இயற்கையில் நான் ரசித்த போர் காட்சி

பாலைவன சமவெளியைத் தாக்கியது
திடீரென ஒரு புயல் காற்று,
கண்ணிமைக்கும் நேரத்தில்
சுற்றிலும் சிவந்த மண் துகள்கள்,
புகைமண்டலமாய் வான் நோக்கி எழுதிட,
வானும் சிவந்தது, போர்க்களமானது ;
வருணன் என்ன நினைத்தானோ,
நொடிப்பொழுதில் வான்முட்ட
அலையலையாய் வந்து மோதியது
கார்மேகக் கூட்டம், வானத்தை முற்றகையிடும்
பெரும் கரிகளின் கூட்டங்கள்போல்,
அவற்றின் உரசலில் எழுந்த பெரும் இரைச்சல்
பேரிடியாக மாற அனற்பொறிகளானதே உரசல்
கொடிமின்னலாய் இடியுடன் மண்ணிலிறங்கி
பெரும் மழையும் கொட்டியது -சிவந்த மண் கரைந்தது
இப்போது வானத்தின் சிவப்பு மண்ணிலிறங்க
ரத்தம்போல் ஆறென ஓடியது பாலைவன சமவெளிநிரப்பி

இதென்ன மண்ணிற்கும் விண்ணிற்கும் இடையே
நடந்த போரோ .......................

புயல் நின்றது , மழையும் காற்றும்
மீண்டும் பாலையில் மயான அமைதி

விந்தைத்தரும் இயற்கையின் போரும் அமைதியும்
என்ற நாடகம்
கண்டேன், மிரண்டேன், பின்னே வியந்தேன்



;

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Sep-18, 12:05 pm)
பார்வை : 488

மேலே