கலைஞருக்கு ஓர் கவிதை

முத்தமிழ் வணங்கி-கவி
முரசு கொட்டி முழங்குகிறேன்... இலக்கியத்தில் இளமைக்கண்டு இலக்கண வளமும் கண்டு... இந்தியத்தாயின் பாதமென இருக்குமிந்த இனிய தமிழ் நாடுதனிலே... திருக்குவளை தந்த தமிழ் நிரம்பிய மனிதக் குவளை! பாடுகிறேன் உம் புகழை!! அஞ்சுகம் அளித்தாள் அன்றோ கொடையென அன்னைத் தமிழுக்கு... எண்ணங்களை எழுத்துக்களால் வண்ணமிட்டு வரையப்பட்ட கவியோடு... நாடகத்தை நேசித்தாய்... நற்றமிழிலையே பூசித்தாய்... அழகிரி சாமியின் அக்குரலோ அரசியல் உம்மை அழைக்கவே! அனைத்து மாணவர் அமைப்பு அமைத்தாய்... மூச்சில் கலந்த முத்தமிழை முரசொலியென பாய்ச்சினாய்... கள்ளக்குடி பெயர்மாற்றம்... கம்பீரமென உயர்ந்த உம் பெயர் ஏற்றம்... அண்ணாவின் அன்பிற்கு அடிமையானாய் நீ! தந்தை பெரியாரின் சிந்தனைகளால் செதுக்கப்பட்ட சிற்பமானாய்... திரைத்துறையில் வசனம் தெளித்து... நாடகத்துறையில் நாகரீகம் கண்டு... வரலாற்று புனை நூல்கள்-உம் வாசிப்பின் நேசிப்பாம்... கட்டுரை எழுதி-இராதாவால் கலைஞரென பெயர்கொண்டு... புதினம் படைத்து... சிறுகதைகள் சிந்தி... குறளுக்கு உரையும் குறளோவியமும்... நெஞ்சிற்கும் நீதிகேட்டு நெடுந்தூர இலக்கிய பயணம்... குளித்தலையில் குதித்த அரசியல் பயணம்... திருவாரூர் வரை தோல்வியற்று... திராவிடத்தலைவனாய்... தெள்ளுதமிழ் கலைஞனாய்... ஐம்முறை அரசு கண்டு அரியணையில் அவதரித்தாய்... மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியுமென நெருக்கடி நிலை தமிழகத்தை நெருங்கிடாமல் அரணமைத்தாய்... வார்த்தைக்கு பொட்டு வைத்து வாழ்வளித்தாய் விதவைகளுக்கு! திருநங்கையெனும் திருப்பெயரும்-மாற்று திறனாளியெனும் ஓர் பெயரும் திருத்தப்பட்ட சமூகத்தின் திறவுகோல்... தமிழ்மறையின் தலைவன் திருவள்ளுவனின்.... திருவுருவை தென்கோடியில் நிறுவி நிறுவப்பட்டாய் மக்கள் மனதில்... கடமை யாற்றி... கரைந்த ஆதவனோடு மறைந்தாய் ஆதித்தமிழனே! உறைந்தாய் அகிலத்தமிழர் நெஞ்சத்தில்...

எழுதியவர் : நடராஜன் அச்சுமல்லையன் (25-Sep-18, 11:41 pm)
பார்வை : 52

மேலே