செங்கீரையும் சிறுதேரும்
செங்கீரையும் சிறுதேரும்
அத்தனை கடவுளும் அடிமுதல் நுனிவரை
அவளைக் காக்க என்று நிதம் வேண்ட
அரைஞான் அரைமணி மட்டுமே யணிந்து
ஆடட்டும் செங்கீரைப் பாடட்டும் பைந்தமிழென
சோலைக் குயிலையும் மாலைக் கதிரையும்
சாலங் காட்டிட தாலே தாலேலோவென
தழைக்கும் பேரன்பு வெள்ளத்தில் திளைத்து
தெய்வ மகளேயென சப்பாணிக் கொட்டியும்
கன்னல்தன்னை கனிவாயில் கொண்ட
சின்னநல் வாயின் சிறுமுத்தம் பெற்றிட
நீட்டிய கைகளில் ஆட்டி யுடம்பினை
மாட்டிடும் மாலையாய் வருகை புரிந்தும்
வளர்வது மட்டுமே தளிரதன் பாங்கென
வெளிறிடும் வானத்தில் அம்புலியைக் காட்டி
சிறுகை கொண்டு மண்ணை அளாவியவள்
சீராய்க் கட்டிடும் சிற்றிலைப் படமெடுத்தும்
நாக்கினை மடித்து உதட்டினைப் பிதுக்கி
வாக்கினிற் செய்யும் சிறுபறைச் சத்தமுடன்
சக்கரம் கொண்ட இருக்கையில் அமர்ந்து
சுக்கிரன் போலே சிறுதேர் நகர்ந்திடும்.
தா. ஜோசப் ஜூலியஸ்,