலை சாய்ந்த
கதிரறுத்து
உதிர் உதிராய்
நெல்லெடுத்து
பக்குவமாய் பிரித்து விட்டு,
தவிட்டை தண்ணீரிலிட்டு
தன் பசுவுக்கு வைத்து
அவ்வரிசியில் சோறாக்கி
பசும்பாலைக் காய்ச்சி
சர்க்கரையிட்டு
சோறு போட்டு
கடைந்து தெருநாய்க்கு
வைத்தாளாம்!
அது
உண்டு விட்டு
வள்ளெனக் குரைத்தது...
நீ சுகித்ததில்லை!...
உன்னைச் சுகித்தன
தெரு நாய்கள்.........!